இருவிதையிலைத் தண்டின் (சூரியகாந்தி) குறுக்குவெட்டுத்தோற்றத்தில் வெளிப்புறத்திலிருந்து மையம் நோக்கி அமைந்துள்ள திசுத்தொகுப்புகள் பின்வருமாறு.
இது பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்ற தண்டின் வெளிப்புற
அடுக்காகும். இது ஓரடுக்கு செவ்வக வடிவப் பாரங்கைமா செல்களால் ஆனது. இச்செல்கள் செல்
இடைவெளிகளின்றி நெருக்கமாக அமைந்துள்ளன. புறத்தோல் செல்களின் வெளிப்புறச்சுவர் மீது
கியூட்டிகிள் என்ற படலம் காணப்படுகிறது. கியூட்டிக்கிள் நீராவிப்போக்கை குறைக்க உதவுகிறது.
கியூட்டிக்கிள் கியூட்டின் என்ற மெழுகு போன்ற பொருளாலானது. ஆங்காங்கே புறத்தோல் துளைகள்
காணப்படுகின்றன. புறத்தோல் செல்கள் உயிருள்ளவையாகும். புறத்தோல் செல்களில் பசுங்கணிகங்கள்
காணப்படுவதில்லை. புறத்தோலின் மீது பல செல்களாலான புறத்தோல் தூவிகள் அதிகளவில் காணப்படுகின்றன.
புறத்தோலுக்கு உட்புறமாகப் புறணி காணப்படுகிறது. புறணி
மூன்று பகுதிகளாக வேறுபட்டுள்ளது. புறத்தோலுக்கு அடியில் ஒருசில அடுக்கு கோலங்கைமா
செல்களாலான பகுதி காணப்படுகிறது. இது புறத்தோலடித்தோல்
எனப்படும். இது தண்டிற்கு உறுதியைத் தருகிறது. இச்செல்கள் உயிருள்ளவை. இவற்றின்
செல்சுவர்கள் மூலைகளில் தடிப்புற்று காணப்படுகின்றன.
புறத்தோலடித்தோலிற்கு உட்புறமாக ஒரு சில அடுக்கு குளோரங்கைமா
செல்களால் ஆன பகுதி காணப்படுகிறது. இப்பகுதி செல்லிடை வெளிகளுடன் காணப்படுகிறது. இப்பகுதி
ஒளிச்சேர்க்கையை மேற்கொள்கிறது. சில ரெசின் குழாய்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன.
மூன்றாவது பகுதி பாரங்கைமா செல்களாலானது. இப்பகுதியில் உள்ள செல்கள் உணவுப் பொருட்களைச்
சேமிக்கின்றன.
புறணியின் கடைசியடுக்கு அகத்தோலாகும். அகத்தோல் ஓரடுக்கு பீப்பாய் வடிவ, செல் இடைவெளிகள் அற்று நெருக்கம் அமைந்த பாரங்கைமா செல்களாலானது. அகத்தோல் செல்களில் தரசமணிகள் மிகுந்து காணப்படுகின்றன. எனவே இவ்வடுக்கு தரச அடுக்கு எனவும் அழைக்கப்படும். இவ்வடுக்கு வேர்களில் உள்ள அகத்தோலை ஒத்த அடுக்காகும். பெரும்பாலான இருவிதையிலைத் தாவரத் தண்டில் காஸ்பேரியப் பட்டைகள் கொண்ட அகத்தோல் காணப்படுவிதில்லை.
அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த தண்டின் மையப்பகுதி
ஸ்டீல் அல்லது மைய உருளை ஆகும். இதில் பெரிசைக்கிள், வாஸ்குலக் கற்றைகள், பித் ஆகியவை
காணப்படுகின்றன. இருவிதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலக் கற்றைகள் பித்தைச் சூழ்ந்து
ஒரு வளையமாக அமைந்துள்ளன. இவ்வகை ஸ்டீலானது யூஸ்டீல்
(Eustele) எனப்படும்.
அகத்தோலுக்கும், வாஸ்குலக் கற்றைகளுக்கும் இடையில்
காணப்படும் பல அடுக்கு செல்களாலான பகுதி பெரிசைக்கிள் ஆகும். சூரியகாந்தி
(Helianthus) தாவரத்தண்டில் சில அடுக்கு ஸ்கிலிரங்கைமா செல்கள் திட்டுகளாக ஒவ்வொரு
வாஸ்குலக் கற்றையின் ஃபுளோயத்தின் வெளிப்புறமாக காணப்படுகின்றன. இவை கற்றைத் தொப்பிகள் (Bundle cap) அல்லது வன்மையான
ஃபுளோயம் (hard bast) என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கற்றைத் தொப்பிகள் மற்றும் அவைகளுக்கு இடையே அமைந்த பாரங்கைமா செல்கள் சேர்ந்து
உண்டாக்கும் வளையம், சூரியகாந்தி தண்டில் பெரிசைக்கிளாக உள்ளது.
வாஸ்குலக் கற்றையில் சைலம், ஃபுளோயம் மற்றும் கேம்பியம்
ஆகியவை காணப்படுகின்றன. தண்டில் சைலமும், ஃபுளோயமும் சேர்ந்தமைந்து வாஸ்குலக் கற்றைகளாகக்
காணப்படுகின்றன. இந்த வாஸ்குலக் கற்றைகள் ஆப்பு
வடிவத்தில் உள்ளன. வாஸ்குலக் கற்றைகள் ஒரு வளையமாக அமைந்துள்ளன. வாஸ்குலக் கற்றை ஒவ்வொன்றும் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை, உள் நோக்கு
சைலம் கொண்டவையாகும்.
முதன் நிலை ஃபுளோயம் வாஸ்குலக்கற்றையில் வெளிப்புறத்தை
நோக்கி உள்ளது. இது புரோட்டோஃபுளோயம், மெட்டாஃபுளோயம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.
ஃபுளோயத்தில் சல்லடைக் குழாய்கள், துணைசெல்கள், ஃபுளோயம் பாரங்கைமா ஆகியவை காணப்படுகின்றன.
ஃபுளோயம் நார்கள் முதன் நிலை ஃபுளோயத்தில் காணப்படுவதில்லை . ஃபுளோயம் கரிம உணவுப்
பொருட்களை இலையிலிருந்து தாவரத்தின் பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.
கேம்பியம் செவ்வக வடிவ, மெல்லிய செல்சுவருடைய, ஆக்குத்திசு
செல்களாலானது. இது ஒன்றிலிருந்து நான்கு அடுக்கு செல்களாலானது. இந்த கேம்பியம் இரண்டாம்
நிலை வளர்ச்சியின் போது புதிய செல்களைத் தோற்றுவிக்கும் திறன் கொண்டுள்ளது.
சைலம் நார்கள், சைலம் பாரங்கைமா, சைலக் குழாய்கள், டிரக்கீடுகள் ஆகியவை சைலத்தில் காணப்படுகின்றன. சைலக்குழாய்கள் தடித்த செல்சுவரை கொண்டு பல வரிசைகளில் அமைந்துள்ளன. சைலம் நீரையும், கனிமங்களையும் வேரிலிருந்து தாவரத்தின் பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.
தண்டின் மிகப்பெரிய மையப்பகுதி பித் எனப்படும். இது
செல் இடைவெளிகளுள்ள பாரங்கைமா செல்களாலானது. இது மெடுல்லா எனவும் அழைக்கப்படுகிறது.
பித் வாஸ்குலக் கற்றைகளுக்கிடையே ஆரப்போக்கில் நீண்டு காணப்படுகிறது. வாஸ்குலக் கற்றைகளுக்கிடையே
காணப்படும் பித்தின் இத்தகைய நீட்சிகள் முதன்நிலை
பித் கதிர்கள் அல்லது முதன் நிலை மெடுல்லா
கதிர்கள் எனப்படும். பித்தின் பணி உணவுப்பொருட்களைச் சேமிப்பதாகும்.