Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

வரலாறு - தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி | 11th History : Chapter 9 : Cultural Development in South India

   Posted On :  15.03.2022 10:30 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 9 : தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

பொ.ஆ. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய அரசியல் வரலாற்றில், பாதாமி (வாதாபி) சாளுக்கியருக்கும் (மேலைச் சாளுக்கியர்) காஞ்சி பல்லவருக்கும் இடையிலான மோதல்கள் முதன்மை பெறுகின்றன.

தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

 

கற்றல் நோக்கங்கள்

இடைக்காலத்தின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் இருந்த அரசு மற்றும் சமுதாயத்தைப் புரிந்துகொள்வது

சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையேயான மோதலின் இயல்பை அறிதல்

இருஅரசுகள் மோதிக்கொண்டிருந்த சூழலில் தென்னிந்தியாவில் நடைபெற்ற பண்பாட்டுப்பரிமாற்றங்களைப் புரிந்து கொள்ளுதல்

அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம் ஆகிய இடங்களிலுள்ள நினைவுச் சின்னங்களின் மகத்துவத்தையும் பிரமாண்டத்தையும் அறிதல்

பக்தி இயக்கத்தையும் அக்காலத் தென்னிந்திய மொழிகளின் சிறப்புமிக்க இலக்கிய வளர்ச்சியையும் அறிதல்

 


அறிமுகம்

பொ.. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய அரசியல் வரலாற்றில், பாதாமி (வாதாபி) சாளுக்கியருக்கும் (மேலைச் சாளுக்கியர்) காஞ்சி பல்லவருக்கும் இடையிலான மோதல்கள் முதன்மை பெறுகின்றன. அதே வேளையில் இக்காலகட்டம் பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான முன்னேற்றங்களைக் கண்டது. கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளிலும் அதுவரையிலும் அறியாத புதிய சாதனைகள் செய்யப்பட்டன. இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பக்தி இயக்கம் இக்காலப்பகுதியில் தான் தமிழகத்திலிருந்து தோன்றியது.

சான்றுகள்

கோவில் சுவர்களிலும் தூண்களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களுமே இக்காலகட்ட வரலாற்றுக்கு முக்கியச் சான்றுகளாகும். பிராமணர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களைப் பதிவு செய்யவும், மத நிறுவனங்களுக்கு அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பிறரும் கொடுத்த கொடைகளைப் பதிவு செய்யவும், சாளுக்கிய அரசர்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட கல்வெட்டுகளும், பல்லவ அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட கல்வெட்டுகளும் முக்கியச் சான்றுகளாகும்.

இரண்டாம் புலிகேசியினுடைய அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவர் சமஸ்கிருதத்தில் எழுதிய ஐஹோல்  கல்வெட்டு சாளுக்கியக் கல்வெட்டுகளிலேயே மிக முக்கியமானதாகும். கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூலானகவிராஜமார்கம்’, ‘பம்ப - பாரதம்’, ‘விக்கிரமார்ஜுன விஜயம்’, நன்னையாவால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட மகாபாரதம் ஆகிய நூல்கள் முக்கிய வரலாற்றுச் செய்திகளை முன்வைக்கின்றன.

இருந்தபோதிலும் இவையனைத்துக்கும் மேலான இடத்தை வகிப்பது தமிழ் இலக்கியங்களேயாகும். தமிழ்நாட்டில் தோன்றிய பக்தி இயக்கததின் விழுமிய வெளிப்பாடுகள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்களில் மிளிர்ந்தன. வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனப் போற்றப்பட்டது. சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர் (திருஞானசம்பந்தர்), சுந்தரர் ஆகியோர் இயற்றிய தேவாரம், மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் ஆகியவை முக்கிய நூல்களாகும். அவை இன்றுவரை புனிதமான இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. பிற்காலத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணமும் பல வரலாற்றுச் செய்திகளை முன்வைக்கின்றது. முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகாசனம் பல்லவர்கால வரலாற்றிற்கு ஒரு முக்கியச் சான்றாகும்.

கூரம் செப்பு பட்டயத்தில் இருந்து : (வரி: 12) கிழக்கு மலையில் இருந்து சூரியனும் சந்திரனும் எழுவது போல, தனது இன அரசு வம்சாவளியில் இருந்து (தோன்றிய) நரசிம்மவர்மனின் பேரன்; அவர் இளவரசர்களின் மகுடங்களுக்கெல்லாம் மணிமகுடம்; அவர் தலை எதற்கும் (எங்கும்) பணிந்ததில்லை ; எதிரி அரசர்களின் யானைப் படைகளை எதிர்த்து விரட்டிய சிங்கம், நரசிம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட தோற்றமுடையவர்; அவரே இளவரசராக (பூமிக்கு) வந்திருக்கிறார்; சோழர்கள், சேரர்கள், களப்பிரர்கள், பாண்டியர்களை மீண்டும் மீண்டும் தோற்கடித்துள்ளார். அவர் ஆயிரம்கரமுடையான் (ஆயிரம்கரமுடைய காத்தவராயன் போல), நூற்றுக்கணக்கான போர்களில் ஆயிரம் கரங்கள் கொண்டு போரிட்டது போல் செயல்பட்டவர்; பரியாலா, மணிமங்கலம், சுரமாரா போர்களில் வெற்றிச் சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் புலிகேசியின் முதுகில் பொறித்து புறமுதுகிட்டு ஓடச் செய்தார்; குடமுனி (அகத்தியர்) அரக்கன் வாதாபியை அழித்தது போல் வாதாபி நகரை அழித்தார்.

சமுத்திர குப்தருடைய அலகாபாத் தூண் கல்வெட்டு, சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு உள்ளிட்ட பல கல்வெட்டுக்கள் பல்லவ - சாளுக்கிய மோதல்கள் குறித்த விவரங்களை வழங்குகின்றன. பரமேஸ்வரவர்மனின் கூரம் செப்பேடுகள், மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேடுகள் அவ்வரசர்களின் போர் வெற்றிகளைப் பதிவு செய்கின்றன. நாணயங்களும் இக்காலப் பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூல்களான தீபவம்சம், மகாவம்சம், சீனப் பயணிகளான யுவான் சுவாங், இட்சிங் ஆகியோரின் பயணக் குறிப்புகள் ஆகியன பல்லவர்காலச் சமூக, மத பண்பாட்டு நிலைகள் குறித்த விவரங்களை வழங்குகின்றன. ஒன்பது, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் மற்றும் புவியியலாளர்களுமான சுலைமான், அல்மசூதி, இபின் கவ்காபோன்றோரின் பயணக்குறிப்புகள் இக்காலகட்ட இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளைப்பற்றி நமக்குக் கூறுகின்றன. ஐஹோல், வாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த கோவில்களிலுள்ள சிற்பங்கள் இக்காலகட்டப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன

Tags : History வரலாறு.
11th History : Chapter 9 : Cultural Development in South India : Cultural Development in South India History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 9 : தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி : தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 9 : தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி