ஐரோப்பியரின் வருகை - இந்திய வணிகர்களுடன் கூட்டமைப்பு | 11th History : Chapter 16 : The Coming of the Europeans
இந்திய வணிகர்களுடன் கூட்டமைப்பு
இந்தியாவில் மிகப்பெரும் வணிகர்களின் உதவியும் உறவும் இருந்தால்தான் தாங்கள் வெற்றிபெற இயலும் என்பதைத் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பியர் உணர்ந்தனர். இந்திய வணிகர்கள் ஐரோப்பியர்களிடம் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தக் கிடைத்த புதிய வணிக வாய்ப்பினைக் கண்டு அவர்களோடு இணைந்து செயல்பட்டனர். சூரத் நகரில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் தங்களுக்கு ஆதரவு தரும் முகலாய அரசாங்கத்தின் பாதுகாப்போடு வணிகர்கள் செயல்பட்டு வந்தனர். பழவேற்காடு, பின்னர் ஆங்கிலேயரின் கீழிருந்த சென்னை, பிரெஞ்சுக்காரரின் கீழிருந்த புதுச்சேரி ஆகிய காலனியாதிக்க நிலப்பகுதிகளைத் தங்களுக்குப் பாதுகாப்பான இடங்களாக இந்திய வணிகர் கருதினர். தமிழகப் பகுதியில் தொடரும் அரசியல் குழப்பங்களிலிருந்து விலகி இவ்விடங்களிலிருந்து தங்கள் வணிகத்தைப் பாதுகாப்பாக செய்ய இயலும் என நினைத்தனர்.
ஐரோப்பியருடன் இந்திய வணிகர் மேற்கொண்ட வணிக நடவடிக்கைகள் 1700ஆம் ஆண்டு வரை பாதகமற்ற முறையிலிருந்தன. சூரத்தில் மராத்தியப் படையெடுப்புக் குறித்த அச்சத்தினாலும் தகுந்த பாதுகாப்பு வழங்க இயலாத முகலாய அரசின் இயலாமையினாலும் சூழ்நிலை மாறியது. சென்னையில் தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலேயரால் ஐரோப்பாவிற்கானத் துணி ஏற்றுமதியை அதிகரிக்க, இந்திய வணிகர்களை ஏற்கவியலாத வணிக நிபந்தனைகளை ஏற்க வைக்க முடிந்தது. படிப்படியாக ஆங்கிலேய வணிகருக்கும் உள்ளூர் வணிகருக்கும் இடையிலான அதிகார உறவு மாறத் தொடங்கியது. முந்தைய நூற்றாண்டில் வணிகக் காட்சியில் கதாநாயகர்களாக இருந்த வர்த்தக இளவரசர்கள் முற்றிலும் காணாமல் போனதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஐரோப்பாவில் இந்தியத் துணிகளுக்கான தேவை அதிகரித்ததால், அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இத்தேவை அதிகரிப்பு உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பயனளிப்பதாக அமைந்தது. உற்பத்திக் காரணிகளும் (தொழிலாளர், கச்சாப் பொருள், மூலதனம்) நேர்மறையாக வினையாற்றின. இருந்தபோதிலும் ஐரோப்பாவின் தேவை தொடர்ந்து அதிகரித்தபோது அதிக உற்பத்திக்காகக் கொடுக்கப்பட்ட நெருக்கடி மிக விரைவாக உற்பத்தி ஆதாரங்களைப் பாதித்தது. தெற்கே அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்களும், கச்சாப் பொருட்களுக்கும் உணவு தானியங்களுக்கும் ஏற்பட்ட பற்றாக்குறையையும் நெசவாளர்கள் கூடுதலாக ஏற்க வேண்டிய சுமைகளாயின. இப்படி அதிகமான வணிக வாய்ப்புகள் குறுகிய காலத்திற்குப் பயனளித்ததாலும் நீண்டகால விளைவென்பது அவ்வாறே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
இந்த நூற்றைம்பது வருட காலத்தில் இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர் படிப்படியான மாற்றத்திற்கு உள்ளாயினர். வணிகராயிருந்த ஆங்கிலேயர் வணிகப் பேரரசை நிறுவியவர்களாக உருமாறி இறுதியில் நாட்டின் பெரும்பகுதி ஆட்சியாளராக மாறினர்.