வரலாறு - அலெக்சாண்டர் படையெடுப்பு | 11th History : Chapter 4 : Emergence of State and Empire
அலெக்சாண்டர் படையெடுப்பு
தனநந்தரின் ஆட்சிக்காலத்தில் அலெக்சாண்டர் வட- மேற்கு இந்தியா மீது (பொ.ஆ.மு. 327-325) படையெடுத்தார். பலவகைகளில் அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். அது பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகும் இந்தியா மற்றும் மேற்குலகிற்கு இடையிலான தொடர்பின் ஆரம்பத்தைக் குறித்தது. கிரேக்க வரலாற்றாசிரியர்கள் இந்தியா பற்றி எழுத ஆரம்பித்தார்கள். கிரேக்க அரசப் பிரதிநிதிகளும் அரசர்களும் இந்தியாவின் வட-மேற்குப் பகுதியில் ஆட்சி செய்தார்கள். அது இந்திய ஆட்சியிலும் கலைகளிலும் புதிய பாணிகளை உருவாக்கியது. அலெக்சாண்டர் பஞ்சாப் பகுதியில் தனது வெற்றிக்குப் பிறகு, மகதப் பேரரசைத் தாக்கும் நோக்கத்தோடு, மேலும் கிழக்கு நோக்கி நகர விரும்பினார். எனினும், அவருடைய படையினர் கிழக்கின் மாபெரும் பேரரசரைப் (நந்தர்) பற்றியும், அவருடைய பெரிய ராணுவத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்ததால், அத்தகைய வலுவான எதிரியுடன் போரில் ஈடுபட மறுத்துவிட்டார்கள்.
பொ.ஆ.மு. 326இல் பாரசீகர்களைத் தோற்கடித்துவிட்டு, அலெக்சாண்டர் இந்தியத் துணைகண்டத்திற்குள் நுழைந்தபோது தட்சசீலத்தின் அரசரான அம்பி அவரிடம் சரணடைந்து, அவரது மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டார். அலெக்சாண்டரின் வரலாற்றுச் சிறப்புமிக்க போர் ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த போரஸுடன் நடந்தது. இரு ராணுவங்களும் ஹைடாஸ்பெஸ் போரில் சந்தித்தன. இதில் போரஸ் சிறைப்பிடிக்கப்பட்டார். பின்னர், போரஸின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர் தனது மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவரது அரியணையைத் திருப்பித் தந்தார். போரினால் களைப்படைந்த அவரது வீரர்கள் மேலும் அணிவகுத்துச் செல்ல மறுத்தார்கள். இராணுவம் தயங்கும்போது மேற்கொண்டு செல்ல அலெக்சாண்டர் விரும்பவில்லை. நாடு திரும்பும் வழியில் அலெக்சாண்டர் கண்டறிய முடியாத கடும் காய்ச்சல் காரணமாக பாபிலோனில் இறந்தார்.
இந்தியாவில் அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கம்
அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்தியத் துணைகண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் (மாகாணங்கள்) அமைவதற்கு இட்டுச் சென்றது. மேற்குலகிற்காக வணிகப் பெருவழிகள் திறக்கப்பட்டன. நான்கு வணிகப் பெருவழிகள் பயன்பாட்டில் இருந்தன. இதனால் கிரேக்க வணிகர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர். இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடித் தொடர்பு ஏற்பட இது உதவியது. வணிகத்தொடர்பு அதிகரிக்க ஆரம்பித்த உடன் இந்தியாவின் வடமேற்கில் பல கிரேக்கக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன காபுல் அருகில் இருந்த அலெக்சாண்டிரியா, பாகிஸ்தானின் பெஷாவர் அருகே இருந்த பூகிஃபெலா, சிந்துவில் இருந்த அலெக்சாண்டிரியா ஆகியன சில முதன்மையான கிரேக்கக் குடியிருப்புகளாகும்.
இந்தியாவைக் குறித்து கிரேக்கர்கள் எழுதிய பதிவுகள் சற்று மிகையானவை என்றாலும்கூட, இந்தியா பற்றி மிக அரிய தகவல்களைத் தருகின்றன. அலெக்சாண்டரின் மரணத்தால் வடமேற்கில் உருவான வெற்றிடம் சந்திரகுப்த மௌரியர் மகத் அரியணையைக் கைப்பற்ற உதவியது. வடமேற்கில் மேலும் பல சிறு அரசுகளையும் கைப்பற்றி, அந்தப் பகுதி முழுவதையும் தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளவும் அவ்வெற்றிடம் அவருக்கு உதவியது.