Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) (பொ.ஆ. 1588 - பொ.ஆ. 1679)
   Posted On :  03.10.2023 09:34 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை

தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) (பொ.ஆ. 1588 - பொ.ஆ. 1679)

வாழ்வும் காலமும் - மனிதனின் தன்மை (Humman Nature) - இயற்கை நிலை (State of Nature) - சமூக ஒப்பந்தம் (Social Contract) - இறையாண்மை (Sovereignty) - மதிப்பீடு

தாமஸ் ஹாப்ஸ்  (Thomas Hobbes) 

(பொ.. 1588 - பொ.. 1679)


கற்றலின் நோக்கங்கள்   

தாமஸ் ஹாப்சின் அரசியல் சிந்தனையைப் புரிந்து கொள்ளுதல்   

இயற்கை நிலை, சமூக ஒப்பந்தம், சட்டங்கள், உரிமைகள், சுதந்திரம், இறையாண்மை மற்றும் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை பற்றிய தாமஸ் ஹாப்சின் கருத்துக்களை அறிந்து கொள்ளுதல்.


வாழ்வும் காலமும் 

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய தத்துவ ஞானியான தாமஸ் ஹாப்ஸ் அறிவியல் புரட்சி (Scientific Revolution) நிகழ்ந்த காலத்தவர். தற்காலச் சமூகக் கோட்பாட்டிற்கான முதல் முயற்சியினை இவரே மேற்கொண்டார். அவர் தனது கருத்துக்களை நீதிநெறி சார்புநிலைவாதத்தின் (Moral Relativism) அடிப்படையில் கூறுவதுடன் இயற்கை நிலை மீதான அதிகபட்ச அவநம்பிக்கையுடன் அனைவருக்கெதிராகவும் அனைவரும் மேற்கொள்ளும் யுத்தம் என்கிறார். தாமஸ் ஹாப்ஸ் ஏப்ரல் 5, 1588 -ல் மால்ம்ஸ்பெரி (Malmesbury) என்னுமிடத்தில் இங்கிலாந்தின் கடற்பகுதிக்கு அருகில் ஸ்பானிஷ் கடற்படைத்தொகுதி (Spanish Armada) தென்பட்டதாக வந்த செய்தியைக் கேட்ட தாய்க்கு குறைப்பிரசவத்தில் பிறந்தார்.

குறிப்பிடத்தக்க மேற்கோள் 

"அச்சமும் நானும் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். - ஹாப்ஸ் (Hobbes) 

ஹாப்சின் தந்தை அக்குடும்பத்தைக் கைவிட்ட பின்னர் ஹாப்ஸ் தனது வசதியான மாமாவின் வீட்டில் வளர்ந்தார். ஹாப்ஸ் தனது பள்ளிக்கல்வியை விரைவில் துவக்கியதுடன் பின்னர் ஆக்ஸ்போர்டின் மெக்தலீன் கல்லூரியில் சேர்ந்தார். தமது பத்தொன்பதாவது வயதில் பட்டம்பெற்ற பிறகு கேவன்டிஷ் குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு வில்லியம் கேவண்டிஷ்க்கு ஆசிரியரானார். தத்துவக் கூறுகளின் மீது ஹாப்ஸ் சிறிதளவே விருப்பம் காட்டினாலும் ஐரோப்பா கண்டத்தில் வில்லியம் கேவண்டிசுடன் சுற்றுப்பணம் மேற்கொண்டபிறகு மரபுநடை கொண்டவற்றில் விருப்பம் காட்டினார். அவர் வரலாற்றின் நகர்வுகள், தேசங்கள் மற்றும் பேரரசுகளின் விதியினைப் பற்றி அறிவதில் விருப்பம் கொண்டார். 1692 ஆம் ஆண்டு தூசிடிடசின் 'பெலோப்பனீசியப் போர் வரலாறு' (History of the peliponnesian War) என்னும் நூலினை மொழி மாற்றம் செய்து பதிப்பித்தார்.

ஹாப்சின் பல படைப்புகளில் டி சைவ் (De Cive) DDO. மற்றும் லெவியதான் (Leviathan) ஆகியவை மிகவும் முக்கியமானவையாகும். ஹாப்சின் லெவியதான் அவரின் மிகவும் முதிர்ந்த மற்றும் அற்புதமான படைப்பாகும். இதில் கலிலியோவின் இயற்பியல் வழியில் மனித உளவியலுக்கு செயல்விளக்கமளிக்க முயற்சித்ததுடன் தற்கால அரசியலுக்கு அடித்தளமிடுகிறார். மனிதனின் தன்மை பற்றிய கருத்தாக்கம், இயற்கை நிலை, சமூக ஒப்பந்தம் மற்றும் அவரது இறையாண்மை பற்றிய கருத்துகள் ஆகியவை அவருடைய அரசியல் தத்துவத்தினை படிக்கும் அனைவரின் விருப்பத்தினையும் கவர்ந்துள்ளது. கீழ்க்காணும் பகுதிகளில் ஹாப்சின் முக்கியப் படைப்புக்களை ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க மேற்கோள் 

மனிதகுலம் முழுமைக்கும் உள்ள பொதுவான மனச்சார்பாக நான் முன்வைப்பது யாதெனில் அவர்கள் அதிகாரத்தின் மேல் கொண்டுள்ள இடைவிடாத மற்றும் ஓய்வற்ற விருப்பம் ஆகும். அவ்விருப்பம் அவர்கள் மரணத்தின் போதுதான் முடிவுக்கு வருகிறது. - ஹாப்ஸ்


மனிதனின் தன்மை (Humman Nature)

பல சமயங்களில் ஹாப்சின் லெவியதான் மனிதனைப் பற்றி தெளிவும், எளிமையும் கொண்ட கோட்பாட்டுடன் தொடங்குவதாகவும் அரசியலைப் புரிந்துகொள்வதன் முன்தேவையாகவும் இருக்கிறது. அரசியல் அறிஞர்கள் அடிக்கடி 'ஹாப்சியன்' (Hobbesian) என்ற பதத்தினை பயன்படுத்துகின்றனர். இது மனிதனின் மீதான அவநம்பிக்கைக் கருத்தினைக் குறிப்பதாகும். அதாவது மனிதன் அடிப்படையில் சமூக விரோதி, சுயநலமிக்கவன், கொடுமைமிக்கவன் மற்றும் அதிகார ஆசையுடையவன் என்பதாகும். மனிதன் சமூகம் மற்றும் அரசிற்கு முன்னரே இருந்தவன் என்ற ஹாப்சின் அனுமானங்களை ஏற்றுக்கொண்டால் பின்னர் மனிதன் தன் தேவை மற்றும் விருப்பங்களை மட்டுமே திருப்திப்படுத்துவதை மேற்கொள்வான் என்பதையும் ஏற்றுக்கொள்வதாகும். ஹாப்சின் வார்த்தைப்படி மனித இனம் தனது உணர்ச்சி வழி நடப்பதாகும். தங்களின் அறிவுத்திறனை அவர்கள் அதிக மகிழ்ச்சி மற்றும் குறைவான வலி ஆகியவற்றினைப் பெறுபவை எவை என தீர்மானித்துப் பயன்படுத்துகிறார்கள். ஹாப்ஸ் மேலும் கூறுகையில் மனிதனின் நோக்கமானது ஒரே ஒரு தடவை தனது விருப்பத்தை நிறைவேற்றுவது மற்றும் ஒரு நிகழ்வில் மட்டுமல்லாமல் தனது எதிர்கால விருப்பங்களை உறுதியுடன் நிறைவேற்றுவது ஆகும். ஹாப்ஸ் மிகவும் கவனமாகக் கூறுவது யாதெனில் பல்வேறு மக்கள் பலதரப்பட்ட மகிழ்வின் வடிவங்களை விரும்பினாலும் மக்களிடம் பொதுவாக உள்ள ஒரு விருப்பம் அதிகாரமாகும். மகிழ்ச்சியைத் தேடுபவர்கள் அனைவருமே தர்க்கத்தின் அடிப்படையில் அதிகாரத்தைத் தேடுபவர்களாவர். இங்ஙனம் ஹாப்ஸ் மனிதனின் தன்மை முழுமையான தன்னலப் பற்றுள்ளதாகவும், தன்னைப் பற்றியதாகவும் மட்டுமானது எனக் கருதுகிறார்


இயற்கை நிலை (State of Nature)

ஹாப்ஸ் தனது இயற்கை நிலைக் கோட்பாட்டில் மனித நடத்தையைப் புரிந்துகொள்வதற்கான அனுமான முறையினைத் தந்துள்ளார். இயற்கை நிலை என்பது முழுமையான சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ள சூழல் என வாதிடுகிறார். தனி மனிதர்களைக் கட்டுப்படுத்த எவ்விதச் சட்டமும் இல்லாத முழுமையான சுதந்திரத்தில் அனைத்தையும் செய்யும் உரிமை உண்டு. அதில் மனிதர்கள் ஏறத்தாழ சமமான உடல் மற்றும் அறிவுத்திறனைப் பெற்றிருப்பது முழுமையான சமநிலையாகும். மேலும் அத்தகைய சூழலில் அனைத்தையும் செய்யும் உரிமை அனைவர்க்கும் உள்ளதாலும், அனைவருமே தங்கள் உரிமைகளைச் செயல்படுத்துவதில் சமமான திறனுள்ளவர்களாக இருப்பதாலும் அனைவரும் அனைவராலும் தாக்கப்படுகின்றனர். ஆகவே, இயற்கை நிலை என்பது ஓர் போர்ச் சூழ்நிலையாக உள்ளது. உயிர் வாழ்தல் என்பது மனிதர்கள் அதிகாரத்தைப் பெறுவதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆகவே, இயற்கை நிலையில் அனைவருமே மற்றவரின் மீதான நிலையான பயத்திலேயே வாழ்கின்றனர். இதனால் மனிதர்கள் இயற்கையில் சமூக விரோதமாக அதிகாரத்தைப் பெறுபவர்களாக உள்ளனர்.

குறிப்பிடத்தக்க மேற்கோள்

பிறர் உனக்கு பாதகமானவற்றை செய்வதற்கு முன் நீ அவர்களுக்குப் பாதகமானவற்றைச் செய்துவிடு. -ஹாப்ஸ் (Hobbes)


சமூக ஒப்பந்தம் (Social Contract)

மனிதனின் தன்மை பற்றிய ஹாப்சின் கருத்துக்கள் அவரது அரசியல் கோட்பாட்டில் ஆழ்ந்தத் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மனிதனின் உண்மையான தன்மையை அறிந்ததால் ஹாப்ஸ் அரசியலின் அறிவியல் கோட்பாடாக சமூக ஒப்பந்தத்தினை முன் வைத்தார். சமூக ஒப்பந்தத்தின் அடிப்படைக் கருத்து மிகவும் எளிமையானதாகும். மனிதர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் விளைவே அரசாகும். அதில் அரசாங்கத்தின் அதிகார எல்லையானது ஒப்பந்தத்தின் வரையறைகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டுத் தீர்மானிக்கப்படுகிறது. அரசானது பரஸ்பர ஒப்பந்தம் அல்லது உறுப்பினர்களின் ஒப்புதல் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இதன் விளைவாக மக்கள் ஒப்புதல் அளித்ததற்குத் தகுந்தவாறு இருக்கும்போது அரசாங்கம் சட்டப்பூர்வமானதாகிறது.

இது தற்கால மதச்சார்பற்ற அரசினைப்பற்றிய புதிய கருத்தாக உள்ளதுடன் மதச்சார்பற்ற அரசாங்கம் இறைவழி ஒப்புதலுடன் நீடிக்கிறது என்ற இடைக்கால சிந்தனைக்கு முரணானதாகும். அத்தகைய கருத்தினை அரச வம்சத்தினர் இன்றும் பயன்படுத்துவதுடன் இறைவழி உரிமையின்படியே மன்னர் ஆளுகிறார் எனவும் வாதிடுகின்றனர். ஆனால் ஒப்புதல் - ஒப்பந்தம் இதனை ஒரேயடியாக நிராகரிப்பதுடன் அதற்கு முரணாக மக்கள் ஒப்புதல் அளித்ததற்கு தகுந்தவாறே அரசாங்கம் சட்டப்பூர்வமானதாக உள்ளதாகக் கோருகிறது. ஹாப்சின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் முக்கியத்துவம் யாதெனில் அரசைப் பற்றிய ஓர் தர்க்க மற்றும் அறிவியல் பகுப்பாய்வாக அவர் நம்பினார். மனிதர்கள் தங்களுடைய பகுத்தறிவின் அடிப்படையில் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்குத் தக்கவாறே ஒப்புதல் அளிப்பர் எனவும் அவர் வாதிடுகிறார்.


இறையாண்மை (Sovereignty)

தனிமனிதனுக்கும், அரசனுக்கும் இடையேயோன உறவு என்பது முழுமையான அதிகாரமற்ற நிலை மற்றும் முழுமையான அதிகார ஒன்றிப்பு ஆகியவற்றிற்கு இடையேயானதாகும். பொதுநலக் கூட்டமைப்பில் (Commonwealth) தனிமனிதனின் அனைத்து அதிகார அடிப்படைகளையும் நீக்குவதுடன் அதனை அரசனிடம் ஒருமுகப்படுத்துவது அவசியமாகும் என ஹாப்ஸ் வாதிடுகிறார். வேறு வழியில் கூறவேண்டுமென்றால் மனிதனின் பகுத்தறிவின்மைக்குத் தக்கவாறு சட்டம் மற்றும் ஒழுங்கினை நிலைநாட்டுவதில் சற்றும் அதிகாரக் குறைவுபடாத ஓர் முழுமையான இறைமையாளரை உருவாக்குவதற்கு ஹாப்ஸ் ஆதரவளித்தார். ஓர் முழுமையான அதிகாரத்தை உருவாக்கும் முழுமையான தேவை அவரது அரசியல் சிந்தனைக்குத் திறவுகோலாக அமைகிறது. இறைமையாளர் ஒருவராகவோ ஓர் அவையாகவோ இருப்பினும் ஹாப்ஸ் தனி மனிதனின் இறையாண்மை மிக்க அதிகாரத்தை விரும்பித் தேர்வுசெய்கிறார்.

  அச்சம் மற்றும் சுதந்திரம் ஆகியவை நிலையானது ஆகும்

  சுதந்திரம் மற்றும் தேவைகள் ஆகியவை நிலையானது ஆகும்

  சமர்ப்பித்தல் என்பது நமது கடப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகும் இரண்டையும் உள்ளடக்கியதாகும்

  சட்டத்தின் அமைப்பைச் சார்ந்தே பிற சுதந்திரங்கள் உள்ளன.


மதிப்பீடு

ஹாப்சின் முக்கியத்துவம் அவரது அரசியல் தத்துவத்தில் மட்டுமல்ல அரிஸ்டாட்டிலின் சிந்தனைக்கு எதிரான அவருடைய பங்களிப்பு மற்றும் அரசியலைப் பற்றிய பொருள் முதல்வாதக் கருத்தாக்கம் ஆகியவற்றிலும் உள்ளது. அவருடைய படைப்புக்களின் வாயிலாக இலக்கற்ற நோக்கில் அரசியலைப் புரிந்து கொள்வதில் என்பது தொடங்கியது எனலாம். அவரது அரசியல் தத்துவமே ஜான்லாக், ஜீன் ஜாக்குவஸ் ரூசோ, இம்மானுவேல் காண்ட் போன்ற பிற அரசியல் சிந்தனையாளர்களுக்கு அடிப்படையாக இருந்தது. அவர்கள் தற்கால அறிவியல் அணுகுமுறையின் வழியே அரசியலை ஆராயும் ஹாப்சின் மரபினைப் பின்பற்றினர்

11th Political Science : Chapter 7 : Political Thought : Thomas Hobbes - Political Thought in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை : தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) (பொ.ஆ. 1588 - பொ.ஆ. 1679) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை