தென்னிந்தியா - வரலாறு - ஆழ்வார்கள், நாயன்மார்கள் | 11th History : Chapter 9 : Cultural Development in South India
ஆழ்வார்கள், நாயன்மார்கள்
ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் (நான்காயிரம்) நாலாயிர திவ்விய பிரபந்தமாக நாதமுனி தொகுத்தார். நாதமுனி திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றியவர். ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் ஆட்சிக் காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் பெரியாழ்வார். கண்ணனின் குழந்தைப் பருவமே அவருடைய பாடல்களின் கருவாயிருந்தது. ஆண்டாள் பாடல்களின் பாட்டுடைத் தலைவனும் கண்ணனே. ஆண்டாளின் பாடல்கள் அவர் கண்ணனின் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்துகின்றன. நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குருகூரைச் (ஆழ்வார்திருநகரி) சேர்ந்தவர். திருவாய்மொழி உட்பட நான்கு நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து எழுதப்பட்டதென்பது வைணவ நம்பிக்கை. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலாக வைணவப் பாடல்களுக்கு விரிவான புலமையுடன் கூடிய விளக்கவுரைகள் எழுதப்பட்டன.
நாயன்மார்கள்
சைவக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தார். தேவாரம் என்றறியப்படும் முதல் ஏழு நூல்களில் உள்ள பாடல்கள் சம்பந்தர் (1-3) அப்பர் (4-6) சுந்தரர் (7) ஆகியோரால் இயற்றப்பட்டனவாகும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் பாடல்களைக் கொண்டதாகும். சேக்கிழாரின் பெரிய புராணத்தோடு சேர்த்து பன்னிரண்டு நூல்கள் உள்ளதாலும் இவை பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகின்றன. பெரிய புராணம் சோழர் காலத்தில் இயற்றப்பட்டதாகும். இது அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லுவதோடல்லாமல் அவர்தம் வாழ்வில் நடந்த அதிசய சம்பவங்கள் குறித்தும் பெரிய புராணம் கூறுகிறது.
தாக்கம்
பக்தி இயக்கம் மாபெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் உச்சகட்டமாக பல கோவில்கள் நிறுவப்பட்டன. அக்கோவில்கள் தமிழ் நிலப்பரப்பில் பிரதான இடத்தை வகித்தன. பிற்காலச் சோழர் காலத்தில் கோவில்கள் பெரும் சமூகப் பொருளாதார நிறுவனங்களாகின. அரசியல் தளத்தில் பக்தி இயக்கம் வடஇந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிராமணர்களை அழைத்துவந்து அவர்களுக்குக் குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசர்களைத் தூண்டியது. அரச குடும்பத்தினரும், உள்ளாட்சி அமைப்புகளும் தனிப்பட்ட நபர்களும் கால ஒழுங்கில் கோவில்களில் விழாக்கள் கொண்டாடுவதைத் தொடங்கி வைத்தனர். அவ்விழாக்களின் செலவுகளைச் சந்திக்க அவர்களே அறக்கட்டளைகளை நிறுவினர். தமிழ்நாட்டில் அரசு என்னும் அமைப்பு உருவாவதை இது துரிதப்படுத்தியது. மேலும் கோவில் போன்ற நிறுவனங்களின் மூலம் பல்வகைப்பட்ட சமூகக் குழுக்களை மதத்தின் கீழ் ஒருங்கிணைத்தது. நூற்றாண்டுகளின் போக்கில் பக்தி இயக்கம் இந்தியா முழுவதும் பரவி இந்து மதத்தில் பல மாற்றங்களை விளைவித்தது.