புறத்தோல்
திசுத்தொகுப்பு (Epidermal tissue system)
தாவரங்களின் வெளியுறையாக புறத்தோல் திசுத்தொகுப்பு
காணப்படுகிறது. இது வெளிப்புறச் சூழலுடன் நேரடித் தொடர்பைப் பெற்றுள்ளது. இது புரோட்டோடெர்மிலிருந்து
தோன்றுகிறது. இதற்கு நிகர் ஆங்கிலச் சொல்லான எபிடெர்மிஸ் என்பது இரண்டு கிரேக்க வார்த்தைகளில்
இருந்து பெறப்படுகிறது. எபி மற்றும் டெர்மா. எபி என்பது மேலே, டெர்மா என்பது தோல்.
புறத்தோல் ஒரு தொடர்ச்சியான வெளிப்புற அடுக்கு என்றாலும் பல தாவரங்களில் புறத்தோல்
துளைகளால் தொடர்ச்சியற்றுக் காணப்படுகிறது.
இலையின் புறத்தோல் பொதுவாக மேல்கீழ் வேறுபாடு கொண்டு காணப்படுகிறது. இது மேற்புறத்தோல், கீழ்புறத்தோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் நெருக்கமாக அமைந்த ஓரடுக்கு செல்களாலானது. பொதுவாக மேற்புறத்தோலின் மீது படிந்துள்ள கியூட்டிகிள் கீழ்ப்புறத்தோலில் காணப்படுகின்ற கியூட்டிக்கிளை விடத் தடிமனாக உள்ளது. புறத்தோலில் காணப்படுகின்ற சிறிய துளைகள் இலைத்துளைகள் எனப்படும். பொதுவாக, மேற்புறத்தோலைவிட கீழ்ப்புறத் தோலில் அதிக எண்ணிக்கையில் இலைத்துளைகள் காணப்படும். ஒவ்வொரு இலைத்துளையும் சிறப்பு வகையான ஒரு இணை புறத்தோல் செல்களான காப்பு செல்களால் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான இருவிதையிலை, ஒருவிதையிலைத் தாவரங்களில் காப்பு செல்கள் அவரை விதை (bean-shaped) வடிவத்தில் காணப்படுகின்றன. புற்கள் மற்றும் கோரைகளில் காப்பு செல்களானது சப்ளாக் கட்டை வடிவத்தில் காணப்படுகின்றன.
நீங்கள்
கற்றதை சோதித்தறிக.
எந்த வகை தாவரங்களில் காப்புச் செல்கள்
சப்ளாக் கட்டை வடிவில் காணப்படுகிறது?
புற்கள்
மற்றும் கோரைப்புற்கள்
துணைச்
செல்கள் (Subsidiary cells)
நுண்ணிய துளையான இலைத்துளை இரண்டு காப்பு செல்களால்
சூழப்பட்டுள்ளது. இலையின் புறத்தோலில் இலைத்துளைகள் காணப்படுகின்றன. சில தாவரங்களில்
காப்பு செல்களுடன், கூடுதலாகச் சிறப்பு வாய்ந்த புறத்தோல் செல்கள் காணப்படுகின்றன.
இவை மற்ற புறத்தோல் செல்களில் இருந்து வேறுபடுகின்றன.அவை துணைச் செல்கள் எனப்படுகின்றன. காப்பு செல்களைச் சுற்றியுள்ள துணைச் செல்களின்
எண்ணிக்கை, ஒருங்கமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு வகையான இலைத்துளைகளை அடையாளம்
காணலாம். காப்பு செல்களும் துணைச்செல்களும் வளிம் பரிமாற்றம், நீராவிப்போக்கு போன்றவற்றின்
போது இலைத்துளைகள் திறந்து மூடுவதற்கு உதவுகின்றன.
புறத்தோல்
வளரிகள் (Epidermal Outgrowths)
தண்டுகளில் பல வகையான புறத்தோல் வளரிகள் காணப்படுகின்றன.
புறத்தோல் செல்களிலிருந்து தோன்றும் ஒரு செல்லால் அல்லது பல செல்களாலான வளரிகள் டிரைக்கோம்கள்
எனப்படுகின்றன. டிரைகோம்கள் கிளைத்தோ அல்லது கிளைக்காமலோ காணப்படுகின்றன மேலும் ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட தடித்த செல்களாலானது. இவை பல வடிவங்களிலும் அளவுகளிலும் உள்ளன.
இவை சுரப்பிகள் கொண்டவை (எடுத்துக்காட்டு: ரோஜா, துளசி) அல்லது சுரப்பிகள் அற்றவைகளாக
இருக்கலாம்.
உங்களுக்குத் தெரியுமா?
பூச்சியுண்ணும் தாவரங்களில் பூச்சிகளை
பிடிப்பதற்காக இலைகளின் மேல் உள்ள டிரைகோம்கள் மியூக்கோபாலிசாக்கரைடுகளை சுரக்கின்றன
இவை பூச்சிகளை பிடிக்க உதவுகின்றன.
வேரின் புறத்தோல் அடுக்கு இரண்டு வகையான புறத்தோல் செல்களைக் கொண்டுள்ளது. அவை நீண்ட செல்கள் மற்றும் குட்டை செல்கள். குட்டை செல்கள் வேர்தூவி செல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை வேர் தூவிகளாக நீட்டிக்கப்படுகின்றன. தாவரங்களில் புறத்தோல் தூவிகள் நட்சத்திர வடிவிலும் காணப்படுகின்றன. (எடுத்துக்காட்டு: ஸ்டைராக்ஸ், மால்வேசி மற்றும் சொலனேசி குடும்பத்தின் பல தாவரங்கள்.)
சிறுமுட்கள்
(prickles)
சிறுமுட்கள் அல்லது வளை முட்கள் என்பது ஒருவகையான புறத்தோல் நீட்சிகளாகும். வாஸ்குலத் திசுவின்றிக் காணப்படும். இவை கடினமாகவும் மற்றும் தோற்றத்தில் கூர்மையாகவும் இருக்கும். எடுத்துக்காட்டு: ரோஜா
புறத்தோல் திசுத்தொகுப்பின்
பணிகள்
1. தண்டுத் தொகுப்பில் (shoot system) உள்ள புறத்தோல் திசுத்தொகுப்பில் கியூட்டிக்கிள் இருப்பதனால்
அதிகப்படியான நீரிழப்பு தடை செய்யப்படுகிறது.
2. புறத்தோல் உட்புறத்திசுக்களைப் பாதுகாக்கிறது.
3. புறத்தோல் துளைகள் நீராவிப்போக்கு மற்றும் வளிமப்பரிமாற்றம்
ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றன.
4. விதைகள், கனிகள் பரவுவதில் டிரைகோம்கள் உதவி புரிகின்றன;
மேலும் விலங்குகளிடமிருந்து பாதுகாக்கின்றன.
5. சிறுமுட்கள் விலங்குகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன;
அதிகப்படியான நீரிழப்பைத் தடை செய்கின்றன.
6. சிறுமுட்கள் சில ரோஜா தாவரங்கள் பற்றி ஏறுவதற்கு
உதவி புரிகின்றன.
7. சுரப்பி தூவிகள் தாவர உண்ணிகள் தாவரங்களை உண்ணுவதைத் தடுக்கின்றன.