காரல் மார்க்ஸ் (Karl Marx)
(பொ.ஆ.1818- பொ.ஆ. 1883)
கற்றலின் நோக்கங்கள்
❖ காரல் மார்க்சின் அரசியல் சிந்தனையைப் புரிந்து கொள்ளுதல்
❖ காரல் மார்க்சின் சிந்தனைதர்க்கவாதப் பொருள் முதல்வாதம் - உபரி மதிப்புக் கோட்பாடு - வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சி - பாட்டாளிகளின் சர்வாதிகாரம் - அரசு உதிர்தல் ஆகியவை பற்றிய காரல் மார்க்சின் சிந்தனையை அறிந்து கொள்ளுதல்
அறிமுகம்
நாம் உலகினைப் பார்க்கக்கூடிய பார்வையினை மாற்றிய ஒரு சிலரில் காரல்மார்க்சும் ஒருவராவார். மார்க்சைப் பொறுத்தவரையிலும் கோட்பாடு என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல ஒருபடி முன்னே சென்று உலகை மாற்றுவதற்கும் ஆதரவளிக்க வேண்டும். இவரது படைப்புக்களான - பொதுவுடைமை அறிக்கை, வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்தாக்கம் மற்றும் மூலதனம் ஆகியவை உழைக்கும் வர்க்கத்தின் சுயவிடுதலை என்னும் ஒரே இலக்கை நோக்கிய பல்வேறு பொருளாதார கருத்துகளின் உச்ச நிலையாகும். ஹெகல், புனித சைமன், ஜே.சி.எல்டி சிஸ்மாண்டி, டேவிட் ரிக்கார்டோ, சார்லஸ் ஃபோரியர் மற்றும் லூயிஸ் பிளான்க் போன்ற முந்தைய சிந்தனையாளர்களிடமிருந்து பல்வேறு கூறுகளை மார்க்ஸ் பெறுகிறார் என்பதனை அறிவது முக்கியமாகும்.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் நீங்கள் இழப்பதற்கு உங்கள் விலங்கினைத் தவிர வேறோன்றுமில்லை. - காரல் மார்க்ஸ் (Karl Marx)
ஐரோப்பாவில் சமதர்மத்தின் வளர்ச்சிக்கு 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி சாட்சியானது எனலாம். இக்காலகட்டம் 'இரட்டைப்புரட்சி சகாப்தம்' என அறியப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் அரசியல் அடிப்படையில் 1789ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டு முழுமையான முடியாட்சி தூக்கி எறியப்பட்டதுடன் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் உள்ள குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரெஞ்சு மனிதனின் உரிமையும் பறைசாற்றப்பட்டது. இக்காலத்தின் இரண்டாவது முக்கியப் புரட்சியாக ஐரோப்பாவில் நீண்ட நெடிய தாக்கத்தினை ஏற்படுத்தியது தொழிற் புரட்சியாகும்' (Industrial Revolution). இவ்விரண்டு நிகழ்வுகளும் மார்க்சின் படைப்புகளின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின.
மார்க்சின் படைப்புகள்
பொதுவுடைமை அறிக்கை (Communist Manifesto)
பொதுவுடைமை அறிக்கை (1848) என்பது காரல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏங்கல்சின் கூட்டுப் படைப்பாகும். இது 1850ஆம் ஆண்டிற்கு முன்னர் ஐரோப்பாவில் இருந்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பெருங்குழப்பங்களின் விளைவான படைப்பாகும்.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
தற்பொழுது வரையிலான அனைத்து சமுதாயங்களின் வரலாறுமே வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகும். - காரல் மார்க்ஸ் (Karl Marx)
இக்கட்டுரை புரட்சியின் வாயிலான சமூக மாற்றத்தினை விளக்குகிறது. வர்க்கப் போராட்டத்தின் தன்மை என்பது
உற்பத்தியின் தன்மைக்குத் தக்கவாறு மாறுபடும் என பொதுவுடைமை அறிக்கை வாதிடுகிறது. ஆகவே விவசாய உற்பத்தியை முக்கிய வடிவமாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ சமுதாய முறைகளில் வர்க்கப் போராட்டம் என்பது உடமையாளர்களுக்கும் (தொழிற்சாலை உரிமையாளர்கள்), பாட்டாளிகளுக்கும் (தொழிற்சாலை பணியாளர்கள்) இடையே நடப்பதாகும். உண்மையில் முழுமையான சமுதாயமானது மேன்மேலும் பிளவுபட்டு இருபெரும் பகைமை முகாம்களாகிவிட்டது. அவை ஒன்றையொன்று நேரடியாக எதிர்த்து நிற்கக்கூடிய இருபெரும் வர்க்கங்களாக, உடமையாளர்கள் மற்றும் பாட்டாளிகள் என்றானது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் இம்மெய்க்கோளின் சாட்சியாகக் கூறுவது யாதெனில் தற்பொழுது வரையிலான அனைத்து சமுதாயங்களின் வரலாறுமே வர்க்கப் போராட்ட வரலாறு என்பதாகும்.
பொதுவுடைமை அறிக்கையை நிறைவு செய்யும் வகையில் இரு கருத்துகள் அருகருகே வைக்கப்படுகின்றன. ஒன்று பாட்டாளிகளை ஆளும் வர்க்கம் என்ற நிலைக்கு உயர்த்துவது ஆகும். மற்றொன்று மக்களாட்சி யுத்தத்தில் வெற்றி பெறுவதாகும். மார்க்ஸ் இப்படைப்பில் தனிநபர் சொத்து என்பதற்குப் பதிலாக அனைத்துச் சொத்துக்களையும் பொதுவான கட்டுப்பாட்டில் வைப்பதை பொதுவுடைமைவாதிகள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மூலதனம் (Das Capital)
மார்க்சின் தலைசிறந்த படைப்பான மூலதனம் 1867-ல் பெர்லினில் வெளியிடப்பட்டபோது அது 'உழைக்கும் வர்க்கத்தின் வேதாகமம்' (Bible of the Working Class ) என்று விவரிக்கப்பட்டது. மார்க்சின் வாழ்நாளில் அதன் முதல் தொகுதி மட்டுமே நிறைவுபெற்று வெளியிடப்பட்டது. மார்க்ஸ் நிறைவு செய்யாத இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் ஏங்கல்ஸ் அவர்களால் தொகுத்து அமைக்கப்பட்டு 1885 மற்றும் 1894ல் வெளியிடப்பட்டது. முதல் தொகுதியானது, மூலதனத்தின் உற்பத்தி நடைமுறையினைப் பற்றியதாகும். இரண்டாவது தொகுதி மூலதனத்தின் சுழற்சி நடைமுறையினைப் பற்றியதாகும். மூன்றாவது தொகுதி முதலாளித்துவ உற்பத்தியின் ஒட்டுமொத்த நடைமுறையினைப் பற்றியதாகும்.
இயங்கியல் பொருள் முதல்வாதம் (Dialectical Materialism)
இயங்கியல் பொருள் முதல்வாதம் என்பது காரல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோரின் போதனைகளிலிருந்து உண்மையில் பெறப்பட்டத் தத்துவார்த்த அணுகுமுறையாகும். கோட்பாடு அளவில் தர்க்கவாதப் பொருள் முதல்வாதம் என்பது அறிவியல் பிரச்சனைகளைப் புலனாய்வு செய்ய பொதுவான உலகளாவிய பார்வை மற்றும் அதற்கான முறையினைத் தந்துள்ளது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் சமுதாயத்தினுடைய ஒவ்வொரு அடிப்படைப் பிரிவினையையும் பொருளாகப் பார்ப்பதுடன் சமூக மாற்றம் என்பது எதிர்த்தரப்பினரின் போராட்டத்தின் மூலமே நிகழும் என்றனர். கொள்கையளவில் பொருள் முதல்வாதம் என்பது சமுதாய உலகைப்பற்றியதாகும். பொருள் சார்ந்த உலகம் எப்பொழுதும் இயக்க நிலையிலும், முரண்பாடுகள் மற்றும் மாற்றங்களுடனும் இருக்கும். சமுதாயத்தின் நிலையான இயக்கத்தினால் ஏற்படும் உராய்வுகள் சமூக முரண்பாடுகளுக்கு வழி செய்வதன் விளைவாக சமூக மாற்றம் ஏற்படுகிறது. தர்க்கவாதப் பொருள்முதல்வாதம் என்பது சமுதாய உலகைப் பற்றியதாகும். தர்க்கவாதப் பொருள்முதல்வாதம் என்பது சமுதாய உபரி நடைமுறைகள் தொடர்பானதாகும்.
உபரி மதிப்புக் கோட்பாடு (Theory of Surplus Value)
உபரி மதிப்புக் கோட்பாடு என்பது மூலதனம் என்ற நூலில் உள்ளதாகும். மனிதனின் உழைப்பு என்பது பொருளாதார மதிப்பின் ஆதாரமாகும் என காரல் மார்க்ஸ் கருதுகிறார். ஆகவே 'உபரி மதிப்பு’ என்னும் பதம் உழைப்பு மற்றும் உழைப்பாளர் சக்தியின் வேறுபாட்டினைக் குறிப்பதாகும். தொழிலாளியின் அதிகப்படியான உழைப்பினால் கிடைக்கும் 'உபரி மதிப்பு’ முதலாளிகளைச் சென்று சேர்கிறது. எத்தனை நீண்ட வேலை நாள் என்பது முக்கியமல்ல, ஆனால் உபரி மதிப்பு என்பது உருவாகிறது. ஒருவேளை தொழிற்சாலையில் ஒரு மணிநேரம் வேலை நடந்தாலும் முதலாளிகள் அவர்களது பங்கான உபரி உழைப்பினை வலிந்து வெளிக்கொணர்கின்றனர். இதுவே உபரி மதிப்பாகும். முதலாளிகள் தங்களின் தொழிலாளர்களுடைய உழைப்பின் மதிப்பினை விடக் குறைவாகவே ஊதியமளிக்கின்றனர். அது பெரும்பாலான தருணங்களில் தொழிலாளர்களை ஜீவன நிலையில் வைத்திருக்க மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
செயல்பாடு
மார்க்சின் படைப்புகள்
❖ ஹெகலின் உரிமைகள் பற்றிய தத்துவம் மீதான கூர்மதிப்பீடு,
❖ புனிதக் குடும்பம், பியுபர்சேச் பற்றிய ஆய்வேடு,
❖ ஜெர்மானிய லட்சியவாதம்,
❖ பொதுவுடைமை அறிக்கை,
❖ கோதா திட்டத்தின் கூர்மதிப்பீடு,
❖ மூலதனம்
வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சி (Class Struggle and Revolution)
வர்க்க உணர்வு நிலை மற்றும் போராட்டம் ஆகியவை உற்பத்தியின் சமூக உறவுகளுடன் தொடர்புடையது ஆகும். மார்க்ஸ் வர்க்கத்தை ஓர் லட்சியவாதக் காரணியாகப் பார்க்காமல் குறிப்பிட்ட சமூக நிலையிலுள்ள மனிதனாகப் பார்க்கிறார். 'வர்க்கம்' என்னும் பதம் சொத்து அடிப்படையிலான உரிமையினைக் குறிப்பதாகும். உதாரணமாக உடமையாளர்கள் (உற்பத்தி வழிமுறைகளைச் சொந்தமாக்கியவர் மற்றும் நில உடமையாளர்கள்) மற்றும் பாட்டாளிகள் ஊதியத்திற்காக தனது உழைப்பினை விற்பவர்) ஆகியோரைக் குறிப்பிடலாம்.
மார்க்சின் படைப்பான 'பிரான்சின் வர்க்கப் போராட்டம்' என்னும் நூல் 1848 முதல் 1850 வரையிலான காலகட்டத்தில் வர்க்கப்போராட்டத்தின் வாதங்கள் மற்றும் புரட்சியின் தேவையினை மதிப்பிடுகிறது. 1848ம் ஆண்டு நடந்த பிரெஞ்சுப் புரட்சியின் அடிப்படையில் தமது வர்க்கப் பிளவுக் கருத்தை மார்க்ஸ் கொண்டிருந்தார். இப்புரட்சியின் போது உடமையாளர்கள் மற்றும் பாட்டாளிகள் ஆகியோர் இணைந்து பிரபுக்களாட்சிக்கு எதிராகப் போராடி குடியரசினைப் பிரகடனப்படுத்துவதில் வெற்றியடைந்தனர். பிப்ரவரிப் புரட்சியின் மூலம் பாட்டாளிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பின்னர் உடமையாளர்கள் தேர்தல் நடைமுறையினை தங்களுடைய சட்டபூர்வமான ஆட்சியின் உரிமையாகக் கோரினர். உடமையாளர் வர்க்கமானது உழைப்பாளர் வர்க்கத்தினை தமது அனைத்து தளைகளிலிருந்தும் விடுவிப்பதற்குப் பதிலாக அதிகமாக அவர்களை அந்நியப்படுத்தியது எனலாம்.
உடமையாளர்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரசு மற்றும் படைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க ஆரம்பித்ததுடன் பாட்டாளிகளை நசுக்க ஆரம்பித்தனர். இது முன்னதை உண்மையில் உள்நாட்டுப் போராக்கியது. வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு வழிகோலுவதாகவும், பாட்டாளிகளின் சர்வாதிகாரம் மற்றும் தனியார் உற்பத்தி ஒழிப்பு சமதர்மத்தில் முடிவதாகவும் வலியுறுத்துகிறார்.
பாட்டாளிகளின் சர்வாதிகாரம் (Dictatorship of the Probletariat)
'பாட்டாளிகளின் சர்வாதிகாரம்' என்பது உழைக்கும் வர்க்கமானது அதிகாரத்தில் அமர்வதைக் குறிக்க காரல் மார்க்ஸ் பயன்படுத்திய சொற்றொடராகும். மார்க்சைப் பொறுத்தவரை அது உடமையாளர்களின் அரசியல் ஆட்சியைத் தூக்கி எறிவதற்கும், வர்க்கமற்ற சமுதாயம் உருவாவதற்கும் இடைப்பட்ட காலமாகும். அரசியல் சிந்தனைக்கான மார்க்சின் அனைத்து பங்களிப்புகளைக் காட்டிலும் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்பது உண்மையான ஆளுகைக்கான பெரிதும் ஆழ்ந்த பொதி பொருளைக் கொண்டதாக விளங்குகிறது.
முதலாவது குழுவான உழைப்பாளர் வர்க்கம் (பாட்டாளிகள்), பாரம்பரியமான ஆளும் வர்க்கத்தின் (உடமையாளர்கள்) மீது தங்களின் அதிகாரத்தினை அழுத்தந்திருத்தமாக்கிய பின்னர் அனைத்து முதலாளித்துவ உற்பத்தி முறைகளும் ஒழிக்கப்பட்டு சமதர்ம உற்பத்தி முறைகள் முதன்மையாகின. சமதர்மத்திலான உற்பத்தி முறைகளை நிறுவியதன் விளைவாக சமுதாயத்தின் வர்க்கக் குழுக்கள் மறைந்து பாட்டாளிகளின் சர்வாதிகாரம் வந்தது.
அரசு உதிர்தல் (Withering Away of the State)
சமுதாயம் பல வர்க்கங்களாகப் பிளவுபட்டதன் விளைவாக, ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்கள் உருவாகி, அரசு சுரண்டலுக்கான கருவியாகிறது. இந்த வர்க்கப் பிளவு மிகவும் தீவிரமடைந்து பாட்டாளிகளின் சர்வாதிகாரத்திற்கு வழிகாட்டுகிறது. அரசாங்கத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக பாட்டாளிகளின் வெற்றிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பாட்டாளிகள், அரசின் கட்டுப்பாட்டினை எடுத்துக்கொள்வதுடன் உற்பத்தியின் வழி முறைகளை அரசின் உற்பத்தி வழிமுறைகளாக மாற்றுகின்றனர். அரசு மற்றும் உற்பத்தியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், பாட்டாளிகள் அனைத்து வர்க்க பேதங்கள் மற்றும் வர்க்கப் பகை முரண்பாடுகளையும் அழிக்கின்றனர். இதன் விளைவாக இறுதியில் அரசு உதிர்தல் நிகழ்கிறது.
மதிப்பீடு
1852ஆம் ஆண்டு மார்க்ஸ் தமது - பங்களிப்புக்களை மூன்று பிரிவுகளாகத் தொகுத்துள்ளார்:
அ) வர்க்கங்கள் (பாட்டாளிகள் மற்றும் உடைமையாளர்கள்) சமுதாயத்தின் நிரந்த இயல்பு அல்ல.
ஆ) வர்க்கப் போராட்டமானது பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்பதற்கு வழிசெய்து இறுதியாக உற்பத்தியை உழைப்பாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
இ) 'பாட்டாளிகளின் சர்வாதிகாரம்' என்பது வர்க்கமற்ற சமுதாயத்திற்கு வழிசெய்வதுடன் சமூக வேற்றுமைகள் மறைவதால் அரசு உதிர்ந்து போகிறது.
மனிதகுலத்தின் மீதான மார்க்சியத்தின் தாக்கத்தினை மனிதனின் மீதான மதத்தின் தாக்கத்துடன் மட்டுமே ஒப்பிட இயலும். ஏறத்தாழ உலகின் பாதி மக்கள்த் தொகை மார்க்சிய வாதத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதே சமயத்தில், மார்க்ஸ், தான் எழுதியவை அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும், அவரது படைப்புகள் பலரின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தின. மார்க்சியக் கோட்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளான, லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்கள் ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயன்று சாதித்தனர். தற்காலத்தில் பெரும்பாலான முன்னாள் பொதுவுடைமை நாடுகள் மக்களாட்சி தன்மையுடையவர்களாக மாறி உள்ளனர். இருப்பினும் வர்க்க மாறுபாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதை இச்சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, சமுதாயத்தில் முதலாளித்துவவாதிகள் மற்றும் சுரண்டல் ஆகியவை இருக்கின்ற வரையிலும் மார்க்சின் கருத்துகளைப் புறக்கணிக்கவோ, மறக்கவோ இயலாது எனலாம்.
உங்களுக்குத் தெரியுமா?
மார்க்சியவாதத்தின் மீதான தற்கால விவாதங்களின் முக்கிய அடிப்படைச் சால்புகள் தற்காலச் சமுதாயத்தில் உருவாகும் சில முக்கிய வடிவங்களிலான பிளவுகளை அடையாளம் காட்டுகின்றன. இவ்வகை விவாதங்கள் புதிய மார்க்சியவாதத்தின் எழுச்சிக்கு வகை செய்கின்றன.