ஜீன் ஜாக்குவஸ் ரூசோ (Jean Jacques Rousseau)
(பொ.ஆ.1712-பொ.ஆ.1778)
கற்றலின் நோக்கங்கள்
❖ ஜீன் ஜாக்குவஸ் ரூசோவின் அரசியல் சிந்தனையைப் புரிந்து கொள்ளுதல்
❖ மனிதனின் தன்மை, பொதுவிருப்பக் கோட்பாடு, இறையாண்மை மற்றும் சமூக ஒப்பந்தக் கோட்பாடு பற்றிய ஜீன் ஜாக்குவஸ் ரூசோவின் கருத்துக்களை அறிந்து கொள்ளுதல்.
வாழ்வும் காலமும்
தற்கால அரசியல் உரைக்கோவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தத்துவஞானிகளுள் ஒருவரான ஜீன் ஜாக்குவஸ் ரூசோ ஜுலை 28, 1772 -ல் ஜெனீவாவில் பிறந்தார். சிதறுண்ட குடும்பத்திலிருந்து வந்த ரூசோ பராமரிப்புடனான குழந்தைப் பருவ வாய்ப்பினை இழந்தார். ஒருசில பணிப்பயிற்சிகளுக்குப் பின்னர் தம்மை விடுவித்துக் கொண்டு ஜெனீவாவை விட்டுச் சென்று சுற்றித் திரியும் ஆவலில் வாழ்ந்தார்.
இளம் விதவையான டி வாரன்ஸ் அம்மையார் (Madame de Varens) உதவியுடன் தூரினிலுள்ள (Turin) மடாலயத்திலும் பின்னர் அன்னெசியிலுள்ள (Annecy) ஓர் இறையியல் கல்லூரியிலும் ரூசோவுக்கு முறைசார்ந்த கல்வி அறிமுகபடுத்தப்பட்டது. அந்நிறுவனங்களின் கற்பித்தல் முறையின் விளைவாக ஏற்பட்ட வெறுப்பு அவரை முறைசார்ந்த கல்வியைக் கைவிடத் தூண்டியது. தொடர் தோல்விகளால் 1730-ல் அவரை லியான்ஸ் நகருக்கு அனுப்ப அம்மையார் கட்டாய சூழலுக்குள்ளானார். ஓராண்டு அங்கு அலைந்து திரிந்த பின்னர் மீண்டும் 1731 -ல் அம்மையாரிடம் ரூசோ அடைக்கலமானார். 1740 வரை அம்மையாரின் கொடையிலேயே அவர் வாழ்ந்தார். அம்மையாருடைய அறிவு ஒளியின் தாக்கத்தினாலும், அவரது மதிப்புமிக்க உதவியினாலும் மாண்சியர் டி மால்பை (Monsier de Malby) குடும்பத்தில் ஆசிரியராக ரூசோ பணியில் சேர்ந்தார். இருப்பினும் அவர் தனது பணியை விட்டு விலகி இலக்கற்ற ஆத்மாவாக தனது பயணத்தினை தொடர்ந்தார்.
1744-ல் பிரான்சுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் அவரது வாழ்வில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியது. இசை, நாடகம், கவிதை மற்றும் பிறவற்றில் வெற்றிகரமில்லாத பல பரிசோதனைகளுக்குப் பின்னரும் ரூசோதனது உறுதி மற்றும் நேர்மறை மனநிலையினை தக்க வைத்துக்கொண்டார். 1749-ல் வருடம் அவரது வாழ்வில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது. டிஜோன் அகாடெமியானது 'அறிவியல் மற்றும் கலைகளின் முன்னேற்றம் நீதிநெறிகளை வீழ்ச்சியடைய வைத்துள்ளதா அல்லது தூய்மைப்படுத்த பங்களித்துள்ளதா?' என்னும் தலைப்பில் சிறந்த கட்டுரைக்கான பரிசினை அறிவித்தது. ரூசோ தனது ஒப்புதலில் பின்னர் எழுதும்போது நான் உடனடியாக மற்றொரு பிரபஞ்சத்தைப் பார்த்தேன், நான் வேறொரு மனிதனானேன் என்றார். 1750-ல் இவர் சமர்ப்பித்த படைப்பிற்கு முதல் பரிசு கிடைத்தது. அது பின்னர்'கலைகள் மற்றும் அறிவியல்களினுடைய நீதிநெறி விளைவுகளின் சொற்கோவை' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது.
1754 -ல் ஜெனீவாவிற்குத் திரும்பிய பின்னர் கத்தோலிக்கரான ரூசோ கால்வினிச சமயப்பிரிவினை ஏற்றுக் கொண்டு குடியுரிமையை மீண்டும் பெற்றார். பாரீசுக்குப் பயணப்பட்ட பின்னர் அவர் எட்டு ஆண்டுகள் தமது வாழ்வினை மாண்ட்மோரென்சியில் (Montmorency) டி எஃபினே அம்மையாரின் (Madame d' Epinay) மாணவராகக் கழித்தார். புதிய ஹெலாய்சே - New Helosie (1761), எமிலி - Emile (1762), சமூக ஒப்பந்தம் - Social Contract (1762) ஆகிய மிக முக்கியப் படைப்புக்களை இக்காலகட்டத்தில் தான் ரூசோ உருவாக்கினார். அவரது புத்தங்களுக்குப் பதிலாகக் கண்டனங்களையே பெற்றதால் பல்வேறு இடங்களுக்கு அவர் குடிபெயர வேண்டியதாயிற்று. ஜுலை 2, 1778-ல் ரூசோவின் மறைவு அதிர்ச்சியுடனும், தத்துவத்திற்குப் பெரும் இழப்பாகவும் பார்க்கப்பட்டது.
மையக் கருத்துக்கள்
அரசியல் தத்துவ உலகினில் ரூசோ முக்கிய நிலையினை வகிக்கிறார். அவரது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்காக அவர் முக்கியமாக அறியப்படுகிறார். தீவிர சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளரான ரூசோ 'பொதுவிருப்பம்' (General Will) மூலமாக அரசின் தோற்றத்தினை வெளிப்படுத்த முனைகிறார். 'இயற்கை நிலை' மற்றும் 'சமூக ஒப்பந்தம்' ஆகிய இரு வளர்ச்சி நிலைகளின் விளைவே அரசின் தோற்றத்திற்கான இயற்பண்பாகிறது என்று கூறுகிறார்.
இயற்கை நிலை (State of Nature)
ஹாப்சைப் போலன்றி ரூசோவின் கருத்துரைப்படி நிறைவான சுதந்திரம், சமத்துவம் மற்றும் நிறைவான பேதைமை ஆகியவற்றின் சுருக்கமே இயற்கை நிலை ஆகும். அதனை அவர் மிகவும் அமைதியான மற்றும் மகிழ்வூட்டும் ரம்மியமான சூழலாக அடையாளம் காட்டுகிறார். இயற்கை நிலையில் மனிதன் தனிமையில் ஆசைகளற்ற சுதந்திரமான வாழ்வு வாழ்ந்தான். முன்பின் முரணான சீரமை வாழ்வு மற்றும் தெளிவற்ற பேச்சு இருப்பினும் வாழ்வு என்பது மனநிறைவு, சுதந்திரம், தன்னிறைவு மற்றும் வளம் ஆகியவற்றால் வடிவம் பெறுகிறது.
பொல்லாங்கின்மையே ரம்மியமான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. அவருடைய வார்த்தையின்படி 'மேலான பேரின்பம்' காலத்தின் விதிமுறையாகும்.
காலப்போக்கில் மனித வாழ்வினுடைய நாகரீகத்தின் மாற்றங்களால் அந்நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இயற்கை நிலை நீடிப்பதற்குச் சவால்களாக மாறுபடும் தட்பவெப்பம், பருவகாலம் மற்றும் மண் சார் தொழில் அமைவு, தனிநபர் சொத்து ஆகிய பலதரப்பட்டக் காரணிகளை அவர் ஒப்புக்கொள்கிறார். ரூசோவின் கருத்துப்படி மனிதனின் முன்னேற்றம் மற்றும் உயர்வான பகுத்தறிவுடன் கூடிய புரட்சி என்பது, மனித சிந்தனை மற்றும் வாழ்வில் இருப்பின், அதன் தொடர்ச்சியாக புதிய அடுக்கிலான தீமைகளைக் கொண்டு வரும். இத்தொடர் மாற்றங்களே, இயற்கை நிலையின் கட்டமைப்பினை அசைத்துப் பார்த்து, சமத்துவமின்மையின் தோற்றத்திற்கு வகை செய்வதாக அடையாளப்படுத்துகிறார். தனிநபர் சொத்து என்னும் கருத்தாக்கமே சமூக கோளத்தில் ஏழை மற்றும் பணக்காரன் என்ற புதிய பிளவினை உருவாக்கியுள்ளது. அவரின் சொற்படி 'முதல் மனிதன் ஒரு துண்டு நிலத்தை வேலி போட்டுத் தனக்குத் தானே இது என்னுடையது என்று கூறிக்கொண்டதை மக்கள் நம்புவதைக் கண்டான். அவனே குடிமைச் சமூகத்தின் உண்மையான நிறுவனராவான்' என்று கூறுகிறார்.
அக்காலமானது தொடர் போர்கள், கொலைகள் மற்றும் ஏழை, பணக்காரன், பிளவு ஆகியவற்றின் சாட்சியாக இருந்தது. இப்புதிய முறைமை காட்டுமிராண்டி அரசில் காணப்படாத பிரபஞ்ச அளவிலான தீமைகளை அனுமதித்தது. இத்தகைய திருப்பம் நிறைந்த சம்பவங்களின் தவிர்க்க முடியாத உச்சகட்டமாக சமத்துவமின்மை உதயமானதுடன் எஜமானர் மற்றும் அடிமைகள் என்ற அடுக்கினை உருவாக்கியது. இரண்டு மெய்க்கோள்களின் அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான செயல்பாடு இருப்பதாக ரூசோ கருத்து தெரிவிக்கிறார்.
முதலாவதாக ஒவ்வொருவரும் தனது சுய நல்வாழ்விற்காகவும், சுய பாதுகாப்புத் தேவைக்காகவும் உந்தப்படுகின்றனர். இரண்டாவது மரணத்தைப் பற்றிய பயமாகும். அவர் பகுத்தறிவு மற்றும் காரண காரிய அறிவின் தோற்றத்தினை ஆழ்ந்த உணர்வு நிலையில் காண்கிறார். மனிதர்கள் இயற்கையில் சிந்திக்கும் திறனற்றவர்கள் என்பது ரூசோவின் கருத்தாகும். குடிமைச் சமூகம் இயற்கைக்கு முரணானதாகவும், மனிதனின் பகுத்தறிவினுடைய வெளிப்பாடாகவும் உள்ளது. இயற்கைக்குத் திரும்புதல் என்னும் முழக்கத்தினை இவர் வலியுறுத்தினார். அவருடைய கோரிக்கையான இயற்கைக்குப் பின்னோக்கிச் செல்லுதல் என்பது புதிதாகப் பின்னப்பட்ட சமூகக் கட்டமைப்பினைத் தகர்ந்து போகச் செய்வதைக் குறிப்பதற்கு ஒப்பானதல்ல, ஆனால் இயற்கை விதிக்கானதாகும். தத்துவம் மற்றும் பகுத்தறிவே மனித வாழ்வினை கவர்வதுடன் இயல்பாற்றலை வெளிப்படுத்துவதாக ரூசோ கூறுகிறார்.
சமூக ஒப்பந்தம் (Social Contract)
இயற்கை நிலையின் ரம்மியமான பண்பு குறுகிய காலமே நீடித்தது. பொருளாதார உயர்வு மற்றும் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட மனிதனின் சிக்கலான வார்ப்புருக்கள் வெளிப்பட்டது பேரழிவிற்கு வகை செய்கின்றன. குடிமை அரசினை அமைப்பதைத் தவிர மனிதர்களுக்கு வேறு வழியில்லை . அது சமூக ஒப்பந்த அம்சம் மூலமாக நிறைவேறியது. சமூக ஒப்பந்தத்தின் ஆறாவது அத்தியாயத்தில் ரூசோ கூறுவது யாதெனில் 'மனிதர்கள் தொடக்க நிலையில் ஜீவித்திருந்த வரன்முறைகளைத் தாண்டிய ஓர் நிலையில், தான் நீடித்திருக்கும் முறையினை மாற்றிக் கொள்ளாவிடில் மனித இனமே அழிந்து விடும் என அனுமானிக்கிறேன்' என்பதாகும். இயற்கை நிலை என்பதன் வெற்றி தனிமனிதர்களின் சுயநலத்திற்கான தேடலின் ஒரு குறிப்பிட்ட நிலையில், பிறரின் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பாதுகாப்பின்மைக்கு முன் தமது சுயபாதுகாப்புத் திறன் அடிப்படையில் போதுமான வலிமையற்றவராக உணர்வது வரையிலாகும். சமூக ஒப்பந்தத்தின் பயன்பாடு என்பது ஒப்பந்தத்தில் நுழைவது வரை தனிமனிதர்களிடம் இருந்த பெறப்பட்ட பாதுகாப்பிற்கான வாய்ப்புச் சூழலை ஏற்படுத்துவதாகும். அடுத்ததாக பாதுகாப்புத் தொடர்பான சக்தியைப் பற்றிய கேள்வியே தனிமனிதர்களிடம் உள்ள குழப்பமாகும். அவரைப் பொறுத்தவரையிலும் மனிதர்கள் எவ்வகைப் புதிய சக்தியையும் உருவாக்கும் திறனற்றவர்கள். ஏற்கனவே உள்ளவற்றை வழிகாட்டி திசைதிருப்ப மட்டுமே அவர்களால் இயலும். ஆகவே இப்பாதையில் ஒருங்கமைந்த அணுகுமுறையே அவரால் பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
மனிதனின் சுதந்திரமாகப் பிறக்கிறான், ஆனால் எங்கெங்கு காணினும் அவன் விலங்கிடப்பட்டிருக்கிறான். ஒரு மனிதன் தன்னையே பிறரின் எஜமானராக எண்ணுகிறான், எனினும் பிறரைக் காட்டிலும் மிகவும் அடிமையாகவே தொடர்ந்து காணப்படுகிறான். - ரூசோ (Rousseau)
எத்தகைய வடிவில் இருந்தாலும், ஒப்புதல் இல்லாத அதிகாரம் என்பது எளிதில் காணாமல் போகும் என கைவிடுகிறார். அவரது வாக்கின்படி உடன்படிக்கை மற்றும் ஒப்புதல் இல்லாத ஒரு மனிதனின் மீதான மற்றொரு மனிதனின் அதிகாரம் எத்தகைய பகுத்தறிவு அடிப்படையும் இல்லாததாகும். குடிமை அரசு பற்றிய ரூசோவின் சமன்பாடு பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. "ஒவ்வொருவரும் தான் மற்றும் தனது அதிகாரத்தினைப் பொது விருப்பம் என்ற மேலான வழிகாட்டுதலின் கீழ் ஒரே பெருநிறுவனத் திறனாக்கி பின் ஒவ்வொன்றும் பிரிக்க இயலாத முழுமையாகப் பெறப்படுகிறது". ஆகவே அரசு என்பது தனது உறுப்பினர்களிடமிருந்து மாறுபட்ட வாழ்வு மற்றும் சுய விருப்பம் கொண்ட ஒரு நீதிநெறியிலான அமைப்பாக உருவாகிறது. அரசாங்கம் என்பது தனிமனிதர்களை இணைத்து ஒன்றாக்குவது மட்டுமல்ல உள்ளார்ந்த அடையாளம், ஆளுகை மற்றும் சுயஉயிர்ப்புக் கொண்ட புதிய அமைப்பாகும் என ரூசோ கூறுகிறார். அனைத்திற்கும் மேலாக அரசு என்பது தனக்கென சுயவிருப்பம் கொண்டது எனவும் அதனைப் 'பொது விருப்பம்' (General Will) என்ற பதமிட்டு அழைக்கிறார். ஏதேனும் தனிப்பட்ட அல்ல குறிப்பிட்ட விருப்பம் இருப்பின் அது பொது விருப்பத்திற்குக் கீழானதாகும்.
இயற்கை நிலையில் உள்ளுணர்வினால் உந்தப்பட்ட வாழ்க்கை என்பதற்குப் பதிலாக நீதி மற்றும் நீதிநெறி முறைமையிலான வாழ்வில் புதிய குடிமை அரசு அமைகிறது. தனிமனிதர்கள் தங்களின் இயற்கை சுதந்திரம் மற்றும் அனைத்திற்குமான வரையறையற்ற உரிமையை இழந்து அதற்குப் பதிலாக குடிமை சுதந்திரம் மற்றும் சொத்துரிமையைப் பெறுகின்றனர். இயற்கை நிலையில் உள்ள சுதந்திரம் தவறானது என்றும் தங்களின் கட்டுப்படுத்தமுடியாத விருப்பங்களுக்கு அது அடிமையாக்குகிறதே தவிர வேறொன்றுமில்லை எனவும் கண்டனம் தெரிவிக்கின்றனர். இதற்கு மாறாக, குடிமைச் சமூகத்தினால் வழங்கப்படும் நீதிநெறியிலான சுதந்திரம் என்பது அவர்களைத் தாங்களே தங்களின் எஜமானர்களாக ஆக்குகிறது. அவரின் வார்த்தைப்படி 'சட்டத்திற்குக் கீழ்ப்படிதல்' என்பதனைக் குறிப்பது நமது சுதந்திரமாகும். ஹாப்ஸ் மற்றும் லாக்கைப் போலன்றி, ரூசோ 'தனிமனிதன் இறையாண்மை மிக்க சமூகத்திடம் சமத்துவத்தை அடையும் பொருட்டு கூறுகிறார். தனிமனிதன் தனது உரிமைகளை அரசாங்க அமைப்பிடம் ஒப்படைப்பதால் சுதந்திரம் மற்றும் அதிகாரத்திற்கு இடையே இணக்கமான சூழல் வளர்கிறது.
இறையாண்மை:
மாற்றித்தர இயலாத, பிரிக்க முடியாத, முழுமையான மற்றும் நிரந்தரமான தன்மையுடைய இறையாண்மை பற்றி ரூசோ குறிப்பாக உள்ளார். அவரைப் பொறுத்தவரையிலும் இறையாண்மையே பொது விருப்பமாகும். சிலரிடம் நிர்வாக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதாலேயே அவர்கள் இறையாண்மை மிக்கவர்களாகிவிட முடியாது, அவர்கள் வெறும் சார்நிலை முகவர்களாவர். இறையாண்மையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அம்முகவர்களில் ஒருவரிடம் மாற்றித்தர சமூகம் முயன்றால், அது அரசியல் அமைப்பின் இறங்குமுகத்தில் முடியும். ரூசோவின் ஒப்பந்தத்தில் இறையாண்மை அதிகாரமிக்கவர் ஓர் அங்கமாவார். மேலும் அவர் மக்கள் இறையாண்மை (Popular Sovereignty) என்ற கருத்தினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
பொது விருப்பம் (General Will)
பொது விருப்பம் மற்றும் சமூகம் ஆகியவை அரசிற்கு ஒரேமாதிரியானதாகும். மக்கள் தங்களின் அதிகாரம் மற்றும் ஆளுகை ஆகியவற்றினைப் பொது விருப்பத்தினுடைய கட்டளையின் கீழ் சமர்ப்பிக்கிறார்கள். பொது விருப்பமானது தனிமனிதர்களுடைய விருப்பத்தினை விஞ்சியதாகும். மேலும் இறையாண்மை என்பது முறைமை முழுவதும் நிறைந்திருப்பதுடன் பொதுவிருப்பத்தைத் தவிர வேறு எதனுடனும் ஒத்துப்போவதில்லை. சமூகத்தில் பொது விருப்பம் உறைந்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது அது மக்களின் இறையாண்மை மற்றும் மேலதிகாரத்தைச் சுமப்பதான 'மக்கள் இறையாண்மை' ஆகும். ரூசோ அதிகாரத்தின் மாற்றத்தக்க முறையினை வலியுத்துகிறார். பொது விருப்பம் என்பது அனைவரின் விருப்பத்திற்கும் சமமானதல்ல. ஏனென்றால் முன்னது பொது நலனையும் பின்னது பன்மடங்கான தனிப்பட்ட நலனையும் கொண்டதாகும். பொது விருப்பத்தினை இரண்டுமெய்க்கோள்கள் தீர்மானிக்கின்றன. முதலாவது, பொது நலனை நாடுகிறது. இது விருப்பத்தின் நோக்கத்தினைக் குறிப்பதாகும். இரண்டாவதாக அது அனைவரிடமிருந்தும் வருவதாகவும் அனைவருக்கும் பொருந்துவதாகவும் உள்ளது. இது அதன் தோற்றத்தினை முன்மொழிகிறது. பொது விருப்பம் என்பது பிரதிநித்துவப் பண்பு இல்லாததாகும். இதற்குக்காரணம் பிரதிநிதித்துவ அமைப்புகள் சமூகத்தின் தேவைகளில் கவனம் செலுத்தாமல் தங்களின் தனிப்பட்ட
விருப்பத்தினை மேம்படுத்தும் மனப்போக்கினைக் கொண்டிருப்பதாகும். நன்னெறி விழுமியங்கள் மற்றும் நல்மனப்பாங்கு ஆகியவை அனைவரின் விருப்பத்துடனும் ஒன்றிப்பொருந்துகிறது. பொது விருப்பம் என்பது மனசாட்சி மற்றும் உள்ளார்ந்த விருப்பத்தின் தவிர்க்க இயலாத வெளிப்பாடாகும். மேலும் அது சரியானபொது நலத்திலானதாகவும், பிரபஞ்சத்தின் பொதுநன்மை அடிப்படையிலானது எனவும் அங்கீகரிக்கப்படுகிறது.
மதிப்பீடு
ரூசோவின் ஆளுமை மற்றும் அவரது படைப்புக்களைப் பற்றி பல்வகையான கருத்துக்கள் உள்ளன. ஜி.டி.எச்.கோல் என்னும் அறிஞர் அவரது 'சமூக ஒப்பந்தம்' பற்றி கருத்துக் கூறும் பொழுது 'இன்று வரை உள்ள அரசியல் தத்துவப் பாட நூல்களில் இது மிகச் சிறந்ததாகும்' என்கிறார். மார்லே பிரபு அவர்கள் ரூசோவின் 'தத்துவார்த்தமான சொற்கோவை' பற்றிய தமது மாறுபட்டக் கருத்தினை வெளிப்படுத்தும் போது "ரூசோ பிறக்காமலே இருந்திருப்பின் உலகம் மேலும் சிறந்திருக்காதோ?" என்று கூறுகிறார். அவர் கூற முயல்வது யாதெனில் ரூசோ வாழ்ந்திருக்காவிட்டால் பிரெஞ்சுப் புரட்சியின் மிக மோசமான அனுபவங்களைத் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் அவரது கருத்துக்களே அந்த இயக்கத்தின் அடிப்படையாக இருந்ததாகும்.
அவரது தத்துவமானது சமதர்மத்தின் பின்னணியைக் கொண்டதாகும். முதலாளித்துவம் என்பது ரூசோவின் கைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டது. அவர் கல்வியை தேசியமயமாக்குதலை ஆதரித்ததுடன் தனிநபர் சொத்து என்னும் கருத்தினை எதிர்த்தார். மேலும் அவரது சொற்கோவையில் முற்றாட்சி மற்றும் அதிகாரப் போக்கினை இணக்கமாக்கினார். பொது விருப்பம் என்னும் சாக்கில் அவர் கிட்டத்தட்ட பெரும்பான்மையின் கொடுங்கோன்மையை ஆதரிக்கிறார். இவை அனைத்திற்கும் மாறாக, தற்கால அரசியல் தத்துவ ஞானிகளுள் ரூசோ ஈடு செய்ய முடியாத இடத்திற்குத் தகுந்தவராவார்.