Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | டச்சுக்காரர்

ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் - டச்சுக்காரர் | 11th History : Chapter 16 : The Coming of the Europeans

   Posted On :  18.05.2022 05:53 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை

டச்சுக்காரர்

ஜேன் ஹீயுன் வான் லின்சோடென் என்னும் நெதர்லாந்தைச் சேர்ந்த லிஸ்பனில் வாழ்ந்து வந்த வணிகர் டச்சுக்காரரின் முதல் பயணத்தை தென்கிழக்கு ஆசியாவை நோக்கி 1595 ஆம் ஆண்டு மேற்கொண்டார்.

டச்சுக்காரர்

ஜேன் ஹீயுன் வான் லின்சோடென் என்னும் நெதர்லாந்தைச் சேர்ந்த லிஸ்பனில் வாழ்ந்து வந்த வணிகர் டச்சுக்காரரின் முதல் பயணத்தை தென்கிழக்கு ஆசியாவை நோக்கி 1595 ஆம் ஆண்டு மேற்கொண்டார். கீழ்த்திசை நாடுகளோடு வணிகம் செய்வதற்காகப் பல நிறுவனங்கள் வணிகர்களாலும் தனி நபர்களாலும் நிறுவப்பட்டிருந்தன. அரசு தலையிட்டு அவையனைத்தையும் ஒருங்கிணைத்து 1602இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கியது. புதிதாக உருவான இக்கம்பெனி இந்தோனேசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவியது. டச்சுக்காரர் மலாக்காவை போர்த்துகீசிரியரிடமிருந்து 1641இல் கைப்பற்றினர். மேலும் 1658இல் இலங்கையைத் தங்கள் வசம் ஒப்படைக்கப் போர்த்துகீசியரைக் கட்டாயப்படுத்தினர். நறுமணத் தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர். ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயரிடம் ஏற்பட்ட பின்னடைவுகளால் அவர்கள் துயருற்றனர்.

 

1623இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்கள், போர்த்துகீசியர், ஜப்பானியர் அடங்கிய இருபது பேர்களை டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் முகவர்கள் இந்தோனேசியாவிலுள்ள அம்பாய்னா என்னும் தீவில் சித்திரவதை செய்து கொன்றனர். இது அம்பாய்னா படுகொலை என்றழைக்கப்படுகிறது.


 

தமிழகத்தில் டச்சுக்காரர்

1502 முதல் பழவேற்காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்த்துகீசியர் டச்சுக்காரரால் அகற்றப்பட்டனர். சென்னை நகருக்கு வடக்கே 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழவேற்காட்டில் டச்சுக்காரர் ஜெல்டிரியா என்னும் பாதுகாப்புக் கோட்டையைக் கட்டினர். 400 ஆண்டுகள் கடந்தும் அதன் எச்சங்களை இன்றும் காணலாம். இக்கோட்டை ஒரு காலத்தில் டச்சுக்காரரின் அதிகார பீடமாக இருந்தது. தங்கள் அதிகாரத்தை 1605இல் மசூலிப்பட்டினத்தில் நிறுவிய டச்சுக்காரர் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை 1610இல் நிறுவினர். நாகப்பட்டினம், புன்னைக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்), தேவனாம்பட்டினம் ஆகியவை டச்சுக்காரரின் ஏனைய கோட்டை மற்றும் காலனியாதிக்கப் பகுதிகளாகும்.


பழவேற்காடு, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழமண்டலப்பகுதியின் தலைமையிடமாயிற்று. பழவேற்காட்டிலிருந்து மேலை நாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஜாதிக்காய், ஜாதிபத்ரி, கிராம்பு ஆகியவையும் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர் கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வெடிமருந்து தொழிற்கூடம் ஒன்றை நிறுவினர். அடிமை வியாபாரத்தில் டச்சுக்காரர் ஈடுபட்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வங்காளத்திலிருந்தும், குடியேற்றப்பகுதிகளான தேங்காய்பட்டினம், காரைக்கால் ஆகியவற்றிலிருந்தும் அடிமைகள் பழவேற்காட்டிற்குக் கொண்டுவரப்பட்டனர். அடிமைகளைப் பிடிப்பதற்காக டச்சுக்காரர் சென்னையில் தரகர்களை நியமித்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் கப்பல்களில் ஏற்றப்பட்டனர். பஞ்சமும், வறட்சியும் போர்களும் அடிமை வணிகம் செழிக்க உதவின.

லெய்டன் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரான வில் டிஜிக் (Wil O Dijk) என்பார் ஒரு ஆய்வுக்கட்டுரையில், இங்கிருந்தும் வங்காள விரிகுடாப் பகுதிகளிலிருந்தும் டச்சுக் கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட அடிமைப் பயணிகளின் பட்டியலைக் குறிப்பிட்டுள்ளார். 1621 ஜுன் முதல் 1665 நவம்பர் வரை மொத்தம் 26,885 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அடிமைகளாக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 1379 நபர்கள் உயிரிழந்தனர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தஞ்சாவூர், மதுரை, செஞ்சி நாயக்க அரசுகளால் உருவான பஞ்சம் போன்ற காரணங்களால் சோழமண்டலத்தில் அடிமை ஏற்றுமதி பெருகியது என அவ்வாய்வாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

இதனைத் தொட ர்ந்து பீஜப்பூர் சுல்தான் மேற்கொண்ட படையெடுப்பு தஞ்சாவூரின் வளமான வேளாண் நிலங்களைப் பாழ்படுத்தியதால் மேலும் பல மக்கள் அடிமைகளாயினர். இக்காலத்தில் (1646) ஏறத்தாழ 2118 அடிமைகள் பெரும்பாலும் அதிராமபட்டினம், தொண்டி, காயல்பட்டினம் போன்ற கடற்கரை ஓரமாக அமைந்திருந்த பகுதிகளைச் சார்ந்தவராக இருந்தனர்.

Tags : Arrival of Europeans and the Aftermath ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும்.
11th History : Chapter 16 : The Coming of the Europeans : The Dutch Arrival of Europeans and the Aftermath in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை : டச்சுக்காரர் - ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை