தென்னிந்தியா - வரலாறு - மாமல்லபுரம் | 11th History : Chapter 9 : Cultural Development in South India
மாமல்லபுரம்
பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரைக் கோவில் ராஜசிம்மனின் (பொ.ஆ. 700 - 728) ஆட்சிக் காலத்தில் எழுப்பியதாகும். இக்கோவில் மூன்று கருவறைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமாவை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் வெளிப்புறச் சுவர் விஷ்ணுவிற்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது. எல்லைச் சுவற்றின் உட்பக்கம் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கட்டுமானக் கோவில்களில் இது முதன்மையானதாகும். இப்பகுதியிலுள்ள ஏனைய கோவில் கட்டடங்களைப் போலின்றி இக்கடற்கரைக் கோவில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் மாமல்லபுர பல்லவர் கோவில்களின் சிறப்புப் பண்பாகும்.
இங்குள்ள ஒற்றைக்கல் தேர்கள் பஞ்சபாண்டவர் ரதம் என அறியப்படுகின்றன. அர்ச்சுன ரதத்தில் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்ட சிவன், விஷ்ணு, மிதுனா, துவாரபாலக சிலைகள் உள்ளன. இவ்வைந்து ரதங்களில் மிக நேர்த்தியானது தர்மராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது. பீம ரதம் செவ்வக வடிவ அடித்தளத்தையும் அழகான ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு, ஸ்கந்தர், சிவன், அர்த்தநாரிஸ்வரர், கங்காதரர் ஆகியோரின் சிற்பங்களையும் கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள கலை வெளிப்பாட்டில் மிக முக்கியமானது கங்கை நதி ஆகாயத்திலிருந்து இறங்கிவரும் ஆகாய கங்கை காட்சியாகும். (இது பாகீரதன் தவம், அர்ஜூனன் தவம் என்றும் அறியப்படுகிறது.) புராண உருவங்களை பிரபலமான உள்ளூர் கதைகளோடு இணைத்து சிற்பங்களாகக் காட்சிப்படுத்துவது மனித மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக் கூறுகளை சீராகக் கலக்கும் கலைஞனின் திறமையைப் பறைசாற்றுகின்றன.
கிருஷ்ண மண்டபச் சுவர்களில் மிக அழகாகவும் கலை நுணுக்கத்தோடும் செதுக்கப்பட்டுள்ள பசுக்கள், பசுக் கூட்டங்கள் போன்ற கிராமத்து காட்சிகள் ரசிப்பதற்கான மற்றுமொரு கலை அதிசயமாகும்.
முடிவுரை
பல்லவர் காலத்தில் குடைவரைக் கோவில்கள் என்பன இயல்பான ஒன்றாகும். தக்காணப்பகுதியில் ஐஹோல், வாதாபி ஆகிய இடங்களிலும் காஞ்சிபுரம் மாமல்லபுரம் ஆகியவற்றிலும் உள்ள கட்டுமானக் கோவில்களும் தனித்து நிற்கும் கோவில்களும் இக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட கட்டடக்கலை மேன்மைகளுக்குச் சான்றுகளாகும்.
தக்காண பாணியிலான சிற்பங்கள், குப்தக் கலையோடு கொண்டிருந்த ஒப்புமை இதில் காணப்படுகிறது. பல்லவச் சிற்பங்கள் பௌத்த மரபுகளுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் தக்காணம் மற்றும் தமிழ்நாட்டு கட்டடக்கலையும் சிற்பக்கலையும் வட இந்திய மரபிலிருந்து பிறந்தவை அல்ல. அவைசுயமானவை. பண்டைய மரபுகளிலிருந்து தங்களது அடிப்படை வடிவத்தைப் பெற்றவை. மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை, தனித்து அடையாளம் காணக் கூடியவை. தனது மக்களின் அறிவுக் கூர்மையை தெளிவாகப் பிரதிபலிப்பவை.