ஐரோப்பியரின் வருகை - அரசியல் நடவடிக்கைகள் | 11th History : Chapter 16 : The Coming of the Europeans
அரசியல் நடவடிக்கைகள்
முகலாயப் பேரரசு, 1600 - 1650
1600 முதல் 1650 வரையான காலப்பகுதியில் முகலாயப் பேரரசு அதன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தது. ஆங்கிலக் கவிஞர்கள் இந்தியாவின் செல்வ வளங்கள் குறித்து எழுதியுள்ளனர். இதனால் முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும் பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பல பகுதிகளைச் சார்ந்த பயணிகள் தொடர்ந்து இந்தியாவிற்கு வந்தனர். அவர்களின் பயணக் குறிப்புகள் முகலாயப் பேரரசு மற்றும் அக்காலச் சமூகம் குறித்த விரிவான சமகால விவரங்களைத் தருகின்றன.
அக்பர் 1600களில் ராஜஸ்தானையும் குஜராத்தையும் கைப்பற்றி முகலாயப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தியதன் மூலம் தனது ஏகாதிபத்தியக் கனவுகளை நிறைவேற்றினார். 1573ஆம் ஆண்டு குஜராத்தையும் வென்றார். இதனால் மேற்காசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த, மதிப்பு மிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமான சூரத் முகலாயரின் செல்வாக்கிற்கு உள்ளானது. வணிகம் தவிர மெக்காவிற்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சூரத்திலிருந்தே புறப்பட்டுச் சென்றன. முகலாய அரசு சூரத் நகரத்திற்கு இரண்டு ஆளுநர்களை நியமித்திருந்தது. ஓர் ஆளுநர் நகரைப் பாதுகாப்பதற்காகத் தபதி நதியின் அருகே கட்டப்பட்டிருந்த, கண்காணிப்புக் கோபுரங்களுடன் கூடிய காவல் அரணில் பணியமர்த்தப்பட்டிருந்தார். மற்றொரு ஆளுநர் நகரம் தொடர்பான நிர்வாகத்திற்கும் சுங்க வரியை வசூலிப்பதற்கும் பொறுப்பாவார். இந்த நிர்வாக ஏற்பாடே முகலாயப் பேரரசுக்குச் சூரத் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும்.
அக்பர் வங்காளத்தைக் கைப்பற்றி பீகாருக்கும் கிழக்கே தனது பேரரசை விரிவுப்படுத்த முயன்றார். எனினும் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு வங்காளம் முகலாயப் பேரரசோடு ஒருங்கிணைக்கப்படாத பகுதியாகவே இருந்தது. பின்னர் பேரரசர் ஜஹாங்கீர் காலத்தில்தான் வங்காளம் முகலாயப் பேரரசின் மாகாணங்களில் (சுபா) ஒன்றாயிற்று. அக்பர் காலத்தில், தோடர்மாலின் வழிகாட்டலில் பேரரசின் வருவாய்த்துறை நிர்வாகம் முற்றிலும் சீரமைக்கப்பட்டதால் பேரரசு முழுவதும் ஒரே சீரான நிர்வாகமும் வரிவசூலும் நடைபெற்றது. அக்பர் தனது மறைவின்போது வலுவான, பொருளாதார வளம் மிகுந்த, நன்கு நிர்வகிக்கப்பட்ட பேரரசை விட்டுச் சென்றார்.
டச்சுக்காரரும், அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயரும் 1600களின் தொடக்க ஆண்டுகளில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காகச் சூரத் வந்தனர். அவர்களுக்கு வணிகம் செய்வதற்கும், தங்களுடைய பண்டங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக் கிட்டங்கிகளைக் கட்டிக்கொள்வதற்கும் முகலாய ஆளுநர் அனுமதியளித்தார். ஆனால் நகரின் எந்தப் பகுதியையும் தங்களின் சொந்தப்பகுதியாக உரிமை கொண்டாடும் வகையில் இடங்களைத் தர அவர் மறுத்துவிட்டார். இதனால் போர்த்துகீசியரை மாதிரியாகக் கொண்டு, வணிகத்தளம் அமைக்கும் தங்களுடைய ஆசை நிறைவேறாததால் டச்சுக்காரர் மனமுடைந்தனர்.
1668 இல் பம்பாய் தீவுகளைப் பெற்று, அங்கு தங்கள் தலைமையிடத்தை ஆங்கிலேயர் 1687இல் ஏற்படுத்தினர். அவர்களின் அடிப்படை நோக்கமானது தங்களது வணிக நடவடிக்கைகளுக்கு பம்பாயை மாற்று இடமாக உருவாக்குவதுதான். ஆனாலும் முகலாயரின் பாதுகாப்பிலிருந்த சூரத் வணிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வர்த்தக நடடிக்கைகளின் மையமாகத் தொடர்ந்தது.
விஜயநகருக்குப் பின் தென்னிந்தியா (1600-1650)
தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகப் பகுதிகளில் இக்காலகட்டத்தில் முகலாயப் பேரரசின் மையப்படுத்தப்பட்ட உறுதியான அரசியல் நிலைக்கு நேர் எதிரான சூழல் நிலவியது. அரசியல் ரீதியாக இப்பகுதிகள் பிளவுபட்டு ஓர் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருந்தன. விஜயநகர ஆட்சியின் போது தமிழகப் பகுதியில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன. இவை நிறுவப்பட்டதன் நோக்கமே மைய அரசுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரங்களையும் மனித ஆற்றலையும் (இராணுவ வீரர்களை) திரட்டிக் கொடுப்பதுதான். 1565இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய சுல்தானியக் கூட்டுப்படைகளால் விஜயநகர அரசு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னர் ஆதிக்கம் செய்த மைய அரசு வலிமை குன்றியது. விஜயநகரப் பேரரசின் அதிகாரத்தைப் பெயரளவிற்கு அங்கீகரித்த இந்த நாயக்க அரசுகள் நடைமுறையில் சுயாட்சி பெற்றவைகளாகச் செயல்பட்டன. அளவில் பெரிதான இந்நாயக்க அரசுகளோடு பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியர்கள் வசமும் இருந்தன. அவர்களில் முக்கியமானவர் இராமநாதபுரம் அரசின் சேதுபதி ஆவார். அவரும் தன்னைச் சுதந்திர அரசராக நிலைநிறுத்திக் கொள்ள விரும்பினார். இத்தகைய நிச்சயமற்ற அரசியல் சூழலால் 1590க்கும் 1649க்குமிடையே இப்பகுதிகள் பல இராணுவ மோதல்களைக் கண்டன. தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக செஞ்சி, மதுரை, தஞ்சாவூர் அரசுகளும் பல போர்களைச் செய்தன. விஜயநகரப் பேரரசருக்கு எதிராகக் கிளர்ச்சிகளும் நடைபெற்றன. நடைபெற்றுக்கொண்டிருந்த இம்மோதல்கள் தவிர 1646இல் சோழமண்டலப் பகுதிகளை ஊடுருவிய கோல்கொண்டாவின் படைகள் பழவேற்காட்டிற்கும் சாந்தோமுக்கும் இடைப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.
இக்காலகட்டத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் டச்சுக்காரரும் ஆங்கிலேயரும் சில இடங்களைத் தங்களுக்குச் சொந்தமானதாகப் பெற்று அவற்றின் மேல் தங்கள் உரிமையை நிறுவினர். நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தோனேசியத் தீவுகளுடனான வணிகத்திற்குத் தேவைப்படும் சில்லறைப் பொருட்களைக் கொள்முதல் செய்யத் தங்களுக்குச் சோழமண்டலக் கடற்கரையில் வணிகத்தளம் தேவை என்பதை டச்சுக்காரர் உணர்ந்தனர். செஞ்சி நாயக்கரிடமிருந்து பழவேற்காடு பகுதியைப் பெற்ற அவர்கள் அங்கே ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டனர். தமர்லா வேங்கடாத்திரி நாயக்கர் என்பவரிடமிருந்து நிலத்தைப் பெற்ற ஆங்கிலேயர் அங்கு 1639இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். இவ்வாறாக ஆங்கிலேய வணிகத் தளங்கள் சென்னையில் நிறுவப்பட்டு காலப்போக்கில் வளர்ந்து, மதராஸ் அதன் மாகாணத் தலைநகரமானது.
முகலாயப் பேரரசு 1650-1700
பேரரசர் ஒளரங்கசீப் தெற்கே தக்காணப்பகுதி வரை தனது பேரரசை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற பெருவிருப்புடன் செயல்பாடுகளைத் தொடங்கினார். 1680களில் அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய அரசுகள் கைப்பற்றப்பட்டன. இதனால் சென்னைக்குத் தெற்கேயுள்ள பகுதிகளும் முகலாயரின் மைய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. அளவுக்கு அதிகமாகப் பெரிதாகிவிட்ட முகலாயப் பேரரசு விரைவில் தனது பலவீனங்களை வெளிக்காட்டத் தொடங்கியது. சிவாஜியின் தலைமையில் மராத்தியர்கள் ஒன்றுபட்டு அதிகாரத்திலும் இராணுவ பலத்திலும் வளர்ந்து, 1664இல் சூரத்தைத் தாக்கிய போது இப்பலவீனம் தெளிவாகத் தெரிந்தது. எனவே சூரத்தைச் சூறையாடுவது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. ஆனால் 1670இல் மராத்தியரால் சூரத்தும் அதன் வணிகமும் சூறையாடப்பட்ட போது ஏற்பட்ட அழிவுகளிலிருந்து மீள்வதற்குப் பல ஆண்டுகள் ஆகின. தாங்கள் வெல்ல முடியாதவர்கள் என முகலாயர்கள் நினைத்ததற்கு இது பெரும் சவாலாக அமைந்ததோடு முகலாயப் பேரரசின் படிப்படியான சரிவுக்கு ஆரம்பமாகவும் அமைந்தது.
சூரத் தாக்குதலுக்குப் பின்னர், சிவாஜி தனது கவனத்தைத் தென்னிந்தியாவை நோக்கித் திருப்பி செஞ்சி, தஞ்சாவூர் நாயக்க அரசுகளைத் தோற்கடித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் செஞ்சி முகலாயரால் கைப்பற்றப்பட்டாலும் தஞ்சாவூர் மராத்தியரால் ஆளப்படும் அரசாக நீடித்தது. மராத்திய அரசர்கள், தமிழரின் அறிவார்ந்த, கலாச்சாரப் பாரம்பரியங்களை உள்வாங்கி ஏற்கும் கொள்கையால் தமிழகப் பகுதியின் பண்பாட்டுத் தலைநகராகத் தஞ்சாவூரை மாற்றினர்.
முகலாயப் பேரரசும் வழித்தோன்றல்களும் 1700-1750
மாபெரும் முகலாய அரசர்களில் கடைசி அரசரான ஔரங்கசீப் 1707இல் இயற்கை எய்தினார். அவத், வங்காளம், ஐதராபாத், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து முகலாய அரசப்பிரதிநிதிகள் தங்களைச் சுதந்திரமான ஆட்சியாளர்களாக அறிவித்துக்கொண்டனர். ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் முகலாயப் பேரரசின் வலிமை குன்றிய பாதுகாப்பற்ற நிலையை நன்கு அறிந்திருந்தனர்.
வங்காள, கர்நாடக நவாப்புகள் பெருமளவிலான பணத்தை ஆங்கிலேயரிடமிருந்து கடனாகப் பெற்றனர். அத்தொகையைத் திருப்பிச் செலுத்தும் ஒரு வழியாகத் தங்களின் பரந்த நிலப்பகுதிகளில் நிலவரியை வசூல் செய்து கொள்ளும் உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்கினர். வரி வசூலிப்பவர்களாக ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியதை இது குறிக்கிறது.
டச்சுக்காரர் இதற்குள் பழவேற்காட்டிலிருந்து வெளியேறி தங்களின் தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றியிருந்தனர். இதே காலத்தில் சென்னை செழிப்பு மிக்க நகரமாக வளர்ச்சியடைந்திருந்தது. ஆங்கிலேயர் பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பின்னர் இப்பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாயிருந்தனர். சூரத் நகரின் உள்ளூர் வணிகர்கள் தங்கள் பாதுகாப்புக் கருதி, தாங்கள் டச்சுக்காரரின் அல்லது ஆங்கிலேயரின் “பாதுகாப்பின் கீழ்” இருப்பதாக 1750இல் அறிவித்துக்கொண்டனர். எனவே உறுதியற்ற அரசியல் சூழலால் சூரத் அல்லலுற்றது. இதனால் பம்பாய் மாற்று வணிகத்தளமாக மாறி, சூரத்திலிருந்தும் குஜராத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் வணிகர்களை ஈர்க்கத் தொடங்கியிருந்தது.