நுனி ஆக்குத் திசுவிலிருந்து நிலைத் திசுக்கள் தோன்றுகின்றன. இவை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ செல்பகுப்பு பண்பினை இழந்துவிடுகின்றன. இது இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
1. எளிய நிலைத் திசுக்கள் (Simple permanent tissues)
2. கூட்டு நிலைத்திசுக்கள் (Complex permanent tissues)
ஒரு குறிப்பிட்ட பணியினை மேற்கொள்ளப் பல்வேறு வகையான
செல்களின் ஒரு கூட்டமைப்பே கூட்டுத்திசு எனப்படும். இது இரு வகைப்படும். அவை சைலம் மற்றும் ஃபுளோயம்.
வாஸ்குலத் தாவரங்களில் நீரைக் கடத்துகின்ற முதன்மையான திசு சைலம் ஆகும். சைலம் என்ற சொல்லை C. நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். இது 'சைலோஸ் = கட்டை' (Gk. Xylos - wood) என்ற கிரேக்கச் சொல் ஆகும். புரோகேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் முதலாம் நிலை சைலம் என்றும் வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் இரண்டாம் நிலை சைலம் என்றும் அழைக்கப்படுகின்றன. முதன் நிலை உடலில் முதலில் உருவாகும் சைலக்கூறுகள் புரோட்டோ சைலம் என்றும் பின்னர் உருவாகும் சைலக் கூறுகள் மெட்டாசைலம் என்றும் அழைக்கப்படும்.
புரோட்டோசைலக் கூறுகள் வெளிப்புறத்தை நோக்கியும், மெட்டா சைலக்கூறுகள் உள் நோக்கியும் அமைந்திருப்பது வெளி நோக்கு சைலம் எனப்படும். இது பொதுவாக வேர்களில் காணப்படும்.
புரோட்டோசைல கூறுகள் உள்நோக்கியும் மெட்டாசைலக் கூறுகள் வெளிநோக்கியும் அமைந்திருப்பது உள் நோக்கு சைலம் எனப்படும். இது தண்டு பகுதியில் காணப்படுகிறது.
புரோட்டோசைல கூறுகள் உள்ளேயும் அதைச் சுற்றி மெட்டாசைலக் கூறுகள் சூழ்ந்து அமைந்திருப்பது மையமை சைலம் எனப்படும். இவ்வகையில் ஒரே ஒரு வாஸ்குலக்கற்றை உருவாகிறது. எடுத்துக்காட்டு: செலாஜினெல்லா சிற்றினம்.
செயல்பாடு
செல் ஆய்வகம்: மாணவர்கள் நழுவங்களை தயார்செய்து பல வகையான திசுக்களைக் கண்டறிதல்
புரோட்டோசைல கூறுகள் உள்ளேயும் இருபுறங்களில் மட்டும்
மெட்டாசைலக்கூறுகள் சூழ்ந்து காணப்படுவது இடைநிலை
சைலம் எனப்படும். இவ்வகையில் பல வாஸ்குலக்கற்றைகள் உருவாகிறது. எடுத்துக்காட்டு:
ஒஃபியோகுளாசம் சிற்றினம்.
சைலம் நான்கு வகையான செல்களைக் கொண்டது அவை
1. டிரக்கீடுகள்
2. சைலக்குழாய்கள் (அ) டிரக்கியா
3. சைலம் நார்கள்
4. சைலம் பாரங்கைமா
டிரக்கீடுகள் நீண்ட கூர் முனைகளை உடைய லிக்னினை கொண்ட உயிரற்ற செல்களாகும். இதன் செல் அறையானது நார்களைக் காட்டிலும் அகலமானது. இது குறுக்கு வெட்டில் பல கோண வடிவமானது.
பல்வேறு விதமான செல் சுவர் தடிப்புகள் இரண்டாம் நிலை சுவர்படிம பொருட்களால் ஆனது. அவை வளையத் தடிப்பு, சுருள் தடிப்பு, ஏணித் தடிப்பு, வலை பின்னல் தடிப்பு, குழித்தடிப்பு (குழிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் சீராக தடித்த சுவருடையவை) ஆகியவை . டிரக்கீடுகளின் நுனிகளில் திறவுகள் காணப்படுவதில்லை , ஆனால் பக்கச் சுவர்களில் வரம்புடைய குழிகள் காணப்படுகின்றன. ஜிம்னோஸ்பெர்ம்கள் இதன் வழியாக நீர் கடத்துவதை மேற்கொள்கிறது. இவைகள் ஒன்றன் மீது ஒன்றாக அமைந்துள்ளன.
ஜிம்னோஸ்பெர்ம்,
டெரிடோஃபைட்டு தாவரங்களில் நீரைக்
கடத்தும் முக்கியக் கூறுகளாக டிரக்கீடுகள் விளங்குகின்றன. இது மேலும் தாவரங்களுக்குத்
தாங்கும் வலிமையத் தருகிறது.
சைலக்குழாய்கள் நீண்ட குழாய் போன்ற அமைப்புகள் ஆகும். இவை உயிரற்ற செல்களாகும். இவை ஒன்றன் மீது ஒன்றாக அமைந்துள்ள வரிசையான செல்களைக் கொண்டவை. இவற்றின் முனைச் சுவரில் திறவுகள் உள்ளன. இதன் செல் அறை டிரக்கீடுகளை விட அகலமானது. நுனிகளில் காணப்படும் துளைத்திறவுத்தட்டு முழுமையாகக் கரைந்து ஒரு துளையினை உண்டாக்குகிறது. இது ஒற்றைத்துளைத்தட்டு எனப்படும். எடுத்துக்காட்டு: மாஞ்சிபெரா. துளைத்திறவுத்தட்டு பல துளைகளைக் கொண்டு காணப்பட்டால் இது பல துளைத்தட்டு எனப்படும். எடுத்துக்காட்டு: லிரியோடெண்ட்ரான்.
உங்களுக்குத் தெரியுமா?
எஃபிட்ரா , நீட்டம், வெல்வெட்ஷியா போன்ற ஜிம்னோஸ்பெர்ம்களில் சைலக் குழாய்கள் காணப்படுகின்றன.
வின்டரேஸி, டெட்ராசெண்ட்ரேஸி, ட்ரோகோடெண்ட்ரேஸி போன்ற ஆஞ்சியோஸ்பெர்ம் குடும்பங்களில்
சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை.
டிரக்கீடுகளை போலவே இரண்டாம் சுவர் தடிப்புகளான வளையத் தடிப்பு, சுருள் தடிப்பு, ஏணித்தடிப்பு, வலைப்பின்னல் தடிப்பு அல்லது குழி தடிப்புகளைக் கொண்டுள்ளது. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரை கடத்தும் முதன்மையானதிசு இதுவாகும். டெரிடோஃபைட்டு, ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் சைலக் குழாய்கள் காணப்படுவதில்லை. சைலக் குழாய்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரமான நீட்டத்தில் காணப்படுகிறது. சைலக் குழாய்களின் முக்கியப் பணி நீர் கனிம உப்புகள் போன்றவற்றைக் கடத்துதல் மேலும் தாங்கு திறன் அளித்தல் ஆகும்.
சைலத்துடன் இணைந்து காணப்படுகின்ற ஸ்கிலிரன்கைமா நார்கள்,
சைலம் நார்கள் எனப்படும். சைலம் நார்களின் செல் சுவர் லிக்னினால் ஆனது. இவை குறுகிய
செல் அறையினைக் கொண்ட, உயிரற்ற செல்களாகும். இவை நீரைக் கடத்துவதில்லை. ஆனால் தாங்கு
திறனை அளிக்கின்றன. இவை முதலாம், இரண்டாம் நிலை சைலங்களில் காணப்படுகின்றன. சைலம் நார்கள்
லிப்ரிஃபார்ம்
நார்கள் எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தாவரங்களில் நார்கள் அதிகளவில் காணப்படுகின்றன
இவை திட்டுகளாகவோ, தொடர்ச்சியான பட்டைகளாகவோ, சில நேரங்களில் செல்களிடையே தனிச்செல்களாகவோ
காணப்படுகின்றன. சாதாரண டிரக்கீடுகளுக்கும், நார்களுக்கும் இடைப்பட்ட இடைநிலை வடிவங்கள்,
அதாவது டிரக்கீடு ஒத்த நார்கள் எனப்படுகின்றன. இந்த இடைநிலை வடிவங்கள் நார்
- டிரக்கீடுகள் எனப்படுகின்றன. நார் டிரக்கீடுகளில் காணப்படுகின்ற குழிகள்
சைலக் குழாய்கள் டிரக்கீடுகளில் உள்ளதைக் காட்டிலும் சிறியவை.
சைலக்கூறுகளோடு சேர்ந்து காணப்படுகின்ற பாரங்கைமா செல்கள் சைலம் பாரங்கைமா எனப்படுகின்றன. இவை மட்டும் தான் சைலத் திசுவில் காணப்படும் உயிருள்ள செல் ஆகும். இதன் செல் சுவர் மெல்லியது. செல்லுலோஸினால் ஆனது. பாரங்கைமா செல்கள் நீள்போக்காக அச்சிற்கு இணையாகக் காணப்படுவது அச்சு பாரங்கைமா எனப்படும். ஆரப்போக்காக அமைந்துள்ள பாரங்கைமா கதிர் பாரங்கைமா எனப்படும். இரண்டாம் நிலை சைலம் அச்சு மற்றும் கதிர் பாரங்கைமாவினை கொண்டுள்ளது. பாரங்கைமா உணவுப் பொருட்களைச் சேமிப்பதிலும், நீரினைக் கடத்துவதிலும் துணைபுரிகிறது.
வாஸ்குல தாவரங்களில் உணவுப் பொருட்களைக் கடத்துகின்ற கூட்டுத் திசு ஃபுளோயம் ஆகும். ஃபுளோயம் என்ற சொல்லை C. நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். புரோ கேம்பியத்திலிருந்து உண்டாகும் ஃபுளோயம் முதலாம் நிலை ஃபுளோயம் எனப்படும். வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் ஃபுளோயம் இரண்டாம் நிலை ஃபுளோயம் எனப்படும். முதன்நிலை உறுப்பில் முதலில் உண்டாகும் ஃபுளோயக் கூறுகள் புரோட்டோ ஃபுளோயம் எனவும் பின்னர் உண்டாகும் ஃபுளோயக் கூறுகள் மெட்டா ஃபுளோயம் எனவும் அழைக்கப்படும். புரோட்டோ ஃபுளோயம் குறுகிய வாழ்நாள் கொண்டது. இது மெட்டாஃபுளோய வளர்ச்சியினால் நசுக்கப்படுகிறது.
ஃபுளோயம் நான்கு வகையான செல்களைக் கொண்டது. அவை
1. சல்லடைக் குழாய் கூறுகள்
2. துணை செல்கள்
3. ஃபுளோயம் பாரங்கைமா
4. ஃபுளோயம் நார்கள்
சல்லடைக் குழாய் கூறுகள் ஃபுளோயத்தின் கடத்தும் கூறுகளாகும். இவை இருவகைப்படும். இவை சல்லடைச் செல்கள், சல்லடை குழாய்கள்.
சல்லடைச்செல்கள் (Sieve cells):
இவை டெரிடோஃபைட் மற்றும் ஜிம்னோஸ் பெர்ம் தாவரங்களில் உணவு கடத்தும் தொடக்கநிலை செல்களாகும். சல்லடைச் செல்களின் பக்கச் சுவர்களில் சல்லடை பகுதிகள் காணப்படுகின்றன. துணைச் செல்கள் இச்செல்களுடன் சேர்ந்து காணப்படுவதில்லை.
சல்லடைக் குழாய்கள் நீண்ட குழாய்களைப் போன்ற ஃபுளோயத்தின் கடத்துக் கூறுகளாகும். இவை வரிசையாக அமைந்த சல்லடைக் குழாய் கூறுகளின் முனைகள் ஒன்றன் மீது ஒன்று அமைந்து உண்டாக்கப்படுகிறது. இதனுடைய முனை சுவரில் சல்லடை போன்ற துளைகள் காணப்படுகின்றன. இது சல்லடை துளைத்தட்டு எனப்படும். சல்லடைக் குழாய் கூறுகளின் பக்கச்சுவர்களில் பளபளப்பான தடிப்புகள் காணப்படுகின்றன. இவை எளிய அல்லது கூட்டு சல்லடைத்தட்டுகளை கொண்டுள்ளன. சல்லடைக் குழாய்களின் பணிகள் துணைச் செல்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன என நம்பப்படுகிறது.
முதிர்ந்த சல்லடை குழாய்களில் உட்கரு காணப்படுவதில்லை.
ஆனால் சுவரை ஒட்டிய சைட்டோபிளாசம் காணப்படுகிறது. இதில் சிறப்பு வகை புரதம் (பு. புரதம் = ஃபுளோயம் புரதம்) எனப்படும் ஸ்லைம்
உடலங்கள் காணப்படுகின்றன. முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில்
உள்ள துளைகள் கேலோஸ் எனப்படும் பொருளால் (callose
plug). அடைப்பட்டுள்ளது உணவுப்பொருட்கள் சைட்டோபிளாச இழைகள் மூலமாகக் கடத்தப்படுகிறது.
சல்லடைக் குழாய்கள் ஆஞ்சியோஸ் பெர்ம்களில் மட்டும் காணப்படுகிறது.
சைலக் குழாய்களுடன் இணைந்து காணப்படுகின்ற மெல்லிய சுவருடைய நீண்ட சிறப்பு வகையான பாரங்கைமா செல்கள் துணைச் செல்கள் எனப்படும். இச்செல்கள் உயிருள்ளவை சைட்டோபிளாசத்தையும் தெளிவான உட்கருவையும் கொண்டுள்ளன. இவை சல்லடை குழாய்களின் பக்கசுவரில் உள்ள குழிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழிகள் மூலம் இவ்விரண்டிற்கும் இடைய சைட்டோபிளாச இணைப்புகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன. இந்தச் செல்கள் சல்லடை குழாய்களுக்குள் அழுத்த சரிவுவாட்டத்தினை சரிசெய்யத் துணைபுரிகின்றன. சல்லடைக் குழாய்களில் உட்கரு இல்லாததால் துணைசெல் உட்கரு அதன் பணியினை மேற்கொள்கிறது. துணைசெல்கள் ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மட்டும் காணப்படுகின்றன. இவை டெரிடோஃபைட் ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படுவதில்லை. இவை சல்லடைக் குழாய்கள் இவை உணவு கடத்தலில் துணைபுரிகின்றன.
ஃபுளோயத்துடன் இணைந்து காணப்படுகின்ற பாரங்கைமா ஃபுளோயம் பாரங்கைமா எனப்படும். இவை உயிருள்ள செல்களாகும். இவை தரசம், கொழுப்பு போன்றவற்றைச் சேமிக்கின்றன. சில தாவரங்களில் இச் செல்கள் டேனின், பிசின் போன்றவற்றைக் கொண்டுள்ளன. முதல் நிலை ஃபுளோயத்தில் அச்சு பாரங்கைமாவும், இரண்டாம் நிலை ஃபுளோயத்தில் அச்சு , கதிர் பாரங்கைமா இரண்டும் காணப்படுகிறது ஃபுளோயம் பாரங்கைமா டெரிடோஃபைட்கள், ஜிம்னோஸ்பெர்ம்கள், இருவிதையிலை தாவரங்கள் போன்றவற்றில் காணப்படுகிறது.
ஃபுளோயத்துடன் இணைந்து காணப்படுகின்ற ஸ்கிலிரங்கைமா நார்கள் ஃபுளோயம் நார்கள் அல்லது பாஸ்ட் நார்கள் எனப்படும். இவை தடித்த சுவர்களையுடைய சிறிய செல் அறையினைக் கொண்ட குறுகிய, நீண்ட செங்குத்தான செல்களாகும். ஃபுளோயத்தில் காணப்படுகின்ற நான்கு கூறுகளில் ஃபுளோயம் நார்கள் மட்டுமே உயிரற்ற திசுவாகும். இவை உறுதி மற்றும் ஆதாரசெல்களாக செயல்படுகின்றன.