Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரிஸ்டாட்டில் (Aristotle) (பொ .ஆ.மு.384- பொ .ஆ.மு.322)
   Posted On :  03.10.2023 09:23 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை

அரிஸ்டாட்டில் (Aristotle) (பொ .ஆ.மு.384- பொ .ஆ.மு.322)

அரிஸ்டாட்டிலின் வாழ்வும் காலமும் - அரிஸ்டாட்டிலின் படைப்புகள் - அரிஸ்டாடிலின் சிந்தனைகள் - அரசு ஓர் இயற்கை அமைப்பு (State as a natural Institution) - அரசின் பணிகள் (Functions of State) - குடியுரிமைக் கோட்பாடு - அரசுகளை வகைப்படுத்துதல் - அடிமை முறை பற்றிய கருத்துக்கள் - குடும்பம் பற்றிய கருத்துக்கள் - சொத்து பற்றிய கருத்துக்கள் - ஓய்வு பற்றிய அரிஸ்டாட்டிலின் கருத்து - புரட்சி பற்றிய கருத்துக்கள் - மதிப்பீடு

அரிஸ்டாட்டில் (Aristotle) 

(பொ ..மு.384- பொ ..மு.322)



கற்றலின் நோக்கங்கள்

  அரிஸ்டாட்டிலின்அரசியல் சிந்தனையைப் புரிந்து கொள்ளுதல் 

  ஒத்த கருத்தாக்கங்களைக் கொண்ட சிந்தனையாளர்களை ஒப்பிட உதவுதல்

  லட்சிய அரசு, குடியுரிமை, இயல்பான மற்றும் திரிந்த அரசமைப்பு வடிவங்கள் மற்றும் முடியாட்சி, அரசாங்கத்தின் வடிவங்கள் மற்றும் மக்களாட்சி பற்றிய அறிவினைப் பெறுதல்.

மனிதன் என்பவன் இயற்கையாகவே ஓர் அரசியல் விலங்கு! இயற்கையில் ஒரு மனிதன் அரசு இல்லாமல் வாழ முடியாது! அவ்வாறு அரசின்றி வாழ்பவன் மனித குலத்திற்கு மேலானவன் அல்லது கீழானவன் ஆவான்! - அரசியல் என்ற நூலில் அரிஸ்டாட்டில்


அரிஸ்டாட்டிலின் வாழ்வும் காலமும்

"அரசியல் தத்துவத்தின் வரலாற்றில் அனைத்துத் தகவல்களையும் தேடிப் பெறும் விருப்பத்தில் அரிஸ்டாட்டிலை மிஞ்சியவர் எவருமில்லை" என்கிறார் வில்லியம் எபென்ஸ்டீன்.

அரிஸ்டாட்டில், பிளாட்டோவின் அகாடெமியினுடைய மாணவராவர். பிளாட்டோவின் மரணத்திற்குப் பின்னர் அரிஸ்டாட்டில் கி.மு 355 -ல் 'லைசீயம்' (Lyceum) என்ற பள்ளியைத் தானே தொடங்கினார். இங்குதான் அலெக்சாண்டர் அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்றார். இங்கு அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் கல்வி போதனைகள் நிகழ்ந்தன. அரிஸ்டாட்டில் பொ..மு.384-ல் ஸ்டாகிராவில் பிறந்தார். பிளாட்டோவைப் போலன்றி அரிஸ்டாட்டில் ஒரு உயர் நடுத்தர வகுப்புக்குடும்பத்தில் பிறந்தார். மாசிடோனியாவின் மன்னரான அமின்டாசின் (Amyntas) தனி மருத்துவராக இவரின் தந்தை நிக்கோமாகஸ் (Nicomachus) இருந்தார்.

அரிஸ்டாட்டில் என்பதன் பொருள் 'சிறந்த நோக்கம்' என்பதாகும். இவரின் பெயர்க்காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் பிளாட்டோவின் லட்சிய அரசுக்கு மாற்றாக சிறப்பாக நடைமுறைப்படுத்தக்கூடிய அரசினை முன்மொழிந்தார். அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசு என்பது குறிப்பிட்ட நோக்கத்திற்கானதாகும். இந்நோக்கமே மனிதனின் நீதிநெறி மற்றும் அறிவார்ந்த வாழ்வில் மேலான நன்மையைத் தருவதாகும்

குறிப்பிடத்தக்க மேற்கோள்

முழுமை என்பது பகுதிகளின் தொகுப்பைவிட மிகுதியானதாகும். - அரிஸ்டாட்டில் (Aristotle) 


அரிஸ்டாட்டிலின் படைப்புகள்

கிரேக்க இலக்கியத்திலிருந்து விலங்கியல் வரை இவர் பல்வேறு துறைச்சார்ந்த புத்தகங்களை எழுதினார். இருப்பினும் இவரின் மிகச் சிறந்த படைப்பான 'அரசியல்' என்னும் நூலிலிருந்து தற்கால அரசியல் அறிவியல் வளர்ந்துள்ளது. இதனால் இவர் 'அரசியல் அறிவியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார். இது வெளியிடப்பட்ட மிகச்சரியான நாள் தெரியவில்லை. எனினும் இப்படைப்பு 1000 பக்கங்களுக்கு மேல் உள்ள 8 புத்ககங்களைக் கொண்ட பெரும் படைப்பாகும்.

பிளாட்டோ தனது ஆசிரியரான சாக்ரடீசுடன் ஏற்புடையவராக இருந்தாலும், அரிஸ்டாட்டில் தன் ஆசிரியரான பிளாட்டோ கூறிய பலவற்றில் உடன்பாடின்றி இருந்தார்


அரிஸ்டாடிலின் சிந்தனைகள்

அரிஸ்டாட்டிலின் அனைத்து விதமான அரசியல் கருத்துக்களை இவருடைய 'அரசியல்' என்ற புத்தகத்தில் காணலாம்


அரசு ஓர் இயற்கை அமைப்பு (State as a natural Institution)

அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசு இயற்கையானது. அரசின் அதிகாரம் நீதி நெறியிலானதாகும். குடும்பத்தால் மக்களின் அதிகரித்துக்கொண்டிருக்கக் கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத காரணத்தால் தங்களின் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து மக்கள் அரசினை உருவாக்க நினைக்கின்றனர். குடும்பங்கள் ஒன்றிணைந்து அரசினை ஓர் முழுமையான அமைப்பாக்குகின்றனர். தனி மனிதனின் பெரிய வடிவமே அரசு எனவும் ஓர் அரசில் மட்டுமே தனி மனிதனால் முழுமையாகச் சிந்திக்க இயலும் எனவும் அரிஸ்டாட்டில் நம்புகிறார்


அரசின் பணிகள் (Functions of State):

அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அரசின் தலையாயப் பணி என்பது நல்வாழ்வினை ஊக்குவித்து மக்களின் மனநலம், ஒழுக்க நெறி மற்றும் உடல்வளர்ச்சி ஆகியவற்றிற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதாகும். அரசானது மக்களின் நல்ல பழக்கவழக்கங்களை சிறந்த செயல்பாடுகளாக மாற்றி நலனை மேம்படுத்துவதோடு, மகிழ்வு மற்றும் மதிப்பிற்குரியதாக வாழ்வினை மாற்றும் வகையில் செயல்படவேண்டும்

அரிஸ்டாட்டில் : உனக்கு என்ன வேண்டும்

மனிதன் : நல் வாழ்வு

அரிஸ்டாட்டில் : அப்படியெனில் அரசின் அங்கமாக இரு

மனிதன் : எவ்வாறு

அரிஸ்டாட்டில் : குடிமகனாவதன் மூலம் இருக்கலாம்.


குடியுரிமைக் கோட்பாடு

ஒரு நபரின் வாழ்விடம், சட்ட உரிமை மற்றும் பிறப்பு ஆகியவை மட்டுமே குடியுரிமையை வழங்காது என அரிஸ்டாட்டில் நம்பினார். அவர் செய்யக்கூடிய பணியே ஒரு நபரை குடிமகனாக்குகிறது எனக்கூறுகிறார். ஒரு நபர் மட்டுமே இறையாண்மை அதிகாரங்களைக் கொண்ட மக்கள் சபையில் பங்கேற்க வேண்டும். ஒரு குடிமகன் அரசாங்கத்தின் முடிவாக்க நடைமுறையில் பங்கேற்க வேண்டும்.


அரசுகளை வகைப்படுத்துதல்

அரிஸ்டாட்டில் அளவு தரத்தின் அடிப்படையில் அரசுகளை  வகைப்படுத்துகிறார்.


அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி இறையாண்மையானது ஒருவரிடம் இருந்தால் அது முடியாட்சியாகும். அது பின்னர் கொடுங்கோலாட்சியாக சிதைவுறுகிறது. அப்பொழுது மக்கள் ஆட்சியாளருடன் போராடி அதனை ஆள்வதற்கு சிலரிடம் தருகின்றனர். இவ்வாறு பிரபுக்களாட்சி வருகிறது. பின்னர் இதுவும் சிதைவுற்று சிறுகுழு ஆட்சியாகிறது. இதனால் மக்கள் மீண்டும் புரட்சி செய்து அதிகாரத்தினைப் பல ஆட்சியாளர்களிடம் அளிக்கின்றனர். இதனால் அரசு தூய ஆட்சி அமைப்பாகிறது. இது மீண்டும் சிதைவுறும்போது மக்களாட்சியாகிறது. இதன் ஆட்சியாளர்கள் அரசின் அடிப்படை நோக்கத்தைப் பற்றிய பொது நலப் பார்வையற்றவர்களாக இருப்பர். இது மீண்டும் முடியாட்சியின் எழுச்சிக்கு வகை செய்கிறது.


அடிமை முறை பற்றிய கருத்துக்கள்

அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி அடிமைகளே எஜமானரின் முதல் அசையும் சொத்தாவர். அதாவது ஓர் வீட்டின் தலைவராக எஜமானரின் உயிருள்ள சொத்துக்களில் அடிமைகள் முதலாவதாவர். அரிஸ்டாட்டில் நல்லொழுக்கம் இல்லாதவர்களே அடிமையாவர் எனக்கூறுகிறார். ஏனெனில் அடிமை என்பவன் செயல்பாட்டிற்கான கருவியேயன்றி உற்பத்திக்கு இல்லை என்கிறார். ஒருவேளை உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டால் ஓர் அடிமையாகத் தனது பண்பை இழந்து நல்லொழுக்கம் உள்ளவர்களாவர்.


குடும்பம் பற்றிய கருத்துக்கள்

குடும்பம் என்பது அரசிற்கு முந்தைய இயற்கை அமைப்பாகும். தனி மனிதர்கள் தங்களின் பிறப்பிலிருந்தே உறுப்பினர்களாக இருப்பதால் அது இயற்கையானதாகும். அதுவே நீதிநெறியிலான வாழ்வின் தொடக்கமாகவும் அரசின் மையக்கருவாகவும் உள்ளது


சொத்து பற்றிய கருத்துக்கள்

தனி நபர் சொத்து என்பது சிறந்த மற்றும் இயல்பான வாழ்விற்கான அடிப்படை என அரிஸ்டாட்டில் ஆதரித்தார். இருப்பினும் தனிநபர் சொத்துக்களுக்கு சில வரையறைகளை அவர் பரிந்துரைத்தார். மேலும் அவர் தனிநபர் சொத்து ஒழிப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

செயல்பாடு

அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்குப் பயிற்றுவித்தது உண்மையா?

ஆம். அவர் அலெக்சாண்டரின் தந்தையும் மாசிடோனியாவின் மன்னருமான இரண்டாம் பிலிப் கேட்டுக்கொண்டதால் பயிற்றுவித்தார்.


ஓய்வு பற்றிய அரிஸ்டாட்டிலின் கருத்து

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு சொத்து மற்றும் அடிமைகள் அவசியம் என அரிஸ்டாட்டில் கூறுகிறார். இதற்குக் காரணம் என்னவென்றால், அப்பொழுது தான் குடிமக்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்றும் பயனுள்ள வகையில் சிந்திக்க நேரமும், நாட்டினர் அனைவரின் வாழ்வும் நலம்பெற திட்டமிடவும் இயலும் என்கிறார்.


புரட்சி பற்றிய கருத்துக்கள்:

அரசமைப்பு மாற்றங்களாலேயே முதலில் புரட்சி ஏற்படுவதாக அரிஸ்டாட்டில் கருதுகிறார். இம்மாற்றம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். உதாரணமாக முடியாட்சியில் இருந்து கொடுங்கோலாட்சிக்கு ஏற்படும் மாற்றமானது மக்களிடையே புரட்சியைத் தூண்டுகிறது. இரண்டாவதாக அரசமைப்பில் மாற்றங்கள் நிகழாவிட்டாலும் அரசின் நோக்கங்கள் தவறினால் புரட்சிகள் ஏற்படுவதாகக் கூறுகிறார்.


மதிப்பீடு

அரசியல், உளவியல், மற்றும் நன்னெறி சார்ந்த மிகப்பெரும் அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராக அரிஸ்டாட்டில் கருதப்படுகிறார். அவர் பெரும்பான்மையான அறிவியல் மற்றும் கலைகளில் பரந்த அறிவைக் கொண்டிருந்தார். அவரது படைப்புக்கள் பல நூற்றாண்டுகளுக்கான தத்துவத்தின் அடித்தளத்தினை ஏற்படுத்தியுள்ளன. மறுமலர்ச்சி, சீர்திருத்தம் மற்றும் அறிவொளி போன்ற அறிவுப் புரட்சிகள் ஏற்பட்ட காலத்திற்குப் பின்னரும் அரிஸ்டாட்டிலின் கருத்துக்கள் உலகத்தத்துவத்தின் அடித்தளத்தில் இருக்கின்றன. ஆகவே, சந்தேகத்திற்கிடமில்லாமல் எக்காலத்திலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தத்துவ ஞானிகளில் ஒருவராக அரிஸ்டாட்டில் விளங்குகிறார்.

11th Political Science : Chapter 7 : Political Thought : Aristotle (384 - 322 BCE) - Political Thought in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை : அரிஸ்டாட்டில் (Aristotle) (பொ .ஆ.மு.384- பொ .ஆ.மு.322) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை