தென்னிந்தியா - வரலாறு - எல்லோரா | 11th History : Chapter 9 : Cultural Development in South India
எல்லோரா
எல்லோராவிலுள்ள குடைவரைக் கோவில்களில் 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன. கோணவியல், கட்டுமானத் தொழில்நுட்பம், உலோகவியல் ஆகிய துறைகளைப் பற்றிய அறிவு இந்தியக் கட்டடக்கலையாளர்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இவை போன்ற நேர்த்தியான பெருங்கட்டடங்களை உருவாக்கியிருக்க முடியாது. இக்குகைத் தொகுப்புகளை உருவாக்கியோர் சாளுக்கியரும் ராஷ்டிரகூடரும் ஆவர். இவ்வாறான புதிய பாணியில் கோவில்களைக் கட்டுவதை முதலில் மேற்கொண்டவர்கள் அவைதீக மதத்தவர்களே. பின்னர்தான் வைதீக மரபைச் சார்ந்தவர்களும் தங்கள் மதம் சார்ந்த சித்தாத்தங்களைப் பரப்புவதற்கு இந்த ஊடகத்தைக் கைக்கொண்டனர். இவ்வாறு ஆசீவகமும் சமணமும் பௌத்தமும் பிராமணீயமும் இக்கோவில்களை எழுப்பின. தொடக்ககாலக் கோவில்கள் எளிமையாகவும் அளவாகவும் கலை தொடர்பான உள்ளடக்கத்தைக் கொண்டிராமலும் இருந்தன.
எல்லோராவில் ஐந்து குகைகளில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் கைலாசநாதர் கோவிலில் உள்ளவை மட்டும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. சமணர் கோவில்களில் உள்ள சில சுவரோவியங்களும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. விலங்குகள், பறவைகள், மரங்கள், பூக்கள் ஆகியவை நேர்த்தியாக எழிலோடு தீட்டப்பட்டுள்ளதோடு ஆசை, அன்பு, பரிவு ஆகிய மனித இயல்புகளின் வெளிப்பாடும் தொழில் வல்லமையுடன் தீட்டப்பட்டுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
எல்லோரா குகைகளை 1983இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக
யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
அவைதீக மதக் கோவில்கள் I / பௌத்தக் குகைகள்
எல்லோரோவில் மொத்தம் 12 பௌத்தக் குகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்ட கட்டடக்கலைப்பாணியைக் கொண்டுள்ளது. அவற்றில் சில அளவில் சிறியன. மற்றவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைக் கொண்டவை. பௌத்தத் துறவிகள் தங்கியிருந்து சீடர்களுக்கு மத நூல்களில் பயிற்சி வழங்கும் மையமாகச் செயல்படும் விதத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மத்தியிலுள்ள பெரிய அறையும் பக்கவாட்டில் அமைந்துள்ள சிறிய அறைகளும் துறவிகள் கல்வி வழங்குவதற்காகவும் போதனைகள் செய்வதற்கும் பயன்பட்டுள்ளன. ஆறாவது குகையில் ஒரு மேசையின் மீதுள்ள கையெழுத்துப் பிரதியை ஒரு மனிதன் வாசிப்பதைப் போன்று செதுக்கப்பட்டுள்ள சிற்பம் இதை உறுதி செய்கின்றது. சுவர்களில் உள்ள சதுர, செவ்வகக் கட்டங்களில் புத்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்வுகள் காட்சிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்குகைகளில் இடம்பெற்றுள்ள சிற்பங்களைக் கொண்டு மூன்று வகைப்பட்ட தனிப் பண்புக்கூறுகளை அடையாளம் காணலாம். மிக முக்கியமானதும் மையமானதும் புத்தரின் மூன்று வகைத் தோற்றங்களே; 1. தியான புத்தர் (தியான முத்ரா) 2. போதனை செய்யும் புத்தர் (வியாக்கியான முத்ரா) 3. வலது கை ஆள்காட்டி விரலால் பூமியைத் தொடும் புத்தர் (பூமி ஸ்பர்ஸ முத்ரா).
பெண் கடவுள்கள்
பௌத்த குகைகளில் தாரா, கதிரவாணிதாரா, சுந்தா, வஜ்ரத்தீஸ்வரி, மகாமயூரி, சுஜாதா, பன்தாரா, பிரிகுட்டி ஆகிய பெண் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குகை எண் 12இல் பெரிய உருவம் கொண்ட பெண்மணி, இடையில் ஒட்டியாணத்துடன், நாகப்பாம்பினால் ஆன தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதே குகையில் காதிரிவாணி - தாரா என்னும் பெண் தெய்வம் கையில் ஒரு நாகப்பாம்பைப் பிடித்தபடி நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
அவைதீக மதக் கோவில்கள் II / சமணக் குகைகள்
எல்லோரோவில் சில சமணக் குகைகளும் காணப்படுகின்றன. இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் காணப்படுகின்றன. ஆனால் அவை முற்றுப்பெறாத நிலையில் உள்ளன. பணியாட்கள் சூழ யக்ச - மாதாங்கா, மகாவீரர், பார்சவநாதர், கோமதீஸ்வரர் ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வேதமதக் குகைகள்
இங்குள்ள குகைகளில் காலத்தால் முந்தியவை ஓரளவு சிறிதாகவும் எளிமையாகவும் உள்ளன. கைலாசநாதர் குகையைத் தவிர மற்றவை அனைத்தும் சதுர வடிவம் கொண்டவை. கைலாசநாதர் குகை (16) மட்டும் மிகப் பெரிய ஒற்றைக் கல்லிலான வடிவமாகும். இது உறுதியான ஒரே பாறையிலிருந்து செதுக்கப்பட்டதாகும். இக்கோவில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இது சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றின் மேலுள்ளது கைலாசநாதர் கோவிலாகும். கீழ் அடுக்கில் யானை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு அக்கோவிலை இந்த யானைகள் தாங்கியிருப்பதைப் போல் உள்ளது. கோவிலின் வெளிப்பகுதி மிக நன்றாகச் செதுக்கப்பட்ட சாளரங்களையும் இந்துப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்களின் வடிவங்களையும காதல் மோகத்தை வெளிப்படுத்துகின்ற ஆண் பெண் மிதுன வடிவங்களையும் கொண்டுள்ளது. கோவில் நுழைவாயிலின் இடப்பக்கம் இடம்பெற்றுள்ள கடவுள் வடிவங்கள் பெரும்பாலும் சைவக் கடவுள்களாகவும் வலப்பக்கம் உள்ளவைவைணவக் கடவுள்களாகவும் உள்ளன. முன்பகுதியிலுள்ள முற்றம் மிகப்பெரிய கொடிக்கம்பங்களையும் நந்தி மண்டபமொன்றையும் கொண்டுள்ளது. சிவன்பார்வதி திருமண விழாக் காட்சி, இராவணன் கைலாய மலையைத் தூக்குவதற்கு முற்படுதல், மகிசாசுரனை துர்காதேவி வதம் செய்தல் ஆகியவை அழகிய சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். தெய்வங்களின் கைகளிலுள்ள ஆயுதங்கள், இசைக்கருவிகள் ஆகியவை கோவில் சுவர்களில் சதுர செவ்வகக் கட்டங்களில் தொடர்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பெண் நீர்த் தெய்வமான கங்கை ஒரு முதலையின் மீது அமர்ந்திருப்பதும் யமுனை
ஆமையொன்றின் மீது அமர்ந்திருக்கும் காட்சியும் கருத்தைக் கவரும்
வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.