வரலாறு - தமிழ் பக்தி இயக்கம் | 11th History : Chapter 9 : Cultural Development in South India
பக்தி இயக்கமும் இலக்கியமும்
தமிழ் பக்தி இயக்கம்
தென்னிந்தியாவில் தோன்றிய பிராந்திய அரசியல், சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொண்ட அரசுகள் நிறுவப்படுவதை அவசியமாக்கியது. இத்தருணத்தில் மதம் மட்டுமே மக்களை ஒன்று கூட்டும் புள்ளியாக இருந்திருக்கிறது. தமிழகத்தின் வடபகுதியில் காஞ்சிப் பல்லவரும் தென்பகுதியில் மதுரைப் பாண்டியரும் அதிகாரமும் பொருளாதார வளமும் பெற்றிருந்த வணிக வர்க்கத்தால் தலைமையேற்கப்பட்ட மதம் சார்ந்த பக்தி இயக்கத்திற்கு ஆதரவளித்தனர். உள்ளூர் கோவில் இவ்வியக்கத்தின் மையமாக மாறியது. பக்தி மக்களின் மனங்களை உணர்வுபூர்வமாகத் தொட்டு அவர்களை அணி திரட்டும் கருவியானது.
பக்தி இயக்கம் ஒரு மதம் சார்ந்த இயக்கமாக இடைக்காலத் தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்தது. தமிழ் பக்தி இயக்கத்தின் வலுவான அலை பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நாடு முழுதும் வீசியது. நாயன்மார், ஆழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களே தமிழ் பக்தி இயக்கத்தின் அடிப்படையாகும். இச்சைவ, வைணவ அடியார்கள் தங்கள் பாடல்களோடு இசையைக் கலந்து அதன் பயன்பாட்டை எளிமைப்படுத்தினர். அவர்கள் உள்ளூர், பிராந்தியம் சார்ந்த பல பண்பாட்டு இயல்புகளை மைய நீரோட்டத்திற்குக் கொண்டுவந்தனர். பன்னிரு ஆழ்வார்களும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழ்ச் சமூகத்தின் கைவினைஞர்கள், வேளாண்குடியினர் போன்ற பல பிரிவுகளிலிருந்து வந்தவராவர். இவர்களுள் ஆண்டாள் போன்ற பெண் அடியாரும் அடங்குவர். ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். கவிஞர் காரைக்கால் அம்மையார், பாண்டிய அரசி மங்கையற்கரசியார் ஆகியோர் பெண் நாயன்மார்கள் ஆவர். பக்தி இயக்க அடியார்களால் மறுவடிவம் செய்யப்பட்ட சைவமும் வைணவமும் பௌத்த சமண மதங்களுக்கு வலுவான சவாலாக அமைந்தன. சற்றே கூர்ந்து நோக்கினால் பக்தி இயக்கத்தின் தாக்கத்தை நாம் இன்றும் தமிழகத்தில் காணமுடியும்.
சான்றுகள்
தேவாரம், நாலாயிரத்திவ்விய பிரபந்தம், திருத்தொண்டர் தொகை, மாணிக்கவாசகரின் திருவாசகம், பெரியபுராணம் முதலான பக்தி இயக்கப் பாடல்களே பக்தி இயக்க வரலாற்றிற்கான முக்கியச் சான்றுகளாகும். கோவில்களும் கோவில் கல்வெட்டுகளும் சுற்றுப்பிரகாரங்களிலுள்ள சிறிய சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவையும் சான்றுகளாகப் பயன்படுகின்றன.
பக்தி எனும் கருத்தியல்
பக்தி என்னும் சொல் பல துணைப் பொருளைக் கொண்டது. சேவை, நம்பிக்கை, வழிபாடு, மதப்பற்று போன்ற பொருள்களை அது தருகின்றது. அது மனித உணர்வுகளால், அழகியலால், மாறுபடும் எண்ணங்களால் வடிவமைக்கப்படும் சட்டமாகும். பக்திப்பாடல்கள் மூன்று முக்கிய கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. கடவுளிடம் பேரன்பு கொள்வதே முதலாவதும் முக்கியமானதுமாகும். தெய்வீக அமைதியையும் முக்தியையும் அடையும் வழிகள் தங்களுக்கு மட்டுமே என்கிற வைதீக பிராமணிய மனப்பாங்கை எதிர்த்தல் இரண்டாவதாகும். மூன்றாவது நேரடியாக பௌத்தத்தையும் சமணத்தையும் மதப்பற்று இல்லாதவர்கள் என வன்மையாகக் கண்டிப்பதாகும்.
பக்தியும் கலைகளும்
கிராமிய நடனங்களின் தோற்றம் பெற்று கோவில் நடனங்களில் ஆடற்கலை ஒழுங்குகள் மாறி மதம் சார்ந்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு இறுதி நிலையை எட்டியது. பல்லவர்காலம் முதலாகப் பயிற்சியளிக்கப்பட்ட நடனக் கலைஞர்களைக் கொண்ட குழுக்கள் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களால் பராமரிக்கப்பட்டன. புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் இடம் பெற்ற முக்கியக் காட்சிகள் கோவில் சுவர்களில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டன. கல்லிலும் செம்பிலும் சிலைகளாக வடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இசை, நடனம் போன்ற கவின்கலைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கலைஞர்கள் அரசின் ஆதரவுடன் கோவில்களோடு இணைக்கப்பட்டனர். மதப் பாடல்களும் இசையும் மதத் தொண்டர்களால் பிரபலமாயின. கோவில் விழாக்களின் போது இப்பாடல்களைப் பாடுவது ஒரு முறையாகவே ஆனது. யாழ் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட இசைக் கருவியாக இருந்திருக்க வேண்டும். பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழுக்குப் பதிலாக வீணை பயன்பாட்டிற்கு வந்தது. இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வீணையானது சிறிய சுரை வடிவிலான அடிபாகத்தையும் நீண்ட வடிவிலான விரலால் மீட்டுவதற்கான தந்திகள் கொண்ட பகுதியையும் கொண்டதாக உருவெடுத்தது.