ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் - ஆங்கிலேயரின் வருகை | 11th History : Chapter 16 : The Coming of the Europeans
ஆங்கிலேயரின் வருகை
ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனம்
இலண்டன் நகரின் லேடன்ஹால் வீதியைச் சேர்ந்த ஒரு வணிகக்குழு, கீழை நாடுகளுடனான பெரும் இலாபத்தை ஈட்டித்தரும் நறுமணப் பொருட்கள் வியாபாரத்தில் தாங்களும் பங்கு பெற அரசியார் முதலாம் எலிசபெத்திடமிருந்து பட்டயம் (உரிமை ஆணை) ஒன்றைப் பெற்றனர். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பணம் படைத்த வணிகரையும், மேட்டுக்குடி மக்களையும் பங்குதாரர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் ஒரு ஆளுநராலும் 24 இயக்குநர்களைக் கொண்ட குழுவாலும் மேலாண்மை செய்யப்பட்டது. 1611இல் அரசர் முதலாம் ஜேம்ஸ், வில்லியம் ஹாக்கின்ஸ் மூலம் இந்தியாவுடன் இயல்பாக வணிகம் செய்யும் அனுமதியை முகலாய அரசர் ஜஹாங்கீரிடம் பெற்றார். ஆங்கிலேயர் சூரத்தில் சில வணிக உரிமைகளைப் பெற்றனர். குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார். ஆனால் இப்பகுதிகளில் போர்த்துகீசியர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததால் ஆங்கிலேயரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.
1639இல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுத்து அதில் கோட்டைக் கட்டிக் கொள்ளும் அனுமதி வழங்கினார். கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழு முதன் முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே. சென்னையில் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் மீது 1645ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார். 1687இல் ஒளரங்கசீப் கோல்கொண்டாவைக் கைப்பற்றிக் கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். ஆனால் ஆங்கிலேயருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன. குறுகிய காலத்திற்குள் மசூலிப்பட்டினத்திற்கு மாற்றாகக் கம்பெனியின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியின் தலைமையிடமாக சென்னை மாறியது. அரசர் இரண்டாம் சார்லஸ் திருமணத்தின்போது மணக்கொடையாகப் பெற்ற பம்பாய் தீவு 1668இல் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. 1683 ஆம் ஆண்டுப் பட்டயம் கம்பெனிக்குப் படைகளை உருவாக்கிக் கொள்ளவும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்யவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது.
1652இல் சென்னை ஓர் மாகாணமாக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் (1655) இம்மாகாண அந்தஸ்து நீக்கப்பட்டது. மீண்டும் 1684இல் சென்னை மாகாண அந்தஸ்தைப் பெற்றது. 1688இல் சென்னை ஒரு மேயரையும், பத்து உறுப்பினர்கள் (Aldermen) அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப் பெற்றிருந்தது. 1693இல் சென்னையைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களையும் 1702இல் மேலும் ஐந்து கிராமங்களையும் பெற்றது.
வங்காளம்
ஆங்கிலேயருக்கு வங்காளத்தில் வணிக உரிமைகளைப் பெறுவது நீண்டகாலப் போராட்டமாக அமைந்தது. முகலாய அரசர் ஷாஜகானின் இரண்டாவது மகனும் வங்காளத்தின் ஆளுநருமான ஷா சுஜாவிடமிருந்து கம்பெனி சில வணிக உரிமைகளைப் பெற்றிருந்தது. ஆனால் அவ்வுரிமைகள் முகலாய அரசால் முறையாக உறுதி செய்யப்படவில்லை. 1608இல் வங்காளத்திலிருந்த ஆங்கிலேயர் வணிக உரிமைகளைப் பெற்றனர். ஆனால் ஆங்கிலேயரின் வணிக உரிமைகளில் உள்ளூர் அதிகாரிகள் தலையிட்டதால் கம்பெனி முகலாய அரசின் பிரதிநிதியாக வங்காளத்தை நிர்வகிக்கும் ஆட்சியாளருக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்தது. 1690இல் அமைதி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது. இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தாவாயிற்று. 1696இல் அங்கு கோட்டை கட்டப்பட்டது. 1698இல் சுதநுதி, காளிகட்டா, கோவிந்தப்பூர் ஆகிய கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையைக் கம்பெனி பெற்றது. இதற்குப் பதிலாக கம்பெனி ஆண்டுதோறும் ரூ.1,200 செலுத்தியது. கல்கத்தாவில் கட்டப்பட்ட வில்லியம் கோட்டை 1770இல் மாகாணத்தின் தலைமையிடமாயிற்று.
நாரிஸ் தூதுக்குழு
இங்கிலாந்து அரசர் மூன்றாம் வில்லியம் சர் வில்லியம் நாரிஸ் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். அவர் 1698இல் ஔரங்கசீப்பை சந்தித்தார். ஆங்கிலேயக் குடியேற்றங்கள் மீது ஆங்கிலேயரின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதும், ஏற்கனவே பெறப்பட்ட சிறப்பு உரிமைகளை உறுதிப்படுத்துவதும், வணிக உரிமைகளை மேலும் நீட்டிப்பதும் இச்சந்திப்பின் நோக்கங்களாக இருந்தன. ஆனால் இவ்வேண்டுகோள் 1714-1717 ஆண்டுகளில் சுர்மன் என்பவரின் தலைமையின் கீழ்வந்த தூதுக்குழு முகலாயப் பேரரசர் பருக்சியாரைச் சந்தித்தபோதுதான் ஏற்கப்பட்டது. சுர்மன் வணிக உரிமைகள் தொடர்பான அரசரின் ஆணையை பருக்சியாரிடமிருந்து பெற்றார். இவ்வாணை குஜராத், ஹைதராபாத், வங்காளம் ஆகிய பகுதிகளின் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.