Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | புனித தாமஸ் அக்வினாஸ் (Saint Thomas Acquinas) (பொ.ஆ.1225-பொ.ஆ.1274)
   Posted On :  03.10.2023 09:26 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை

புனித தாமஸ் அக்வினாஸ் (Saint Thomas Acquinas) (பொ.ஆ.1225-பொ.ஆ.1274)

வாழ்வும் காலமும் - அக்வினாசின் படைப்புக்கள் - அக்வினாசின் சிந்தனை - மதிப்பீடு

புனித தாமஸ் அக்வினாஸ் (Saint Thomas Acquinas) 

(பொ..1225-பொ..1274)


கற்றலின் நோக்கங்கள்

  புனித தாமஸ் அக்வினாசின் அரசியல் சிந்தனையைக் கற்றறிதல் 

  அக்வினாசின் சட்டம் பற்றிய கருத்தாக்கத்தினை புரிந்துகொள்ள உதவுகிறது

  அரசின் தோற்றம், அரசின் பணிகள், அரசாங்கத்தின் வகைப்பாடு, சட்ட வகைப்பாடு திருச்சபை மற்றும் அரசிற்கு இடையேயான உறவுகள் பற்றிய அக்வினாசின் கருத்துகளில் அறிவு பெறுதல்


வாழ்வும் காலமும்

பதிமூன்றாம் நூற்றாண்டு மேற்கு ஐரோப்பாவில் மேற்கத்திய தத்துவத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவின் பெரும்பான்மை மதமாக கத்தோலிக்கம் உருவானது. இதன் விளைவாக 13 ஆம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டிலின் அரசியல் மீண்டும் தோன்றியது. அரிஸ்டாட்டிலின் மதச்சார்பற்ற கருத்துக்களுக்கும் புனித அகஸ்டினின் பாவம் பற்றிய மத கருத்துகள், அரசியல் சமூகம் ஆகிய கருத்தாக்கங்களுக்கும் இடையே கூர்மையான வேறுபாடுகள் தோன்றின. இதனைத் திருச்சபை ஏற்றுக்கொண்டு பிணைப்புக் கோட்பாடாக்கியது.

இருப்பினும், சில தத்துவ ஞானிகள் மதச்சார்பற்ற அரசியல் அனுமானங்களுடன் தங்களின் சமயக் கருத்துக்களை உட்புகுத்துவதில் சவால்களைச் சந்தித்தனர். இதனால் இறுதியில் உலகைப் புரிந்துகொள்ளும் இரு வெவ்வேறு வழிமுறைகளுக்கிடையே இது சமரசத்தை ஏற்படுத்தியது. இதனைக் கடைசியில் அரசியல் மற்றும் அரசியல் கோட்பாடு ஆக்குவதன் மூலம் கடவுளுடன் நெருங்கும் மக்களின் உயர்ந்த விருப்பத்தில் வெற்றி கண்டனர். இம்முக்கிய தத்துவ வெற்றிக்கு சிற்பியாக இருந்த கிறித்துவ சமயவாதிகளில் புனித தாமஸ் அக்வினாஸ் மிக முக்கியமானவராவார்.

புனித தாமஸ் அக்வினாஸ் நேப்பிள்சின் வடக்கே உள்ள ராக்காசீக்காவில் (Roccasecca) உள்ள தனது குடும்பத்துக்குச் சொந்தமான கோட்டையில் பொ.. 1225 -ல் பிறந்தார். அவரது தந்தையான அக்வினோ லேண்டல்ஃப் (Landulf of Aquino) ஓர் முக்கிய நிலவுடமைக் குடும்பத்தின் தலைவராவார். தாயாரான தியோடோரா ரோசி (Theodora Rossi) அவர்கள் நியோபாலிட்டன் கராசியோலோ (Neapolitan Carracciolo) குடும்பத்தைச் சேர்ந்தவர்.


அக்வினாசின் படைப்புக்கள்

19 ஆம் நூற்றாண்டில் போப் பதிமூன்றாம் லூயி அவர்கள் அக்வினாஸின் தத்துவார்த்த முறையைக் கத்தோலிக்க சமயவாதத்தின் அலுவல் மதமாகும் என பிரகடனப்படுத்தினார். இது கத்தோலிக்கர்கள் அவரின் படைப்புக்களை வாசிப்பதை முக்கியமாக்கியதுடன் கிறித்துவ மதத்தின் இப்பிரிவினை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் முக்கியமானதாக விளங்கியது. அக்வினாசின் படைப்புகளிலுள்ள கருத்துரைகள் அனைத்தும் அவரது சமயவாத வடிவமைப்பிலிருந்து தோன்றியதாகும். இவரது முக்கியப் படைப்புகள் (1) சம்மா காண்ட்ரா ஜென்டிலஸ்  (Summa Contra Gentiles) (கி.மு 1264) (2) சம்மா தியாலஜிகா (Summa Theologica) (கி.மு 1274) (3) அரசுரிமை (On Kingship).


அக்வினாசின் சிந்தனை 

சம்மா காண்ட்ரா ஜென்டிலெஸ் (Summa Contra Gentiles):

அக்வினாஸ் தனது சம்மா காண்ட்ரா ஜென்டிலெஸ் என்னும் நூலினை ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய மதத்துடான கணக்கீட்டினை கிறித்துவர்கள் நேர்செய்ய டொமினிக்கன் சமயப் பரப்புக் குழுவினருக்கு ஓர் கையேடு அல்லது பாடநூலாக வடிவமைத்தார் என பரவலாகக் கூறப்படுகிறது. இப்படைப்பு கிறித்துவ மத நம்பிக்கை மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் குற்றம்சாட்ட வாய்ப்புள்ளவற்றினைப் பாதுகாக்கும் வகையிலான படைப்பாகும்.

சம்மா தியாலஜிகா (Summa Teologica)

அக்வினாஸ் தன்னுடைய சம்மா தியாலஜிகாவில் பகுத்தறிவு அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த நான்கு நிலைகளிலான சட்டங்களை நிலைநாட்டினார். இவை சட்டத்தினை ஓர் வடிவத்திலிருந்து மற்றொன்றிற்கு வேறுபடுத்துவது சம்பந்தப்பட்ட பகுத்தறிவின் நிலைகளாகும். இப்பிரபஞ்சம் முழுமைக்கும் செயலாற்றக்கூடிய பகுத்தறிவே இவற்றில் மிகவும் உயர்ந்த மற்றும் விரிவானதாகும். இதனை 'நித்திய சட்டம்' (Eternal Law) என பெயரிட்டுள்ளார். இது கடவுளால் நிறுவப்பட்ட இயற்கையான நன்னெறி முறைமையாகும். இதற்கு அடுத்தாக நித்திய சட்டத்தின் சிறப்புப் பிரிவாக 'தெய்வீக சட்டம்' (Divine Law) உள்ளது. இது பல்வேறு மத இலக்கியங்களில் கடவுளின் வெளிப்பாடுகளைக் கொண்டதாகும்.

இதற்கடுத்த நிலையில் உள்ள சட்டத்தினை அக்வினாஸ் 'இயற்கைச் சட்டம்' (Natural Law) என அடையாளம் காட்டுகிறார். இந்த இயற்கைச் சட்டக் கருத்தானது உணர்வடக்கத் தத்துவத்தின் அடிப்படையில் பகுத்தறிவினால் கண்டறியப்பட்ட நீதிநெறிச் சட்டமாகும். இது மனிதனுக்குப் பகுத்தறிவுத் திறன் உள்ளது எனவும், சட்டத்தினால் குறிப்பிடப்பட்டாலும் இல்லாவிடினும் சில நன்னெறிகளுக்கு மனிதனை உட்படுத்துகிறது எனவும் அனுமானிக்கிறது. உதாரணமாக கொலை செய்தல் என்பது தவறு என்றும் தகுந்த முறையிலான நடத்தையினைப் புரிந்துகொள்ள நமக்கு ஓர் குற்றவியல் சட்டம் தேவையில்லை எனவும் கூறுகிறது.

அக்வினாசின் இயற்கைச் சட்ட கோட்பாட்டின் தனித்தன்மை யாதெனில் அது இயற்கை மற்றும் தெய்வீகம், அதாவது இயற்கை மற்றும் பரிசுத்த ஆவியுடன் தொடர்பினை ஏற்படுத்துவதாகும். கடவுளின் நித்திய சட்டத்தால் சரியானவை மற்றும் தவறானவை எவை என தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால் இயற்கைச் சட்டம் என்பது வேறொன்றுமல்ல நித்திய சட்டத்தில் பகுத்தறிவிலான படைப்பின் பங்கேற்பாகும். மனிதனின் நீதிநெறியிலான பகுத்தறிவு என்பது சுருக்கமாக இயற்கையைக் கடந்த பரிசுத்த ஆவி கொள்கையின் நீட்டிப்பாகும். இறுதியாக, மனிதச்சட்டம் என்பது குறிப்பிட்ட புவிசார் சூழ்நிலைகளில் இயற்கைச் சட்ட நல்லொழுக்க நெறியுரைகளில் மனித பகுத்தறிவின் செயலாக்கமாகும்

அரசுரிமை பற்றிய கருத்துக்கள் (On Kingship)

அக்வினாசின் அரசியல் கோட்பாடானது அரிஸ்டாட்டிலின் கோட்பாட்டினை ஒத்துள்ளது. அரசுரிமை பற்றிய அக்வினாசின் எழுத்துக்கள் மிகச் சீரான அரசியல் படைப்பாகக் கருதப்படுகிறது. அரிஸ்டாட்டில் தனது 'அரசியல்' என்னும் நூலில் பின்பற்றிய தர்க்க முறைபாணியினை அக்வினாசும் பின்பற்றுகிறார். இவர் "அரசு இயற்கையானது ஏனெனில் அது மனிதனுக்கும் இயற்கையானது. ஓர் சமூக மற்றும் அரசியல் விலங்காக ஓர் குழுவாக வாழ்வதற்கு" என வாதிடுகிறார். இதன் விளைவாக அரசியல் செயல்பாடுகள் தேவை மற்றும் நன்மையானதாகும் என வலியுறுத்துகிறார். அரிஸ்டாட்டிலைப் போலவே அக்வினாசும் மக்களின் அரசியல் தன்மைக்கு அவர்களின் பகுத்தறிவு மற்றும் பேச்சுத்திறன் ஆகியவை அடிப்படையாகும் என்கிறார்.

இதற்கு அடுத்ததாக அரசியல் அரங்கில் பகுத்தறிவிலான நடவடிக்கையின் மூலமாக மனிதர்கள் நல்லொழுக்கத்தைப் பெற்று மகிழ்ச்சி மற்றும் நிறைவடைகின்றனர் என கூறுகிறார். இவர் அரிஸ்டாட்டிலைப் போன்றே 'அரசு' என்பது நீதிநெறியிலான சமூகம் என நம்பினார். மேலும் அதன் நோக்கமே உறுப்பினர்களின் நீதிநெறியிலான நன்மையாகும். இவ்வாறு அரசு என்பது நீதியின் அடிப்படையிலானது எனவும் சட்டவரையறைக்கு உட்பட்ட குடிமக்களின் நன்மைக்காக சிறந்தவர்களே ஆளவேண்டும் எனவும் வாதிட்டார். இத்தகைய வாதமானது நம்மை நேரடியாக அரசமைப்பு வகைப்படுத்தல் பிரச்சனைக்கு வழிநடத்திச் செல்கிறது என்பதால் மீண்டும் அக்வினாஸ் அவர்கள் அரிஸ்டாட்டிலின் கொள்கைகளைப் பின்பற்றி தரம் மற்றும் அளவீட்டு முறைகளைப் பயன்படுத்தினார். இவர் அரசமைப்பினை ஆள்பவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆட்சியின் தரத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார்.

குறிப்பிடத்தக்க மேற்கோள்

சட்டம் என்பது சமூக அக்கறையுடன் உள்ள நபரால் பொது நலனுக்காக பகுத்தறிவின் அடிப்படையில் குறிப்பிட்ட விதிமுறைகளை ஏற்படுத்துவதன்றி வேறொன்றுமில்லை - தாமஸ் அக்வினாஸ் (Thomas Aqinas)


மதிப்பீடு

புனித தாமஸ் அக்வினாஸ் இடைக்காலச் சிந்தனையாளர்களில் சிந்தனையாளராகக் கருதப்படுவதுடன் புதிய மரபினையும் தோற்றுவித்தார். இது 'தாமிசம்' (Thomism) என அழைக்கப்படுகிறது. இவரது அரசியல் கோட்பாட்டின் அடிப்படைகளை இவரின் அரிஸ்டாட்டிலினுடைய அரசியல் பற்றிய கருத்துரையான 'டி ரெஜிமினிபிரின்சிபம்' (de regimineprincipum இறைமை ஆட்சி) என்பதில் காணலாம். அப்பொழுது அவர் போப்பின் அவையில் இத்தாலி நாட்டில் (1259-68) இருந்தார். அரிஸ்டாட்டிலைப் போன்றே அரசு இயற்கையானது என்றும் அது மரபார்ந்த நிறுவனமல்ல மிகச்சரியான சமுதாயமாகும் எனவும் கூறுகிறார். மனிதர்கள் சமூக விலங்காக இருப்பதால் அரசு என்பது மரபார்ந்ததல்ல என்பதுடன் இயற்கையானதாகும் என்கிறார். அவர்கள் வாழ்வதற்காகவும், வளம் பெற்று பண்பாட்டு மேம்பாடு அடைவதற்காகவும் சமுதாயத்தை உருவாக்க விழைகின்றனர். இதனைக் கூடிவாழும் விலங்குகள் உள்ளுணர்வின் அடிப்படையிலும், மனிதர்கள் பகுத்தறிவின் அடிப்படையிலும் மேற்கொள்கின்றனர்.

அக்வினாசின் கூற்றுப்படி அனைத்து வலிமையும் கடவுளிடம் இருந்தே வருகின்றன. இதற்குக் காரணம் வாழ்வின் வலிமை மற்றும் இறப்பு ஆகியவை திருச்சபை கோட்பாட்டின்படி கடவுளின் தனிச்சிறப்புரிமையாகும். இச்சந்தர்ப்பத்தில் அக்வினாஸ் அவர்கள் அரிஸ்டாட்டிலிடம் இருந்து மாறுபட்டாலும் இறையாண்மை இயற்கையானது எனும் கேள்வியில் மீண்டும் திரும்புகிறார். மக்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கக்கூடிய ஆளும் அமைப்பு இல்லாவிடில் குழப்பம் விளைந்து மக்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வர் என்கிறார். அக்வினாசின் கருத்துப்படி இறையாண்மை மிக்க அரசன் அல்லது அரசாங்கம் என்பது ஆளப்படுவோரின் பிரதிநிதியாகும்.

இங்ஙனம் அரசு என்பது எவ்வகையிலும் திருச்சபையினை சாராததாகும். இவை ஒவ்வொன்றும் தனித்தனி பங்கு மற்றும் நோக்கங்களைக் கொண்டதாகும் என அக்வினாஸ் வாதிடுகிறார். அக்வினாசின் கருத்துப்படி திருச்சபை அரசிற்கு கீழானதல்ல. ஆனால் அரசு என்பது திருச்சபையினை கருத்தில் கொள்ளவேண்டும். இதற்கு திருச்சபையின் நோக்கம் அரசின் நோக்கத்தினை விட உயர்ந்ததாக இருப்பதுடன் குடிமக்களின் அடிப்படை நோக்கமாகவும் இருப்பதாகும்.அக்வினாஸ் திருச்சபைக்கும், அரசுக்கும் உள்ள உறவினை ஆன்மாவிற்கும், உடம்பிற்கும் உள்ள உறவாக கருதுகிறார். ஒவ்வொன்றும் தனிப்பட்ட பங்கினை கொண்டிருந்தாலும் ஆன்மாவின் நோக்கம் உயர்ந்ததாகும்.

11th Political Science : Chapter 7 : Political Thought : St. Thomas Aquinas(1224/1225-1274) - Political Thought in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை : புனித தாமஸ் அக்வினாஸ் (Saint Thomas Acquinas) (பொ.ஆ.1225-பொ.ஆ.1274) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை