வரலாறு - பாடச் சுருக்கம் | 11th History : Chapter 16 : The Coming of the Europeans
பாடச் சுருக்கம்
I
• வங்காளம் மற்றும் குஜராத்தில் அக்பரது பேரரசின் விரிவாக்கம் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களுடனான தொடர்புக்கு வழிவகுத்தது. அக்பர் மற்றும் ஜஹாங்கீரின் ஒப்புதலுடன் டச்சு, ஆங்கிலக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.
• தென்னிந்தியாவில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய இடங்களில் நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன. செஞ்சி நாயக்க அரசின் அனுமதியுடன் பழவேற்காட்டில் டச்சு வணிகத் தளம் அமைக்கப்பட்டது.
• ஒளரங்கசீப்பின் லட்சியங்களுக்குத் தடையாக இருந்த சிவாஜி தென் இந்தியாவில் தனது செல்வாக்கினை நிலைநாட்டினார். தஞ்சை, செஞ்சி நாயக்க மன்னர்களை சிவாஜி வெற்றி கொண்டதால் தஞ்சையில் மராத்திய அரசு நிறுவப்பட்டது.
• ஒளரங்கசீப்பின் மறைவுக்குப் பிறகு பல சிறு அரசுகள் தங்களை நிலை நிறுத்திக்கொண்டன, டச்சுக்காரர் பழவேற்காட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கும், ஆங்கிலேயர் சூரத்திலிருந்து பம்பாய்க்கும் தங்கள் தலைமையிடத்தை மாற்றிக் கொண்டனர்.
• 1600-1750 காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல் பொருளாதார வளர்ச்சி கணக்கெடுப்பின்படி, வேளாண்மைத்துறையில் பருத்தி சாகுபடியையும் உற்பத்தித்துறையில் நெசவுத் தொழிலையும், வணிகக் குழுக்கள் கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்டனர்.
• ஐரோப்பியரின் வருகையும், இந்திய வணிகர்களுடனான கூட்டும் ஆங்கிலேயர் தங்களின் வர்த்தகப் பேரரசை உருவாக்கிக் கொள்ள அடித்தளமிட்டது.
II
• கோவாவைத் தலைமையிடமாகக் கொண்டு போர்த்துகீசியர் தங்களின் வணிகத்தளத்தை அமைத்தனர். போர்த்துகீசியரின் வருகை இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
• டச்சு கிழக்கிந்திய கம்பெனி வணிக நடவடிக்கைகளில் குறிப்பாக அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
• பிரெஞ்சுக்காரரின் குடியேற்றமாகப் புதுச்சேரி விளங்கியது. பிரெஞ்சுக்காரருக்கும் டச்சுக்காரருக்கும் ஏற்பட்ட வணிகப்பூசல்களால் டச்சுக்காரர் இந்தியாவைவிட்டு வெளியேறினர்.
• தரங்கம்பாடியில் லுத்தரன் சமயப் பரப்புக்குழு ஏற்படுத்தப்பட்டதும் அப்பகுதிகளில் சமயப் பரப்பாளரான சீகன்பால்குவின் பங்கு மற்றும் தாக்கம் விவரிக்கப்பட்டுள்ளது.
• ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட வணிகப்பூசல்களால் மூன்று கர்நாடகப் போர்கள் ஏற்பட்டன; அந்தப் போர்களில் ஆங்கிலேயர் சார்பாக ராபர்ட் கிளைவும், பிரெஞ்சுக்காரர் சார்பாக துய்ப்ளேவும் பெரும் பங்காற்றினர்.
• பிளாசி, பக்சார் போர்கள் ஆங்கிலேயரை இந்தியப் பகுதியில் ஒரு காலனியாதிக்கச் சக்தியாக மாற்றின.