ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill)
(பொ.ஆ.1806- பொ.ஆ.1873)
கற்றலின் நோக்கங்கள்
❖ ஜே. எஸ். மில்லின் அரசியல் சிந்தனையைப் புரிந்து கொள்ளுதல்
❖ பயன்பாட்டுவாதம் மற்றும் சுதந்திரம் பற்றிய கூர் மதிப்பீட்டினை அறிதல்
வாழ்க்கை மற்றும் படைப்புகள்
மே 20, 1806-ல் ஜான் ஸ்டூவர்ட் மில் லண்டனின் வடக்குப் புறநகர்ப்பகுதியில் உள்ள பென்டன் வில்லே (Bentonville) என்னுமிடத்தில் ஹரியத் பரோ (Harriet Barrow) மற்றும் ஜேம்ஸ் மில் (James Mill) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவராவார். ஒரு சமூக மற்றும் அரசியல் சிந்தனையாளராக ஜான் ஸ்டூவர்ட் மில்லின் வளர்ச்சியினை மூன்று குறிப்பிட்ட காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது காலகட்டம், இவரின் குழந்தைப் பருவ பயிற்சி காலமாகும். இக்காலகட்டத்தில் இவர் தனது தந்தை ஜேம்ஸ் மில் மற்றும் ஜெரேமி பெந்தாம் ஆகியோரிடம் குழந்தைப்பருவத்தில் பயிற்சி பெற்றார். இரண்டாவது காலகட்டமாக 1830 களின் இறுதியில் அவர்தம் முன்னிருபது வயதினில் சந்தித்த மனப்போராட்டங்களில் இருந்து மீளுதலும், தீவிரத் தத்துவப்போக்கு கலைந்து தனித்துவம் பெறுதல் ஆகியவையுமாகும். இக்காலகட்டத்தில் தான் அவர் பலதரப்பட்ட அறிவுப்பூர்வமான மற்றும் உணர்வுப்பூர்வமான தாக்கங்களின் அடிப்படையில் தன் சிந்தனையை மறுவடிவமைத்துக் கொண்டார். அவரது வாழ்வின் இறுதிக் காலகட்டமான, அடுத்த முப்பது ஆண்டுப்பணியில் அவரது முக்கியப் படைப்புகளான தர்க்கவாத முறைமை (A System of Logic), அரசியல் பொருளாதாரத் தத்துவத்தின் கொள்கைகள் (Principles of Political Economy), சுதந்திரம் (On Liberty), பிரதிநிதித்துவ அரசாங்கம் மீதான பரிசீலனைகள் (Considerations of Representative Government) போன்றவை பதிப்பிக்கப்பட்டன.
சுதந்திரம் (On Liberty)
1859-ல் வெளியிடப்பட்ட 'சுதந்திரம்' (On Liberty) என்னும் நூல் மில்லிற்கு நீடித்த புகழைத் தேடித்தந்தது. பிரபுக்களாட்சியிலிருந்து, மக்களாட்சிக்கு, அமைப்புக்கள் மாற்றம் பெற்ற போது அதனுடன் நன்மைகள் மற்றும் தீமைகளும் உடன் வந்தன. அதற்கு முந்தைய சகாப்தங்களின் ஆட்சிகளை விட சமூகப் பெருந்திரளான மக்களின் ஆட்சியாக மிகவும் வலிமையுடன், சீராகவும் எங்கும் நிறைந்திருக்கக் கூடியதாகவும் மக்களாட்சி விளங்குகிறது. பெரும்பான்மையின் ஆதிக்கம் என்பது முடியாட்சியை விட இடர்நிறைந்ததாகவும், சட்டமியற்றுவதன் மூலம் தனிமனிதர்களின் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் திறனுள்ளதாகவும் உள்ளது. மக்களாட்சியிலான சமூகத்தில் சமுதாய அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு போன்ற முறை சாராத வழிமுறைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. கருத்து, பண்பு மற்றும் நடவடிக்கையை அனுசரிக்கக்கூடியவற்றினை மறைக்கும் திறன் அத்தகைய அதிகாரங்களுக்கு உண்டு என மில் வெளிப்படுத்துகிறார். இத்தையை சூழலில் தான் சுதந்திரம் என்ற நூல் எழுதப்பட்டது. இப்படைப்பின் நோக்கம் அதன் முதல் அலகில் எழுதப்பட்டதுடன் ஒரு எளிமையான கொள்கையை உறுதியாகக் கூறுகிறது. 'மனிதகுலத்திற்குத் தனியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாகவோத் தேவைப்படும் ஒரே நோக்கம் என்னவெனில் எத்தகைய எண்ணிக்கையிலான சுதந்திரமான நடவடிக்கை என்றாலும் சுய பாதுகாப்பிற்காக தலையிடக்கூடியதாகும்'. (சுதந்திரம் XVIII 223) இவ்வாறு மில்லின் இந்த நடைமுறைத் தத்துவம் அடிப்படையில், பயன்பாட்டுவாதமாகும்.
மில் தனது சுதந்திரம் என்னும் நூலில் கருத்து, விவாதம், பண்பு மற்றும் செயல்பாட்டுச் சுதந்திரத்திற்கான பல்வேறு மூல உபாயங்களை முன்வைத்து வாதிடுகிறார். கருத்து மற்றும் விவாதத்திற்கான சுதந்திரம் பற்றி'சுதந்திரம்' என்னும் நூலின் இரண்டாவது அலகில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் உணர்ச்சி வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கு எதிரான வாதங்களை விளக்கியுள்ளார். சுதந்திரத்தின் மூன்றாவது அலகில் பண்பியல் சுதந்திரம் (தனி மனிதத்துவம்) என்பதற்கு சாதகமான வாதங்களை முன்வைக்கிறார். மில் தனிமனிதர்களின் சுயபண்பியல்புகளின் மேம்பாட்டினாலான தனிமனித புறவெளிச் சுதந்திரத்திற்காக வாதிடுகிறார். அது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறார். 'மனிதனின் தன்மை என்பது எந்திரத்தைப் போல ஒரு மாதிரியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு, குறித்துக் கொடுத்த பணியினைத் துல்லியமாக செய்யுமாறு உள்ளதல்ல. ஆனால் ஒரு மரமாக, அனைத்துப் பகுதிகளிலும் தானே வளர்ந்து மேம்படுவதுடன் உள்ளார்ந்த சக்திகளின் மனப்போக்கின் படி அது உயிருள்ளதாகிறது'. (சுதந்திரம் XVIII 263). மில்லின் கருத்துப்படி பெருந்திரள் சமுதாயம் என்பது சுய அடக்குமுறைத்த ன்மையுடையதாகவும் மனிதனின் ஆற்றல் மற்றும் திறனை நலிவடையச் செய்வதாகவும் உள்ளது.
விக்டோரியா சமுதாயம் (Victorian Society) என்பது மரியாதையான நடத்தைத் தொகுதியால் கிறிஸ்துவ சுயமறுப்பின் அடிப்படையில் ஆளப்படுகிறது எனக் கூறுகிறார். இதற்கு மாறாக மில் சுயமேம்பாட்டின் கிரேக்க மாதிரியினை ஊக்கப்படுத்துகிறார். தனிமனிதர்கள் தங்களின் வாழ்வாதாரங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் சூழலை உருவாக்குவது சமுதாயத்திற்கு முக்கியமானதாகும். இது பலவகை வேற்றுமையைப் பண்பு மற்றும் பண்பாட்டில் இயலச் செய்வதுடன் உற்பத்தி இழுவிசை எந்திரமாக மாறி தேசத்தினை முன்னெடுத்துச் செல்கிறது. 'சுதந்திரம்' எனும் நூல் முழுவதுமே மில் சட்டமன்றம் அல்லது அரசின் வலிந்த மாற்றத்திலிருந்தும், ஏமாற்றக்கூடிய சமூக வலிந்த மாற்றத்தின் வடிவங்களிலிருந்தும் தனிமனித சுதந்திரத்தினைப் பாதுகாக்க நாடுகிறார்.
பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மீதான பரிசீலனைகள் (Considerations on Representatived Government)
1861 ஆம் ஆண்டு மில்லின் அரசியல் பற்றிய கருத்துக்களைக் கொண்ட பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மீதான பரிசீலனைகள் பதிப்பிக்கப்பட்டது. மில் ஒரு பற்றுறுதியுள்ள மக்களாட்சி வாதியாவார். எனினும் அவரது படைப்பு தன்னாட்சி அரசாங்கம் பற்றிய ஏமாற்றங்கள், சந்தேகங்கள் மற்றும் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. அவரது கருத்து முரண்பாடான தன்மை கொண்டதாக உள்ளது. அதாவது பெரும்பான்மையினரே ஆட்சி செய்தாலும் சிறுபான்மையினர் ஆட்சியே அநேகமாக சரியாக உள்ளது எனக் கருதுகிறார். பெரும்பான்மையிடம் அதிகாரம் இருந்தாலும் சிறுபான்மையினரிடமே ஞானம் உள்ளது என வாதிடுகிறார். இப்படைப்பில் மில் நல்ல அரசாங்கத்தை வரன்முறைப்படுத்துவதற்காக பெரும்பான்மையின் கொடுங்கோன்மையினால் ஏற்படும் அபாயங்களை வெளிப்படுத்துகிறார். ஒட்டுமொத்த சமூகத்திடமும் இறையாண்மை உள்ள பிரதிநிதித்துவ முறையே லட்சிய அடிப்படையில் சிறந்த அரசாங்க முறையாகும் என நிறைவு செய்கிறார். ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்பொழுதேனும் அரசாங்கத்தின் பொதுவான மக்கள் பணிகளில் உண்மையாகப் பங்கேற்க அழைப்பு வரும் என்கிறார்.
மதிப்பீடு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரந்து விரிந்த அறிவியல் சிந்தனை வரலாற்றில் ஜான் ஸ்டூவர்ட் மில் முக்கிய இடத்தினைப் பெறுகிறார். அவரது படைப்புக்கள் அரசினைப் புரிந்து கொள்ளவும், முறையாகக் கற்றறியவும், மனிதனின் தன்மையினுடைய முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகிறது. அவர் வாக்குரிமை பற்றிய சுயதத்துவத்தினைத் தானே மேம்படுத்தினார். மில் கூறுகையில் 'சுவாசிக்கும் காற்றைப் போல மனிதனுக்கு அரசியல் விலங்காக வாக்களித்தல் அவசியாமாகும்' என்கிறார். மில்லைப் போன்று வாக்களித்தலைப் பற்றிய கருத்தாக்கத்தினை வேறு எந்த அரசியல் சிந்தனையாளரும் வலியுறுத்தியதில்லை. மில்லின் மீதான பயன்பாட்டுவாதத்தின் தாக்கமானது அவரது பொருளாதாரக் கொள்கை மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கம் பற்றிய கருத்துகளை உருவாக்கியதில் முக்கியமானதாகும். பிரதிநிதித்துவ அரசாங்கத்தில் தனிமனிதன் தனது திறனை மேம்படுத்துவதற்கான சுதந்திரத்தில் தலையீடு இருக்கவே கூடாது என்றார். மில்லின் இந்த ஒவ்வொரு தலைப்பும் ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இருப்பதனை இத்துறையின் எந்தவொரு மாணவனும் புறந்தள்ளிவிடமுடியாது.
உங்களுக்குத் தெரியுமா?
❖ பயன்பாட்டுவாதம் என்பது அதிக எண்ணிக்கையிலானவர்களின் அதிகப்படியான மகிழ்ச்சியாகும்
❖ ஜேம்ஸ் மில் மற்றும் ஜெரேமி பெந்தாம் ஆகிய பயன்பாட்டு சிந்தனையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஜே.எஸ். மில் கொண்டு வரப்பட்டாலும் பயன்பாட்டு வாத்த்தினைப் பற்றிய மாறுபட்ட சிந்தனையினை அவர் தந்தார்.