வரலாறு - பொருளாதாரமும் சமூகமும் - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் | 11th History : Chapter 4 : Emergence of State and Empire
பொருளாதாரமும் சமூகமும்
வேளாண்மை
மௌரியப் பேரரசுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மை விளங்கியது. அரசு மொத்த வருவாயில் அதன் பங்கு , அதில் வேலை செய்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அது மிகப் பெரிய துறை ஆகும். மண்ணின் வளத்தால் ஆண்டுக்கு இரண்டு போகம் விளைந்ததைக் கிரேக்கர்கள் வியப்போடு பதிவு செய்திருக்கிறார்கள். உணவு தானியங்களுடன், கரும்பு, பருத்தி போன்ற வணிகப்பயிர்களையும் விளைவித்தனர் என்பதைப் பதிவு செய்யும் மெகஸ்தனிஸ், அவற்றை முறையே ‘தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்’ என்றும், ‘கம்பளி வளரும் செடி’ என்றும் குறிப்பிடுகிறார். இவை முக்கியமான வணிகப் பயிர்களாக இருந்தன. வேளாண்மை தொடர்ந்து அபரிமிதமான உபரியை அளித்ததால், வணிக உற்பத்திக்கும் அப்பால் பொருளாதாரத்தில் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய காரணியாக இந்த உபரி விளங்கியது.
கைவினைத்திறன்களும் பொருள்களும்
பல்வேறு கைவினைத்திறன்கள் மூலம் பலவிதமான கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, பொருளாதாரத்துக்கு வளம் சேர்த்தன. இப்பொருள்களை நாம் பயன்பாட்டுப் பொருள்கள், ஆடம்பரப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் என்று வகைப்படுத்தலாம். நாடெங்கும் கிடைத்த பருத்தியை நம்பி, பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபடுவது வேளாண்மைக்கு அடுத்த முக்கியத் தொழிலாக இருந்தது. சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினரும் அரச குடும்பத்தினரும் பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ரகங்களில் பருத்தித்துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. காசி (வாரணாசி), வங்கம், காமரூபம் (அஸ்ஸாம்), மதுரை மற்றும் பல இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதாக அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பகுதியும் தனிச்சிறப்புமிக்க துணிகளைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தது. அரசர்களும், அரசவையினரும், தங்க, வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகள் செய்த ஆடைகளை அணிந்தார்கள். பட்டு குறித்தும் அறிந்திருந்தார்கள். பட்டு பொதுவாக சீனப் பட்டு என்றே அழைக்கப்பட்டது. இது மௌரியப் பேரரசில் விரிவான கடல்வழி வணிகம் நடந்ததை சுட்டிக்காட்டுகிறது.
உலோகங்களும் உலோக வேலைகளும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருந்தன. உள்ளூர் உலோகத் தொழிலாளர்கள் இரும்பு, செம்பு மற்றும் இதர உலோகங்களைப் பயன்படுத்தி கருவிகள், உபகரணங்கள், பாத்திரங்கள், மற்ற வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரித்தார்கள். இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுப்பது பல நூற்றாண்டுகளாகவே அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் பொ.ஆ.மு. 500க்குப்பிறகு , தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. உலையில் மிக உயர் வெப்பநிலையில் இரும்பைப் பிரித்தெடுப்பது சாத்தியமானது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு, இரும்பு உற்பத்தியில் அளவிலும், தரத்திலும்மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொல்லியல் ஆதாரங்கள் காட்டுகின்றன. இரும்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலான தாக்கங்களை ஏற்படுத்தியது. கோடரி போன்ற மேம்பட்ட இரும்புக்கருவிகளால் வேளாண்மைக்காகக் காடுகளை பெரிய அளவில் திருத்துவது சாத்தியமானது. மேம்படுத்தப்பட்ட கலப்பைகள் உழவுக்கு உதவின. தரமான ஆணிகளும் கருவிகளும் தச்சு வேலைகள், மர வேலைகள் உள்ளிட்ட கைவினைத்தொழில்களின் தரத்தை மேம்படுத்தின. மரவேலைகளில் காணப்பட்ட மேம்பாடு கப்பல் கட்டுவதற்கும், வண்டி, தேர் ஆகியவற்றை உருவாக்குவதற்கும், வீடு கட்டுவதற்கும், பிற வேலைகள் செய்வதற்கும் உதவின. கல் வேலைகள் - கற்களை வெட்டுதல், மெருகூட்டுதல் - உயர்ந்த தொழில்நுட்பமுள்ள தொழிலாக உருவாகின. இக்கலைத் திறமை சாஞ்சியில் உள்ள ஸ்தூபியிலும், அசோகருடைய தூண்களுக்கும் பயன்படுத்தப்பட்ட, மிகவும் மெருகூட்டப்பட்ட சுன்னார் கற்களிலும் பார்க்க முடியும்.
தங்க, வெள்ளிப் பொருள்கள், நகைகள். வாசனைத் திரவியங்கள், செதுக்கப்பட்ட தந்தங்கள் என்று ஏராளமான ஆடம்பரப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. மருந்துகள், மட்பாண்டங்கள், சாயங்கள், பசைகள் போன்ற வேறு பல பொருள்களும் மௌரியப் பேரரசில் தயாரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறாக, பொருளாதாரம் உயிர் வாழத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்வது என்ற நிலையிலிருந்து மிகவும் வளர்ந்து, உயர்ந்த வணிகரீதியான கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்யுமளவு முன்னேறியிருந்தது.
கைத்தொழில்கள் பெரும்பாலும் நகரங்களில், பரம்பரையாகச் செய்யப்பட்ட தொழில்களாக இருந்தன. பொதுவாக, பல்வேறு கைத்தொழில்களில் வாரிசுதாரர்கள் தம் தந்தையரைத் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். கைவினைக் கலைஞர்கள் பொதுவாகத் தனிப்பட்ட முறையில்தான் தொழில் செய்தார்கள். இருப்பினும், துணி முதலான இதர பொருள்களை உற்பத்தி செய்ய அரண்மனையைச் சார்ந்த பணிமனைகளும் இருந்தன. ஒவ்வொரு கைவினைத்தொழிலுக்கும் பமுகா (பிரமுகா - தலைவர்) என்ற தலைவரும், ஜெட்டா (ஜேஷ்டா - மூத்தவர்) என்பவரும் இருந்தார்கள். தொழில்கள் ஒரு சேனி (ஸ்ரேனி - வணிகக் குழு) என்ற அமைப்பாகத் திரட்டப்பட்டிருந்தன. இதனால் உற்பத்தியில் தனிநபரை விட நிறுவன அடையாளம் முக்கியத்துவம் பெற்றது. ஸ்ரேனிகளுக்கிடையிலான பிரச்சனைகளை மஹாசேத்தி என்பவர் தீர்த்து வைத்தார். இது நகரங்களில் கைத்தொழில் உற்பத்தி தடங்கலின்றி நடப்பதற்கு உதவியது.
வணிகம்
வணிகம் அல்லது பரிமாற்றம் என்பது பொருளாதாரப் பரவலாக்கம், வளர்ச்சியின் ஆகியவற்றின் இயல்பான உடன் நிகழ்வாகும். வாழ்வதற்குத் தேவையானதற்கு மேல் உற்பத்தியாகும் உபரி , அதற்கு ஒரு பரிமாற்ற மதிப்பு இல்லாமல் போனால் வீணாகிவிடும். ஏனெனில் வாழ்க்கைத் தேவைகள் நிறைவுகண்டு விட்டால், அந்த உபரியால் பயனில்லை . எனவே, பொருளாதாரம் பரவலாகி விரிவடைகிறபோது, அந்தப் பரவலாக்கத்தின் பலன்களைப் பெறுவதற்கு பரிமாற்றம் மிக முக்கியமான அம்சமாகிறது. வணிகம் பல படிநிலை கொண்ட சந்தைகளில் நடந்தது. ஒரு கிராம் சந்தையில் பரிமாற்றம் செய்துகொள்ளுதல், ஒரு மாவட்டத்தின் கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கு இடையிலான பரிமாற்றம், நகரங்களைத் தாண்டி தொலைதூர ஊர்களுக்கு இடையேயான பரிமாற்றம், எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளுடனான பரிமாற்றம் என்று பலவிதமாக நடந்தது. மௌரியப் பேரரசின் காலத்தில் நிலவிய அமைதியான அரசியல் சூழ்நிலைதான் வணிகத்திற்கு உகந்த நிலையாகும். மௌரியப் பேரரசு ஒரு பரந்துபட்ட பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்டியிருந்தது. கங்கைச் சமவெளியின் ஆறுகள் தான் பொருள்களை வட இந்தியா முழுவதற்கும் எடுத்துச்செல்ல போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. மேலும் மேற்கே உள்ள நிலப்பகுதிகளுக்குச் சாலைகள் மூலம் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. விதிஷா, உஜ்ஜையினி ஆகிய நகரங்கள் வழியாக, நாட்டின் வடபகுதியைத் தென்கிழக்கிலும் தென்மேற்கிலும் உள்ள நகரங்களோடும் சந்தைகளோடும் சாலைகள் இணைத்தன. வடமேற்கில் உள்ள சாலை மௌரியப் பேரரசை வடக்கு மற்றும் மத்திய ஆசியாவோடு இணைத்தது. கப்பல்கள் மூலம் கடல் வாணிபமும் நடைபெற்றது. புத்த ஜாதகக் கதைகள் வணிகர்கள் மேற்கொண்ட நீண்ட கடற்பயணங்கள் குறித்துப் பேசுகின்றன. பர்மா, மலாய் தீவுக் கூட்டங்கள், இலங்கை ஆகியவற்றோடு கடல் வாணிபம் நடந்தது. எனினும் கப்பல்கள் சிறியவையாக, கடற்கரையை ஒட்டிச் செல்பவையாகவே இருந்திருக்கின்றன.
வணிகக் குழுக்கள் குறித்து நமக்கு அதிகமான தகவல்கள் தெரியவில்லை. பொதுவாக நீண்ட தூர, கடல் கடந்து அயல்நாடு செல்லும் வியாபாரங்கள் வணிகக் குழுக்களால் நடத்தப்பட்டன. இவர்கள் பாதுகாப்பிற்காகக் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். இந்த வணிகக் கூட்டத்திற்கு மஹாசர்த்தவகா என்ற தலைவர் இருந்தார். காடுகள், பாலைவனங்கள் போன்ற வழிகளில் செல்லும் சாலைகள் ஆபத்தானவை. எனினும் அர்த்த சாஸ்திரம் வணிகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சீரான செயல்பாட்டின் தேவையையும் அழுத்தமாகச் சொல்கிறது. சாலைகளை அமைத்து, அவற்றை நல்ல நிலையில் பராமரிப்பதன் மூலம் வணிகத்திற்கு உதவி செய்ய வேண்டும். பொருள்களை எடுத்துச் செல்லும்போது நுழைவு வரி வசூலிக்க வேண்டும் என்பதால், நுழைவு வரி வசூல் மையங்கள் நிறுவப்பட்டு, அதில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏமாற்று வேலைகளைத் தடுக்க நகர்ப்புறச் சந்தைகளும், கைவினைத்தொழில் கலைஞர்களும் பொதுவாகக் கண்காணிக்கப்பட்டார்கள். அர்த்த சாஸ்திரம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் விற்கப்பட்ட பொருள்களின் - விவசாயப் பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்டவை - நீண்ட பட்டியலைத் தருகிறது. இவற்றில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும். சீனா, இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் வந்த துணி. கம்பளி, பட்டு, வாசனை மரக்கட்டை, விலங்குத் தோல், நவரத்தினக் கற்கள் ஆகியன அடங்கும். கிரேக்கச் சான்றுகள், கிரேக்க மாகாணங்கள் வழியாக மேற்குலகுடன் இருந்த வணிகத் தொடர்புகளை உறுதி செய்கின்றன. அவுரி (சாயம்), தந்தம், ஆமை ஓடு, முத்து, வாசனை திரவியங்கள், அபூர்வ மரக்கட்டைகள் ஆகியன எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
நாணயமும் பணமும்
நாணய முறை பற்றி அறிந்திருந்தாலும், நவீன காலத்திற்கு முந்தைய பொருளாதாரங்களில் பண்டமாற்று முறைதான் பரிமாற்றத்திற்கான வழிமுறையாக இருந்தது. மௌரியப் பேரரசில் வெள்ளி நாணயங்கள் (pana) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. வட இந்தியாவின் பல பகுதிகளில் அச்சுப்பொறிக்கப்பட்ட ஏராளமான நாணயங்கள் கிடைத்துள்ளன. எனினும், இவற்றில் சில இதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம். இவ்வாறாக, நாணயங்கள் பயன்பாட்டில் இருந்தாலும்கூட, மௌரியர்களின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பணத்தைச் சார்ந்திருந்தது என்பதை மதிப்பிடுவது கடினமாக இருக்கிறது.
நகரமயமாக்கல்
ஒரு வேளாண் நிலப்பரப்பில் நகரங்களையும் மாநகரங்களையும் உருவாக்கும் முறை நகரமயமாக்கல் எனப்படும். நிர்வாகத்தின் தலைமையிடமாக, புனிதத் தலங்களாக, வணிக மையங்களாக, முக்கியமான வணிகப் பெருவழிகளின் அருகில் அமைந்திருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் நகரங்கள் உருவாகின. நகரக் குடியிருப்புகள் எந்த வகையில் கிராமங்கள் மாறுபடுகின்றன? முதலில் நகரங்களும் மாநகரங்களும் தமக்கான உணவைத் தாமே உற்பத்தி செய்வதில்லை. தமது அடிப்படையான உணவுத் தேவைகளுக்கு வேளாண் உபரியை இவை நம்பி இருப்பவை. ஏராளமான மனிதர்கள் வசிப்பார்கள். மக்கள்தொகை நெருக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். வேளாண்மை சாராத தொழிலாளர்களும் கைவினைக் கலைஞர்களும் வேலை தேடி நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வருவார்கள். இவ்வாறாக இவர்கள் பொருள்களின் உற்பத்திக்கும், பல்வேறு வகையான சேவைகளுக்குமான உழைப்பாற்றலை வழங்குவார்கள். இந்தப் பொருள்களும், வேளாண் உற்பத்திகளுடன் சேர்த்து, சந்தையில் விற்கப்படும். நகரங்களில் பல்வேறு சேவை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இருப்பார்கள். சங்க இலக்கியப் பாடல்களும் தமிழ்க் காப்பியங்களும் மதுரை, காஞ்சிபுரம், பூம்புகார் போன்ற நகரங்கள் குறித்த விரிவான சித்திரத்தைத் தருகின்றன. பரபரப்பான சந்தைகள் பல்வேறு பொருள்களை விற்கும் வியாபாரிகள், வீடு வீடாகச் சென்று உணவு உட்பட பலவிதமான பொருள்களை விற்போர் என்று மனிதர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததைப் பற்றி இவை கூறுகின்றன. இந்த இலக்கியப் படைப்புகள் காலத்தால் சற்று பிந்தியவை என்றாலும், அன்றிருந்த தொழில்நுட்ப அளவுகளின்படி மிகவும் மாறுபட்டவை அல்ல. எனவே, இவற்றை நகர வாழ்வின் துல்லியமான வர்ணனையாக எடுத்துக் கொள்ளலாம். மௌரியர்களுக்குச் சமகாலத்து நகரங்களின் காட்சி வடிவிலான ஒரே சித்தரிப்பு சாஞ்சி கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அது அரச ஊர்வலத்தைக் காட்டுகிறது. நகரங்களில் சாலைகள் இருப்பதும், பல மாடிக் கட்டிடங்கள் இருப்பதும், கூட்டம் கூட்டமாக மக்கள் கூடியிருப்பதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் நகரமயமாக்கம்
நகரமயமாக்கத்திற்கான ஒரு முன்நிபந்தனை ஒரு வேளாண்மை அடித்தளம் உருவாகியிருக்கவேண்டும் என்பதாகும். அது சிந்து - கங்கைச் சமவெளிப் பகுதியில் உருவாகியிருந்தது, மிக ஆரம்ப காலத்திலிருந்தே ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற நகரங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நகரமயமாக்கல் கங்கை - யமுனைக்கிடைப்பட்ட பகுதி வரை பரவி இருந்தது. கௌசாம்பி , பிட்டா, வைஷாலி , இராஜகிருகம் போன்ற பல புதிய நகர மையங்கள் குறிப்பிடப்படுகின்றன. புத்தரின் போதனைகள் அனைத்தும் நகரப் பகுதிகளில் நடந்ததாகவே கூறப்படுகின்றன. வேளாண்மைப் பரவலாக்கம், நெல் பயிரிடுதல், ஆற்றிடைப் பகுதிகளில் நீரை வடிய வைத்து நிலத்தைச் சாகுபடிக்கு ஏற்றதாக்கியதன் மூலமே நகரங்கள் உருவாகின. வளமான மண்ணும் வற்றாத நதிகளிலிருந்து கிடைத்த நீரும் இரண்டு போகம் நெல் விளைவிப்பதைச் சாத்தியப்படுத்தின. இதனால் நகரங்களுக்குத் தேவையான பெரியளவிலான வேளாண் உபரியும் சாத்தியமானது. நகரத்திலும் கிராமத்திலும் இரும்புத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் பொருளாதார வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மகதம் வளர்ந்தபோது, உஜ்ஜையினி போன்ற பல மாகாண மையங்களும் அப்பேரரசோடு இணைத்துக்கொள்ளப்பட்டன.
வீடுகளும் நகர அமைப்பும்
நகரங்கள் பொதுவாக ஆறுகளை ஒட்டி அமைந்திருந்தன. போக்குவரத்து வசதிக்காக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம். இவை அகழிகளால் சூழப்பட்டிருந்தன. பாதுகாப்பிற்காகக் கோட்டைச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் அரசாங்கப் பணத்தை வைத்திருக்கும் கருவூலங்கள் இருந்ததாலும், வணிக மையங்கள் என்பதால் மக்களும் வணிகர்களும் செல்வமிக்கவர்களாக இருந்ததாலும் எப்போதுமே தாக்குதல் அபாயம் இருந்தது. இந்த நகரங்களின் செல்வம் அதிகரித்த போது களிமண் செங்கல்லால் அல்லது சுட்ட செங்கல்லால் கட்டப்பட்ட வீடுகளின் தரம் உயர்த்தப்பட்டது. நகரங்களில் சாக்கடைகள், உறை கிணறுகள், களிமண் குழிகள் ஆகிய வசதிகள் இருந்தது, சுகாதாரம், குடிமை வசதிகள் இருந்ததும் தெரிகின்றன. வாழ்க்கைத் தரம் அதற்கு முந்தைய காலத்தைவிட மௌரியர் காலத்தில் உயர்ந்திருந்ததை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. நகரங்களில் உறை கிணறுகளும், கழிவுநீர்ப்போக்குக் குழிகளும் இருந்தன. இரும்பால் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருள்களின் பயன்பாட்டின் அளவும் அதிகரித்திருந்தது.
பாடலிபுத்திர நகரம்
பாடலிபுத்திரம் மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரமாகும். இது கங்கையும் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைகரத்தின் வடிவில் இருந்த பெரிய, செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது. இது 14 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச் சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்கு 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்புக் கோபுரங்கள் இருந்தன. சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பிற்காகவும், கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன. அதன் மக்கள் தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மாணித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.
கலையும் பண்பாடும்
இக்காலகட்டத்தின் பெரும்பாலான கலைப்படைப்புகளும் இலக்கியங்களும் அழிந்து போய்விட்டன. மௌரியர் காலத்தில் சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் இலக்கண ஆசிரியர் பாணினியின் (பொ.ஆ.மு. 500) படைப்புகளாலும், நந்தர்களின் சமகாலத்தவரும், பாணினியின் படைப்பிற்கு உரை எழுதியவருமான காத்யாயனராலும் செழுமை பெற்றன. பௌத்த, சமண இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் எழுதப்பட்டன. சமஸ்கிருதத்தில் பல இலக்கியப் படைப்புகள் இக்காலத்தில் எழுதப்பட்டன என்று தெரிகிறது. இவை பிற்காலப் படைப்புகளில் குறிப்பிடப்பட்டாலும், இன்று கிடைக்கவில்லை.
இசைக்கருவி, பாணர்கள், இசை நடனம், நாடகம் என இந்தக் காலகட்டத்தின் நிகழ்த்து கலைகள் பற்றி அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஆடம்பரப் பொருள்களான நகைகள், தந்த வேலைப்பாடுகள், மர வேலைப்பாடுகள், கல் வேலைப்பாடுகள் ஆகியவை மௌரியக் கலையின் விளைவுகள்தான்.
மௌரிய பேரரசில் பல மதங்களும் சாதிகளும் சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்தன. அவர்களுக்குள் நேரடியான மோதல்களோ, கருத்து மாறுபாடுகளோ இருந்ததாக ஒரு குறிப்பும் இல்லை . இக்காலகட்டத்தின் பல பகுதிகளில் இருந்த (பண்டைய தமிழகம் உட்பட) கணிகையர்களுக்கு சமூகப் படிநிலையில் ஒரு சிறப்பான அந்தஸ்து இருந்தது. அவர்களது பங்களிப்பு மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டது.
மௌரியப்பேரரசின் வீழ்ச்சி
• அசோகரின் வாரிசுகள் பலவீனமாகவும், திறமையற்றவர்களாகவும் இருந்தபோது மையப்படுத்தப்பட்ட மௌரிய நிர்வாகம் சமாளிக்க முடியாத நிலைக்கு வந்தது. பலவீனமான மத்திய நிர்வாகம், தொலைதூரப் பகுதிகளைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சுதந்திரமான தன்னாட்சி அரசுகள் உருவாகின.
• அசோகரின் மறைவுக்குப்பின், பேரரசு இரண்டாகப் பிரிந்தது. வடமேற்கிலிருந்து இந்தோ - கிரேக்கர், சாகர் மற்றும் குஷாணர் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுக்க இது வழிவகுத்தது.
• மௌரியப் பேரரசின் கடைசிப் பேரரசர் பிரிகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கனால் (சுமார் கி.மு.185 இல்) கொல்லப்பட்டார். பின்னர் புஷ்யமித்ர சுங்கன், சுங்கவம்சத்தை நிறுவினார். இச் சுங்கவம்சம் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியிலிருந்தது.