ஜான் லாக் (John Locke)
(பொ.ஆ.1632- பொ.ஆ.1704)
கற்றலின் நோக்கங்கள்
❖ ஜான் லாக்கின் அரசியல் சிந்தனையைப் புரிந்து கொள்ளுதல்.
❖ அரசியல் கோட்பாடு, மனிதனின் தன்மை, இயற்கை நிலை, சமூக ஒப்பந்தம், சட்டங்கள், உரிமைகள், சுதந்திரம், இறையாண்மை மற்றும் சமூக ஒப்பந்தக் கோட்பாடு, இயற்கைச் சட்டம் மற்றும் சமூக ஒப்பந்தம், புரட்சி ஆகியவை பற்றிய ஜான் லாக்கின் கருத்துக்களை அறிந்து கொள்ளுதல்.
வாழ்வும் காலமும்
இங்கிலாந்தின் சோமர்செட்ஷயரில் உள்ள ரிங்டன் என்னுமிடத்தில் ஆகஸ்ட் 29, 1632-ல் தத்துவார்த்தமான சுதந்திரத்துவத்தின் தந்தையான ஜான் லாக் பிறந்தார். பிரிஸ்டல் அருகிலுள்ள பென்ஸ்போர்டு என்னுமிடத்தில் தனது குழந்தைப்பருவத்தை அவர் கழித்தார். ஆரஞ்சின் இளவரசர் வில்லியமுடன் (William of Orange) லாக்கிற்கு நட்பு ஏற்பட்டது. 1688-ல் நடைபெற்ற மகத்தான புரட்சியின் (Glorious Revolution) விளைவாக வில்லியம் இங்கிலாந்தின் அரியணை ஏறினார். 1689-ல் மூன்றாம் வில்லியம் லாக்கை முறையீட்டு ஆணையாளராக்கினார். ஆனால் சாதகமற்ற அரசியல் சூழ்நிலை அவரை பதவி விலக வைத்ததுடன் எஸ்ஸெக்சில் குடியமர வைத்தது. அவர் தனது பொது வாழ்வினை தேயிலை வாரிய ஆணையாளர் பணியுடன் முடித்துக் கொண்டார்.
சகிப்புத்தன்மை தொடர்பான கடிதங்கள் (1689), மனிதப் புரிதலைப் பற்றிய கட்டுரை (1690), குடிமை அரசாங்கம் பற்றிய இரு ஆய்வு நூல்கள் (1690), சகிப்புத்தன்மை பற்றிய இரண்டாவது கடிதம் (1692), சகிப்புத்தன்மை பற்றிய மூன்றாவது கடிதம் (1692), சகிப்புத்தன்மை பற்றிய நான்காவது கடிதம் (1693) கல்வி தொடர்பான சில சிந்தனைகள் (1693).
மைய கருத்துக்கள்
லாக்கின் மையக் கருத்துக்களை கீழ்க்கண்டவாறு விவாதிக்கலாம்.
ஹாப்சைப் போல மனிதனின் தன்மை மீதான அவநம்பிக்கையை லாக் பரிந்துரைக்கவில்லை. காரணங்களை ஆராய்வதே மனிதர்களின் பகுத்தறிவு உருவாகக் காரணமாகும் என அடையாளப்படுத்துகிறார். தனிமனித மற்றும் சமூக வாழ்வின் அடிப்படையாக பகுத்தறிவினை ஒப்புக் கொள்கிறார். மனிதர்கள் சமூகமயமானவர்கள், பகுத்தறிவு, நாகரீகம், நிலையான மனநிலை மற்றும் தன்னாட்சித் திறனுள்ளவர்கள் ஆவர். தனிமனிதனின் இயற்கைச் சமநிலையை லாக்கின் கருத்து ஆதரிக்கிறது. அவரைப் பொறுத்தவரை, மனிதர்கள் இயற்கையில் சுதந்திரமானவர்கள். எத்தகைய மேலான அதிகாரத்திடமிருந்தும் சுதந்திரமாக இருக்கக்கூடிய உள்ளார்ந்த முன்னுரிமைக்குத் தகுதியான மற்றும் இயற்கையின் வழிகாட்டுதல் படி நடப்பவர்களாக உள்ளனர். அறிவு, வலிமை மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தனிமனிதர்கள் சிறிய அளவிலான மாறுபாடுகளைக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்கிறார். எனினும் அவரது தனிமனிதர்களின் ஒற்றுமைகள் மீதான சார்பு, வேறுபாடுகளை விட அதிகமாகவே உள்ளது. மனிதர்களின் பயன்பாட்டுவாதப் பண்பினை லாக் குறிப்பாக பிரதிபலிக்கிறார். பெந்தாமின் அடியொற்றி லாக் கூறுவது யாதெனில் மனிதர்கள் மகிழ்வு மற்றும் வலி ஆகியவற்றிற்கிடையே ஓர் சமநிலையை ஏற்படுத்த முயல்வதாக கூறுகிறார். அவரது உடன்படிக்கையின் அடிப்படையாக மகிழ்வு அல்லது பயன்பாடு பற்றிய கருத்தே உள்ளது.
இயற்கை நிலை (State of Nature)
லாக்கின் இரண்டாவது ஆய்வு நூலில் 'இயற்கை நிலை' பற்றிய சிந்தனையைக் காணலாம். ஹாப்சின் இயற்கை நிலைக்கு முரணாக மனிதனுடைய சமூக உள்ளூணர்வின் காரணமாக நல்லொழுக்கத்தினால் அமைதியான சூழ்நிலை ஏற்படுவதாக அனுமானிக்கிறார். இயற்கைச் சட்ட நியதிகளின்படி அவரது இயற்கை நிலை முழுமையான சுதந்திரத்தின் அடிப்படையிலானதாகும். பரஸ்பர வலிமை மற்றும் அதிகார எல்லையால் வரையறுக்கப்பட்ட சமத்துவமே இக்காலக்கட்டத்தின் பண்பியல்பாகும். அவருடைய வார்த்தைகளின்படி இயற்கை நிலை என்பது ஓர் அமைதியான நிலை, நல்விருப்பம், பரஸ்பர உதவி மற்றும் பாதுகாப்பாகும். சுருங்கக் கூறின், மனிதர்களின் மீதான தனது நம்பிக்கையினை அடிக்கோடிடுகிறார்.
உரிமைகள் மற்றும் கடமைகளின் ஆதாரமாக 'இயற்கைச் சட்டம்' கருதப்படுகிறது. மனிதர்கள் தங்களின் உரிமைகளை இயற்கைச் சட்டத்திலிருந்து பெறுகிறார்கள். மேலும் விதிக்கப்பட்டுள்ள உரிமைகளை பரஸ்பர அடிப்படையில் பாதுகாப்பதற்காக மதிக்க வேண்டுமென இயற்கைச்சட்டம் எதிர்பார்க்கிறது. இயற்கைச் சட்டத்தைக் கடவுளால் இயற்றப்பட்ட நீதிநெறிச் சட்டமாக குறிப்பதுடன் பகுத்தறிவின் மூலம் அதனை உணரலாம் என்கிறார். அவரது இயற்கை நிலையினை ‘அமைப்பெதிர்வாதிகளின் சொர்க்கம்' என்றால் அது தவறாகாது.
இறுதியாக, இயற்கை நிலையின் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள மூன்று அடிப்படைக் குறைபாடுகளை லாக் அடையாளம் காட்டுகிறார். முதலாவதாக, சட்டப்படியான கட்டமைப்பு இல்லாததாகும். இரண்டாவதாக, அறிவார்ந்த மற்றும் நடுநிலையான நீதிபதி இல்லாமையாகும். மூன்றாவதாக, முடிவுகளைச் செயலாக்கப்படுத்த ஓர் ஆட்சித்துறை அமைப்பின் தேவையாகும். ஆகவே இப்பணியிலிருந்து விடுபடும் வழிமுறையே அரசு எனும் நிகழ்வாகும். லாக்கின் இயற்கை நிலை என்பது உண்மைகளுக்கு முரணானதாக உள்ளதை மனதில் கொள்ள வேண்டும். இது எத்தகைய வரலாற்று நியாயவாதத்தின் ஆதரவும் இல்லாத புனைவு முதற்கோளாகும்.
சமூக ஒப்பந்தம் (Social Contract)
குடிமைச் சமூகத்தில் நுழைவதற்கான கருவியாகவே சமூக ஒப்பந்தம் கட்டமைக்கப்பட்டுள்ளது. லாக்கின் கருத்துப்படி இரு சமூக ஒப்பந்தங்கள் முன்மொழியப்படுகின்றன. முதலாவது குடிமைச் சமூகத்தை நிறுவவும், இரண்டாவது அரசமைப்பிலான அரசங்கத்திற்கானதும் ஆகும். ஒப்பந்தத்தின் அஸ்திவாரமாக ஒப்புதலை லாக் அங்கீகரிக்கிறார். அவரைப் பொறுத்தவரை பொது நலக்கூட்டமைப்பில் யாருடைய சுய ஒப்புதலின்றியும் சேர்க்க முடியாது. லாக் இரண்டுவகையான ஒப்புதலைப் பற்றி பேசுகிறார்.
1) இயற்கையால் மாற்ற இயலாத முறையான அல்லது உயிர்ப்புள்ள ஒப்புதல்
2) உட்கிடையான அல்லது மறைமுகமான ஒப்புதல்.
இது பங்கேற்பாளர்களை நம்பிக்கை என்ற நிலையிருந்து புதிய முறைமையைத் துவக்க அனுமதிக்கிறது. ஓப்பந்தத்தைப் பொறுத்தவரையில் லாக் முன்கூறியதற்கே முன்னுரிமை அளிப்பதுடன் மீண்டும் இயற்கை நிலைக்குத் திரும்ப இயலாது என தெளிவுப்படுத்துகிறார். லாக்கினுடைய ஒப்பந்தத்தின் முக்கிய இயற்பண்பு யாதெனில் தனிமனிதர்கள் இயற்கை நிலையில் பெற்றிருந்த உரிமைகளை ஒப்படைக்க மாட்டார்கள் என்பதாகும். உரிமைகளை ஒப்படைத்தல் என்பது ஒப்பந்தத்தின் நோக்கத்தையே தோல்வியடையக் செய்துவிடும். ஏனெனில் அரசு என்பது உரிமைகளின் உத்திரவாதி மற்றும் பாதுகாவலனாகவே கட்டி எழுப்பப்படுகிறது. ஆகவே ஒப்பந்தமானது சுதந்திரச் சாசனம் எனப் பொருள்படுமேயன்றி அடிமைப்படுத்துதலுக்கான உரிமமாக இருக்காது. லாக்கின் சமூக ஒப்பந்தமானது ஒருவேளை கொடுங்கோலாட்சி முறையில் ஆளுகை இருப்பின் புரட்சி செய்யும் விருப்பத்தேர்விற்கு அதிகாரமளிக்கிறது. தனிமனிதர்களுடைய இயற்கை உரிமைகளின் பாதுகாவலனாக அரசின் பங்கினை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை இணைக்கப்பட்டது. மேலும் புரட்சி பற்றிய முடிவினை சட்டமன்றத்திடம் விடுவதுடன் ஒப்புதல் மற்றும் பெரும்பான்மைத்துவக் கொள்கையில் லாக் கவனம் செலுத்துகிறார்.
அதிகாரத்தின் தன்மை பற்றிய கேள்விக்கு, லாக் வரையறுக்கப்பட்ட இறையாண்மை (Limited Sovereignty) என்னும் கருத்தினைக் கோடிட்டுக் காட்டுகிறார். முழுமையான இறையாண்மை என்பது அவரது குடிமைச் சமூகக்கட்டமைப்பிற்கு எதிரானதாகும். அதிகாரப் பிரிவினைக்கான மாற்று செயல்திட்டத்தினை வழங்கவும் லாக் தயங்கவில்லை. அவரைப் பொறுத்தவரையிலும் அரசாங்கத்தின் அதிகாரங்கள் மூன்று அங்கங்களிடம் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக சட்டமன்றம் ஆகும். இதனைப் பொதுநல கூட்டமைப்பின் மேலான அதிகாரம் எனக் குறிப்பிடுகிறார். இரண்டாவதாக நீதித்துறையின் அதிகாரங்களை உள்ளடக்கிய ஆட்சித்துறையாகும். மூன்றாவதாக அரசின் வெளியுறவு அதிகாரத்தைக் குறிக்கும் கூட்டாட்சியாகும். ஒருவரின் கையில் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஆட்சியாளர் பற்றிய கருத்தை லாக் ஏற்றதுடன் அது பெரும்பான்மையினருடைய ஒப்புதலின் வெளிப்பாடாகும் என்கிறார்.
சொத்தினைப் பாதுகாப்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு நோக்கம் கிடையாது. - ஜான் லாக் (John Locke),
மதிப்பீடு
ஜான் லாக் தமது அறிவியல் மனப்பாங்கு மற்றும் பகுத்தறிவிலான நன்னடத்தையின் மூலமாக மேற்கத்திய அரசியல் சிந்தனையில் குறிப்பிடத்தகுந்த இடத்தினைப் பெற்றுள்ளார். தனிமனிதவாதியாக தமது மனத்திண்மையின் அடிப்படையில் அவர் நம்புவது என்னவெனில் தமது தலையெழுத்தினை மனிதர்கள் தாமே தீர்மானிக்கின்றனர் என்பதாகும். வால்டேர், (Voltaire) டிடராட் (Diderot), ரூசோ (Rousseau) போன்ற சிந்தனையாளர்களுக்கு மட்டுமல்லாமல், பிரெஞ்சுப் புரட்சிக்கும் கூட தூண்டுதல் மற்றும் உத்வேகம் அளித்த பெரும் மூல ஆதாரமாக அவரது படைப்புக்கள் உள்ளன. பாரிங்டனின் (Parrington) கூற்றுப்படி லாக்கின் அரசாங்கம் பற்றிய இருஆய்வுநூல்கள் அமெரிக்கப்புரட்சியின் பாடப்புத்தகமாகவே மாறின. சுதந்திரத்தைப் பெறுவதே அரசின் மிக முக்கியப் பிரச்சினையாக லாக் பார்த்தார். இதனைத்தனிமனித நலனுக்காக வரையறுக்கவே அவர் கடும் முயற்சி செய்தார்.