தென்னிந்தியா - வரலாறு - அஜந்தா | 11th History : Chapter 9 : Cultural Development in South India
அஜந்தா
மகாராஷ்டிர மாநிலம்
ஔரங்காபாத் நகரத்திற்கு வடக்கே
100 கிலோமீட்டர் தொலைவில்
அஜந்தா குகைகள்
அமைந்துள்ளன. எரிமலைப் பாறைகளிலிருந்து மொத்தம்
30 குகைகள் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை சுவரோவியங்களுக்குப் பெயர்பெற்றனவாக இருந்தாலும் இங்குச்
சிற்பங்களும் உள்ளன. ஹீனயான பௌத்த
மதப் பிரினைச்
சேர்ந்தவர்களே முதன்முதலில் அஜந்தா
குகைகளை அமைக்கத் துவங்கினர். பொ.ஆ.மு. 200 பொ.ஆ. 200
வரையில் தக்காண
பீடபூமிப் பகுதிகளை
ஆண்ட அரசர்கள் இம்முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர். அரசர்களில் துவங்கி
வணிகர்கள் வரை ஆதரவு வழங்கியோரைப் பற்றிக்
கல்வெட்டுகள் பேசுகின்றன. முதற்கட்டக்
குகைகள் பொ.ஆ.மு.
200 - பொ.ஆ.
200 காலகட்டத்தைச் சேர்தவையாகும். இரண்டாவது கட்டக்
குகைகள் சுமார்
பொ.ஆ.200
- பொ.ஆ.400
காலப்பகுதியைச் சேர்ந்தனவாகும்.
ஓவியம்
அஜந்தா குகைகள்
சிறப்பு வாய்ந்த சுவரோவியங்களின் கருவூலமாகும். முதல் கட்ட ஓவியங்கள் பெரும்பாலானவை குகை எண் ஒன்பதிலும்
பத்திலும் காணப்படுகின்றன. இவை சாதவாகனர்
காலத்தைச் சேர்ந்தனவாகும். அஜந்தா குகையோவியங்களைத் தீட்டியவர்கள் அறிவுநுட்பத்துடன் திட்டமிட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றியுள்ளனர். முதலில்
பாறைச் சுவரின் மீது தாவரங்களின் நார்,
நெல் உமி,
மணல் மற்றும் கல்பொடி
கலந்து செய்த
மென்சாந்தைப் பூசினார்கள். இதன்
மீது சுண்ணாம்பு
ஒரு மெல்லியப் பூச்சாகப்
பூசப்பட்டுள்ளது. இப்பூச்சு வண்ணங்களை உள்வாங்கும் தன்மை
உடையது. வண்ணங்களைப் பூசுவதற்காக இப்பரப்பின்
மீது துணி விரித்து
ஒட்டப்பட்டுள்ளதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
வண்ணங்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தும் தாதுக்களிலிருந்தும் எடுக்கப்பட்டன. சிவப்பு,
வெள்ளை, மஞ்சள்,
நீலம், பச்சை
ஆகியவையே முக்கிய
வண்ணங்கள். ஓவியங்களில்
அழகியல் கூறுகள்,
மாலைகள், காது
வளையங்கள், தலைப்பாகைகள், கழுத்தணிகள், மனிதக் கைகளின் மிகச் சரியான அசைவுகள் ஆகியவன வெளிப்படுகின்றன. கதைகளைச் சொல்லும் சுவரோவியங்கள் கருத்தைக்கவர்வதாயும் செய்திகளைக் கூறுவதாயும் அமைந்துள்ளன. ஜாதகக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காட்சிகள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சில முக்கியப் பகுதிகள் ஆகியனவே ஓவியங்களின் மையக் கருவாக உள்ளன.
வானுலகவாசிகளான கின்னரர்கள், வித்யாதாரர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். பிற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களில் போதிசத்துவர் அளவில் பெரிதான புடைப்போவியமாக காண்பிக்கப்பட்டுள்ளார். பல்வகைப்பட்ட மனித உணர்வுகள் ஓவியங்களாக வடிக்கப்பட்டிருந்தாலும் பரிவு, இரக்கம், அமைதி ஆகிய உணர்வுகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. ஒளியும் நிழலும் அறிவுக் கூர்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறுவண்ணங்களில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளமைக்கு வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்களைக் குறிப்பதாகப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
கட்டடக் கலையும் சிற்பமும்
கட்டடக்கலை நோக்கில் அஜந்தா குகைகளை இரு குழுக்களாகப் பார்க்கலாம். ஒன்று சைத்தியங்கள்; மற்றொன்று விகாரங்கள். சைத்தியா பல வளைவுகள் ஒருங்கிணையும் முகடுகளையும் நீண்ட அறைகளையும் கொண்டுள்ளது. அறையின் ஒரு கோடியில் புத்தருடைய சிலை மரபார்ந்த பாணியில் உள்ளது. புத்தருடைய சிற்பங்கள் அன்பின், ஆதரவின் ஒட்டுமொத்த உருவாக உள்ளன. பெரிய தோற்றமும் அதிக எடையும் சிற்பங்களின் பொது இயல்பாக உள்ளது. குழந்தைகளோடு காணப்படும் யக்சிகள், ஹரிதி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. போதிசத்துவர் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளதும் மற்றொரு சிறப்பம்சமாகும். போதிசத்துவர் அவலோகிதேஸ்வரர் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.