Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள்

பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் | 8th Science : Chapter 21 : Crop Production and Management

   Posted On :  31.07.2023 12:46 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள்

ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் விவசாயிகளின் தேவைகளின் அடிப்படையில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்முறைகளை வேளாண்மை சார்ந்த உருவாக்குகின்றன.

வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள்

ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் விவசாயிகளின் தேவைகளின் அடிப்படையில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்முறைகளை வேளாண்மை சார்ந்த உருவாக்குகின்றன. பொருத்தமான ஊடகங்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி மக்களின் நலனிற்காக இத்தகவல்களை இவை வெளியிடுகின்றன. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபடும் சில நிறுவனங்களாகும்.

 

1. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI)

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சி, பயிற்றுவித்தல் மற்றும் விரிவாக்கத்திற்கான ஒரு தேசிய நிறுவனம் ஆகும். IARI நிறுவனம் பூசா நிறுவனம் என்றும் பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) இதற்கு நிதியளித்து இதனை


நிர்வகிக்கிறது. இந்தியாவில் 1970-ஆம் ஆண்டில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட ஆராய்ச்சிக்கு இதுவே காரணமாக இருந்தது. IARI யின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தேவைகளைச் சந்திப்பதற்கு தேசத்தின் உதவியாக இருக்கின்றன. பல சிறப்புமிக்க அதிக மகசூல்தரும் பயிர் ரகங்கள் ICAR யினால் உருவாக்கப்பட்டுள்ளன.

 

2. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் விவசாயம் சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கும் தன்னாட்சி அமைப்பாகும். இந்திய வேளாண் துறை அமைச்சர் இதன் தலைவர் ஆவார். வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் கீழ் இது செயல்படுகிறது. இது உலகிலுள்ள வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் நிறுவனங்களின் மிகப்பெரிய இணையமாகும்.


 

3. க்ரிஷி விஞ்ஞான் கேந்த்ரா ( KVK)

க்ரிஷி விஞ்ஞான் கேந்த்ரா ஒரு வேளாண் அறிவியல் நிலையமாகும். இந்த மையங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திற்கும் (ICAR) விவசாயிகளுக்கும் இடையேயான இணைப்பாகச் செயல்படுகின்றன. வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்புகளை உள்ளூர்களில் நடைமுறைப் படுத்துதல் இவற்றின் நோக்கமாகும். முதல் KVK 1974ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் நிறுவப்பட்டது. அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் KVK நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கை வளரத் தொடங்கியுள்ளது. KVK நிலையங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் வேளாண் செயல்திட்டங்களை மேற்கொள்கின்றன. மேலும், அரசின் முயற்சிகளை உள்ளூர் மக்களுக்குக் கொண்டுசெல்லும் தகவல் மையங்களாகவும் அவை செயல்படுகின்றன. வேளாண் பல்கலைக் கழகங்கள், மாநிலத் துறைகள், ICAR நிறுவனங்கள் மற்றம் கல்வி நிறுவனங்கள் அல்லது அரசு சாரா அமைப்புகள் போன்ற பல வகையான சார்பு நிறுவனங்களின் கீழ் KVK நிலையங்கள் உருவாக்கப்படலாம்.

 

அ. KVK நிலையங்களின் பொறுப்புகள்

ICAR நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட புதுமையான வேளாண் முறைகள் அல்லது விதை ரகங்கள் போன்ற புதிய நுட்பங்களைச் சோதிப்பதற்கு ஒவ்வொரு KVK நிலையங்களும் ஒரு சிறிய அளவிலான விவசாயப் பண்ணையை நிர்வகிக்கின்றன. புதிய நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வதற்குமுன் உள்ளுர் அளவில் சோதித்து அறிவதற்கு இது வழிவகை செய்கிறது. புதிய திட்டங்களின் நன்மைகளை விவசாயிகளின் நிலங்களில் பரிசோதித்துக் காட்டுவதற்கான நிகழ்ச்சிகளுக்கும் இவை ஏற்பாடு செய்கின்றன. புதுமையான வேளாண் நுட்பங்களைப் பற்றி விவசாயிகள் குழுக்களுடன் கலந்து ஆலோசனை செய்திட KVK நிலையங்கள் பணிமனைகளை நடத்துகின்றன. காலநிலை மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைகளை வானொலி மற்றும் கைபேசி மூலமாக விவசாயிகளுக்கு வழங்கும் சேவைகளை மேற்கொள்கின்றன. இவை பயிர்கள் மற்றும் பயிர் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன. வேளாண் நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் சமுதாயங்களுக்கு இடையேயான உறவினையும் மேம்படுத்துகின்றன.

செயல்பாடு 6

உங்களுடைய ஆசிரியருடன் உங்கள் பகுதியில் உள்ள க்ரிஷி விஞ்ஞான் கேந்திராவை (வேளாண் அறிவியல் நிலையம்) பார்வையிடு. அந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் கண்டறிக.

Tags : Crop Production and Management | Chapter 21 | 8th Science பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 21 : Crop Production and Management : Agriculture Research Institutions Crop Production and Management | Chapter 21 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை : வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் - பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை