ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் - இந்தியாவில் போர்த்துகீசியர் | 11th History : Chapter 16 : The Coming of the Europeans
ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும்
இந்தியாவில் போர்த்துகீசியர்
தனது முதல் பயணத்தில் வாஸ்கோடகாமா மூன்று கப்பல்களில் 170 நபர்களோடு வந்தார். கள்ளிக்கோட்டை அரசர் சாமுத்ரியினுடைய (சாமரின்) நட்புணர்வு வாஸ்கோடகாமாவிற்கு மகிழ்ச்சியளித்தது. 1498 ஆகஸ்ட் 29ஆம் நாள் தன்னுடன் வந்தவர்களில் உயிரோடிருந்த ஐம்பத்தைந்து மாலுமிகளுடனும் மூன்றில் இரண்டு கப்பல்களில் இந்தியச் சரக்குகளுடனும் ஊர்திரும்பும் பயணத்தை மேற்கொண்டார். வாஸ்கோடகாமாவின் வெற்றி போர்த்துகலை 1200 மாலுமிகளை 13 கப்பல்களுடன் பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல் என்பவரின் தலைமையில் மீண்டும் அனுப்பி வைக்கச் செய்தது. 1502 அக்டோபர் 29 ஆம் நாள் 20 கப்பல்களுடன் வாஸ்கோடகாமா மீண்டும் கள்ளிக்கோட்டை வந்தார். அங்கிருந்து அதிக வசதிகளைக் கொண்ட கொச்சிக்குச் சென்றார். ஐரோப்பிய வணிகம் பெருக வேண்டுமெனில் வணிகத்தின் மீது அராபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமை உடைக்கப்பட வேண்டுமென்பதை அவர் உணர்ந்தார். கொச்சி மற்றும் கள்ளிக்கோட்டையின் இந்து மன்னர்களிடையே நிலவிய பகைமையை அவர் தனது நலனுக்குப் பயன்படுத்திக் கொண்டார். இந்தியப் பெருங்கடல், செங்கடல் வணிகத்தில் அராபியர் கொண்டிருந்த முற்றுரிமையை ஒழித்தார். போர்த்து கல்லுக்குத் திரும்பும் முன்னர் கொச்சியில் ஒரு சரக்குக் கிடங்கையும் கண்ணூரில் ஒரு சிறைச்சாலையையும் நிறுவினார்.
போர்த்துகீசிய வணிகம் ஒருங்கிணைக்கப்படல்
ஆண்டுதோறும் பயணம் மேற்கொள்வதை நிறுத்திய போர்த்துகீசியர், இந்தியாவில் ஒரு ஆளுநரை அமர்த்த முடிவு செய்தனர். முதல் ஆளுநரான பிரான்ஸிஸ் கோ -டி- அல்மெய்டா "நீலநீர்க் கொள்கை”யைக் கடைபிடித்தார். இக்கொள்கையின் மூலம் அவர் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுப்படுத்தினார். சாமுத்ரியினுடைய கப்பற்படையையும் எகிப்திய சுல்தானின் கப்பற்படையையும் மூழ்கடித்தார். கொச்சி அரசருடன் நட்பு பூண்டு அவர் கொச்சி, கண்ணூர், மலபார் கடற்கரையின் ஏனைய இடங்களிலும் கோட்டைகளைக் கட்டினார்.
அல்மெய்டாவிற்குப் பின்னர் அல்புகர்க் (15091515) பதவியேற்றார். இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே. பீஜப்பூரின் அரசர் யூசுப் அடில் கானைத் தோற்கடித்த இவர் 1510இல் கோவாவைக் கைப்பற்றினார். கோவாவை முக்கிய வணிக மையமாக வளர்த்தெடுத்தார். அனைத்து மதம் சார்ந்த மக்களையும் கோவாவில் குடியேற ஊக்கப்படுத்தினார். ஐரோப்பியர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, போர்த்துகீசியர் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் குடியேறுவதை ஆதரித்தார். இந்தியாவிற்கும் - சீனாவிற்கும், மெக்காவிற்கும் - கெய்ரோவிற்கும் இடைப்பட்ட வணிகத் தடங்களின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் வணிகர்களைத் தோற்கடித்த அவர் மலாக்காவை (மலேசியாவில் உள்ளது) கைப்பற்றியதால் பேரரசு விரிவடைந்தது. அராபியரைத் தாக்கி ஏடன் நகரைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றார். 1515இல் 'ஆர்மசு’ துறைமுகம் அவர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
உங்களுக்குத் தெரியுமா?
உடன்கட்டை (சதி) ஏறும் பழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.
இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை வலிமைப்படுத்துவதில் மேலும் இரண்டு ஆளுநர்கள் முக்கியப் பங்காற்றினர். அவர்கள் நினோ டா குன்கா, ஆன்டானியோ டி நொரன்கா ஆகியோராவர். டா குன்கா 1534இல் பசீனையும் 1537இல் டையூவையும் கைப்பற்றினார். 1559இல் டாமன் துறைமுகம் இமாத்-உல்-முல்க் என்பவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதே சமயத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கொழும்புவில் ஒரு கோட்டை கட்டியதைத் தொடர்ந்து இலங்கையின் மீதான போர்த்துகீசியரின் கட்டுப்பாடு அதிகமானது. டி நொரன்காவின் காலத்தில்தான் (1571) முகலாய அரசர் அக்பர் குஜராத்திலுள்ள காம்பேவுக்கு வந்தார். போர்த்துகீசியருக்கும் முகலாயருக்கும் இடையிலான தொடர்பு உருவானது.
ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் 1580இல் போர்த்துக்கல் நாட்டைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டார். போர்த்துகீசியரை முதலில் இலங்கையில் தோற்கடித்த டச்சுக்காரர் பின்னர் மலபார் கடற்கரையிலிருந்த அவர்களின் கோட்டையையும் கைப்பற்றினர். இதனால் போர்த்துகீசியர் இந்தியாவில் தங்கள் குடியேற்றங்களைப் பாதுகாப்பதைக் காட்டிலும் பிரேசிலின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
போர்த்துகீசிய வருகையின் தாக்கம்
• இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றினர்.
• இந்திய அரசர்கள் எப்போதும் பிரிந்திருந்தனர். அதை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
• போரிடுவதில் ஐரோப்பியர் புதிய முறைகளைக் கைக்கொண்டனர். வெடிமருந்தும், வலிமை வாய்ந்த பீரங்கிப்படையும் முக்கியப் பங்கு வகித்தன.
• போர்த்துகீசியரால் அராபியரின் வணிக முற்றுரிமையைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உண்மையில் அது அவர்களுக்கு உதவவில்லை: மாறாக அது ஆங்கிலேயருக்குப் பயனளித்தது. ஆங்கிலேயர் கடற்கொள்ளையரை அழித்து கடற்பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்கினர்.
• தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களைப் போர்த்துகீசியர் ஊக்குவித்ததன் விளைவாக ஒரு புதிய யூரேசிய இனக்குழு உருவானது. இவர்கள் பின்னாளில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலுமிருந்த போர்த்துகீசியரின் காலனிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
• சென்னை சாந்தோம் போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கியச் சான்றாக உள்ளது. போர்த்துகீசியர் கருப்பர் நகரம் (Black Town) என்று மயிலாப்பூரை அழைத்தனர் (ஆங்கிலேயர் கருப்பர் நகரம் என்று ஜார்ஜ் டவுனை அழைத்தனர்).
• போர்த்துகீசியரின் குடியேற்றங்களுக்குப் பிறகு இயேசு சபையைச் சார்ந்த சமயப்பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், 1. இராபர்டோ டி நொபிலி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் விரிவாக எழுதினார் இவர் தமிழ் உரைநடையின் தந்தையெனக் கருதப்படுகிறார். 2. ஹென்ரிக்ஸ், போர்த்துகல் நாட்டு யூதரான இவர் தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
மீன்பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை, முத்துக்குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துகீசியருக்கும் கீழைக் கடற்கரையைச் சார்ந்த முஸ்லீம் குழுக்களுக்கும் இடையே 1530களில் மோதல்கள் நடந்தன. இதைப் பொறுத்தமட்டில், பரதவ மக்களின் ஒரு குழுவானது, ஆயுதம் பூண்ட முஸ்லீம் வணிகர்களின் தாக்குதல்களால் தாங்கள் பட்ட துயரங்களை கொச்சியிலிருந்த போர்த்துகீசிய அதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கேட்டனர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட போர்த்துகீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களைக் கீழைக் கடற்கரைக்கு அனுப்ப, ஆயிரக்கணக்கான பரதவகுல மக்கள் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்திற்கு மதமாறினர். இதனைத் தொடர்ந்து இயேசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்ஸிஸ் சேவியர் 1542இல் கோவா வந்தார். பின்னர் மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு சடங்கு நடத்துவதற்காகத் தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார். சோழமண்டலக் கடற்கரைக் கிராமங்களில் உயர் கோபுரங்களோடு உருவான தேவாலயங்களை இன்றும் காணலாம்.
கார்டஸ் (cartaz) என்ற பெயரில் போர்த்துகீசியர் வழங்கும் பாதுகாப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப்போவதாக பயமுறுத்துவர். கார்டஸ் முறையில் போர்த்துகீசியர் வணிகர்களிடமிருந்து பணம் பறித்தனர். கடற் கொள்ளையர்களுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பு வழங்குவதாக கூறிக்கொண்டனர். ஆனால் அதைப் போன்ற இடையூறுகளில் பலவற்றை செய்தவர்களும் போர்த்துகீசிய கடற்கொள்ளையரே.