வரலாறு - பொருளாதாரம் | 11th History : Chapter 16 : The Coming of the Europeans
பொருளாதாரம்
வேளாண்மை
கிராமப்புற வாழ் மக்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கைக்கு வேளாண்மையைச் சார்ந்திருந்தனர். உணவுதானியப் பயிர்களுடன் கூடுதலாக கரும்பு, எண்ணெய்வித்துக்கள், பருத்தி, அவுரி உள்ளிட்ட வணிகப் பயிர்களும் பயிர் செய்யப்பட்டன. இந்தியாவிற்குள் உபரியான பகுதியிலிருந்து பற்றாக்குறைப் பகுதிகளுக்கு உணவுதானியங்கள், நெய், சர்க்கரை முதலான உணவுப் பண்டங்களைக் கொண்டு சென்றதன் மூலம் விறுவிறுப்பாக வணிகம் நடந்தது. குறிப்பாக உணவுதானியங்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. தமிழகம், உணவு தானியங்களை ஆந்திர பிரதேசத்திலிருந்தும் வங்காளத்திலிருந்தும் இறக்குமதி செய்தது. குஜராத் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மிளகு, இலவங்கம், இஞ்சி ஆகியவற்றுக்குப் பதிலாக உணவுதானியங்களை மலபார் பகுதிக்கு ஏற்றுமதி செய்தது. இலங்கையிலும் பட்டாவியாவிலும் (இந்தோனேசியா) இருந்த டச்சு குடியேற்றங்களுக்கும் உணவு தானியங்கள் அனுப்பப்பட்டன.
பருத்தி உற்பத்தி
இந்தியா பொருள் உற்பத்திக்கான வலுவான அடிப்படைத்தளத்தைப் பெற்றிருந்தது. குறிப்பாக நாட்டின் பல்வேறு மையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியிழைத் துணிகளுக்காக அது புகழ் பெற்றிருந்தது. நெசவுத் தொழில் நாட்டின் இரண்டாவது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது. இதற்கு ஆதாரத் துணை நடவடிக்கைகளாக நூல் நூற்றலும் சாயத் தொழிலுமிருந்தன. கைவினைப் பொருளுற்பத்தி நகர்ப்புறம் கிராமப்புறம் ஆகிய இரண்டிலும் நடைபெற்றது. ஆடம்பரத் தொழில்கள் (எடுத்துக்காட்டாக உலோக வேலைகள்) நகரங்கள் சார்ந்தனவாக இருந்தன. நெசவுத் தொழில் பெரும்பாலும் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது. நமது நாட்டில் பருத்தி விளைந்தது அதற்கு சாதகமாக அமைந்தது. படிகாரம் போன்ற வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி நிரந்தர வண்ணங்களைத் தயாரித்துத் துணிகளுக்குச் சாயமேற்றுவதில் இந்தியக் கைவினைச் சமூகங்கள் சிறப்பான அறிவினையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருந்தன. சோழமண்டலப்பகுதி வண்ணம் பூசப்பட்ட ‘கலம்காரி' எனப்படும் துணி வகைக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வகைத் துணியில் அலங்காரக் கோடுகளோ அல்லது வடிவங்களோ முதலில் வரையப்பட்டு பின்னர் சாயம் ஏற்றப்படும். இது பதினாறாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தோனேசியத் தீவுகளில் வாழும் மக்கள் விரும்பி வாங்கும் நுகர்வுப் பொருளானது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏனைய உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுள் மிக முக்கியமானவை துணிகளேயாகும். பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்நிலை தொடர்ந்தது.
கர்நாடகம் என்பது உண்மையில் கன்னடமொழி பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதியைக் குறிப்பதாகும். பதினெட்டாம் நூற்றாண்டில் இது மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெற்கு ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இப்பகுதிகளை ஆற்காட்டு நவாப் கட்டுப்படுத்தினார்.
சந்தைப்படுத்துதல்
வெளிச் சந்தைக்கான உற்பத்தியும் பரந்து விரிந்திருந்தது. இதனால் சொந்தத் தேவை என்ற எல்லையைத் தாண்டி பொருளுற்பத்தி வணிகமயமாயிருந்தது. இதற்குச் சந்தைப்படுத்தும் முகமை அமைப்புகள் தேவைப்பட்டன. இவை உற்பத்தியாளரிடமிருந்து வேறுபட்ட வணிக வர்க்கத்தினர் அடங்கிய அமைப்புகளாகும். இவ்வாறு வணிகர்கள் கிராமப்புறப் பகுதிகளில் பரவலாக இருந்த உற்பத்தியாளர்களை உள்நாட்டிற்குள் இருந்த நகரத் சந்தைகளோடும் நாட்டுக்கு வெளியேயிருந்த வெளிச் சந்தைகளோடும் இணைத்தனர். நாட்டிலிருந்த விரிவான ஒருங்கிணைந்த வணிக நடவடிக்கைகள் பல சுற்றுகளில் செயல்பட்டன. பொருள்கள் கிராமப்புறச் சந்தைகளிலிருந்து மண்டல அளவிலான சந்தைகளுக்கும், அடுத்து பெரிய நகர வணிக மையங்களுக்கும் சென்று இறுதியாகத் துறைமுகங்களைச் சென்றடைந்தன. அவையே நாட்டிற்கு வெளியேயுள்ள சந்தைகளுக்கான வாயில்களாகும்.
வணிகக் குழுக்கள்
பல்வேறு நிலைகளில் செயல்பட்ட பல்வகைப்பட்ட சந்தைகளைப் போலவே வணிகர்களும் ஒரே வகைப்பட்ட குழுவைச் சார்ந்தவர்கள் அல்ல. சிறிய இடங்களிலிருந்த சந்தைகளுக்குச் சேவை செய்ய வியாபாரிகளும் சில்லரை வர்த்தகர்களும் இருந்தனர். வணிக நடவடிக்கைகளை ஒரு பிரமிடாக நாம் கற்பனை செய்து கொண்டால் இவ்வணிகர்கள் பிரமிடின் அடித்தளப் பகுதியிலிருந்தனர். பிரமிடின் உச்சத்தில் பெரும் வர்த்தகர்கள் இருந்தனர். பெருமளவிலான மூலதனத்தைக் கையிருப்பாகக் கொண்ட இவர்களே கடல் வணிகத்தை முன்னின்று இயக்கியதோடு, துறைமுகங்களின் கடலோரப் பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்களையும் கட்டுப்படுத்தினர். இவர்கள் தங்களின் கீழ் தரகர்களையும் துணைத்தரகர்களையும் பணியமர்த்தி உள்நாட்டு பகுதிகளிலோ துறைமுக நகரங்களின் உட்பகுதிகளிலோ உற்பத்தியாகும் பொருட்களைக் கொள்முதல் செய்தனர். இவர்களை வணிகர்களின் பிரமிடில் இடை அடுக்கைச் சார்ந்தவர்களாகக் கருதலாம்.
வங்கித்தொழிலும் வணிக முதலீட்டாளரின் எழுச்சியும்
பரந்துவிரிந்த இத்தகைய வணிகத்தை மேம்படுத்த வணிக நிறுவனங்களும் நன்கு வளர்ந்திருந்தன. பல்வகைப்பட்ட நாணயங்கள் புழக்கத்திலிருந்ததால், அவற்றின் தூய்மை நிலையைப் பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அன்றைய அளவில் மதிப்பிடவும் ‘சராப்’ (Shroffs) எனப்பட்ட பணம் மாற்றுவோரும் இருந்தனர். அவர்கள் உள்ளூர் வங்கியாளராகவும் செயல்பட்டனர். ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் பணத்தை ரொக்கமாக அனுப்புவதற்குப் பதிலாக வணிகர்கள் பணமாற்று முறிகளை (Bills of Exchange) வழங்கினர். உண்டி என்றழைக்கப்பட்ட இவை பல்வேறு இடங்களில் ‘சராப்’களால் குறிப்பிட்ட தள்ளுபடியோடு பணமாக மாற்றப்பட்டன.
நன்கு வளர்ந்த உள்கட்டுமானங்களோடும் அமைப்புகளோடும் இருந்த வணிகம், பணம் படைத்த வணிகர்களுக்கு மேலும் பெரும் செல்வத்தை ஈட்ட உதவியது. இவ்வகையான வணிக இளவரசர்களை அல்லது முதலாளிகளை நாம் இந்தியா முழுவதும் காணலாம். சூரத்திலிருந்த பனியாக்கள், பாரசீக வணிகர்கள், அகமதாபாத்தின் நகர் சேத்துக்கள், வங்காளத்து ஜெகத் சேத்துக்கள் மற்றும் சோழமண்டலப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார் ஆகியோரை எடுத்துக்காட்டாகக் கூறலாம். சமகால ஐரோப்பியப் பார்வையாளர்கள், வணிகத்தில் வரும் இலாபம் அனைத்தையும் பெருவணிகர்களான இவர்களே கைவசப்படுத்திக் கொண்டதால், அடிப்படையில் உற்பத்தி செய்பவர்களான விவசாயிகள், நெசவாளர்கள் போன்றோரின் வருமானமும் வாழ்க்கையும் இரங்கத்தக்க நிலையில் இருந்தது எனக் குறிப்பிடுகின்றனர்.
ஆங்கிலேயர் நடுநிலைமை தவறி சார்புத் தன்மையுடன் இவ்வாறு கூறியுள்ளனர் என்று நினைத்தாலும், பிறருடைய கருத்துக்களை எடுத்துக்கொள்ளாமல் முழுமையான அளவுகோல்களைக் கொண்டு கணித்தாலும் அடிப்படைத் தொழிலாளர்களின் ஊதியமும் வாழ்க்கைத் தரமும் கீழ்நிலையிலிருந்தது என்பதே உண்மை . இதன் காரணமாகப் பஞ்சங்கள் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது இவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருந்தனர். எடுத்துக்காட்டாக சென்னை மாகாணப் பகுதிகளில் 1678 முதல் 1750ஆம் ஆண்டுகளுக்கிடையே பத்துப் பஞ்சங்கள் ஏற்பட்டன. சில சமயங்களில் அவை பரந்து விரிந்தனவாகவும் பல ஆண்டுகளுக்கு நீடித்துமிருந்தன. இவை கிராமப்புற ஏழை மக்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்களைத் தள்ளியது. சோழமண்டலப் பகுதியிலிருந்து படாவியாவிற்கு அனுப்பப்பட்ட சரக்குகளோடு வழக்கமாக அனுப்பப்பட்ட ஆண், பெண் அடிமைகளின் பெயர்கள் டச்சு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடல் கடந்த வணிகம்
கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளின் கடல் கடந்த வணிகமானது இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் இணைக்கப்பட்டு உறுதியான நன்கு வடிவமைக்கப்பட்ட வணிக முறையாகப் பதினாறாம் நூற்றாண்டில் மாறியது. இந்தியப் பெருங்கடலில் சரக்குகளைச் சுமந்து செல்வது என்பது பல்வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்ட நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது. சீனாவிலிருந்தும் ஏனைய தூரக்கிழக்கு நாடுகளிலிருந்தும் வந்த கப்பல்கள் மலாக்காவை வந்தடைந்து சரக்குகள் அங்கு இறக்கப்பட்டு மேற்கேயிருந்து வந்த பொருட்கள் அக்கப்பல்களில் ஏற்றப்பட்டன. ஏற்கனவே இறக்கப்பட்ட சரக்குகள் வேறு கப்பல்களில் ஏற்றப்பட்டு அவை மேற்குக் கடற்கரையிலுள்ள கள்ளிக்கோட்டை அல்லது குஜராத்திலுள்ள சூரத் துறைமுகத்தை வந்தடையும். இப்படியான துறைமுகங்கள் இடைநிலைத் துறைமுகங்கள் (Entrepots) என்றழைக்கப்பட்டன. ஐரோப்பா, மேற்காசியாவிலிருந்து வந்த பொருட்கள், இத்துறைமுகங்களில் கிழக்கேயிருந்து வந்த பண்டங்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகளான நறுமணப் பொருட்கள், சாயம், துணி, உணவு தானியப் பொருட்களுக்காக மாற்றப்படும். பதினாறாம் நூற்றாண்டில் கள்ளிக்கோட்டை மதிப்பிழந்தது. மாறாக, பரந்துவிரிந்த பல்வகைப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் கடலோரப் பகுதிகளைக் கொண்ட குஜராத் துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றன. சோழமண்டலக் கடற்கரையின் துறைமுகங்களான மசூலிப்பட்டினம், பழவேற்காடு ஆகியவையும், அவற்றிற்கு தெற்கே உள்ள ஏனைய துறைமுகங்களும் பர்மா, மலாய் தீபகற்பகத்திலிருந்து வரும் கப்பல்களுக்கு இடைநிலைத் துறைமுகங்களாகச் சேவை செய்தன.