Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

வரலாறு - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் | 11th History : Chapter 4 : Emergence of State and Empire

   Posted On :  15.03.2022 10:29 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கியமான அரசியல், சமூக மாற்றங்களை எதிர்கொண்டது.

அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தின் மூலம் கீழ்க்கண்டவை குறித்து அறிவைப் பெறுதல்.

இந்தியாவின் முக்கியமான முதல் இரண்டு பேரரசுகளின் தோற்றம்

பாரசீகர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் படையெடுப்புகளின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

பொ..மு. 6ஆம் நூற்றாண்டு முதல் 3ஆம் நூற்றாண்டு வரையிலான சமூக-பொருளாதார மாற்றங்கள்

மௌரியர் காலத்துக்கு முற்பட்ட நிர்வாகமும் சமூகப் பொருளாதார நிலைகளும்

அசோகரின் தர்ம அரசு குறித்து அவரது கல்வெட்டுக் கட்டளைகள் வழியாக எடுத்துரைத்தல்.

 

 

அறிமுகம்

பொ..மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கியமான அரசியல், சமூக மாற்றங்களை எதிர்கொண்டது. பெளத்தம், சமணம் இந்தியாவின் முக்கியமான புதிய மதங்களாக உருவாகின. ஏராளமான மக்கள் இந்த மதங்களைப் பின்பற்றினார்கள். இவ்விரு அவைதீக மதங்களும் வைதீக வேத மதத்தின் கோட்பாடுகளுக்கு முரணானவை. புதியதாக உருவாகி வந்த சமூகத்தில் மக்கள் பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருந்ததைத் தொடர்ந்து, சமணம், பௌத்தம் ஆகிய புதிய மதங்கள் போதித்த புதிய நம்பிக்கைகள், கருத்துகளின் விளைவாக அதுவரை வேத சடங்குகளில் மட்டுமே மையம் கொண்டிருந்த சமூக அமைப்பு குறிப்பிடத்தகுந்த மாறுதல்களுக்கு உள்ளானது. அரசு முறை தொடங்கிய இக்காலகட்டத்தில், சிறு நாடுகளும் இனக்குழுக்களின் கூட்டமைப்புகளும் போர் மூலம் வெல்லப்பட்டு, ஒரு பேரரசு உருவாகும் விதத்தில் இணைக்கப்பட்டன. இதன் விளைவாகப் பெரிய அரசுகள் உருவாகின; அவை சக்ரவர்த்தி அல்லது ஏராட் என்ற உயர்ந்த அரச பதவிகளால் ஆட்சி செய்யப்பட்டன. இவ்வாறு இன்றைய பீகார், கிழக்கு உத்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கங்கைச் சமவெளியில் மையப்படுத்தப்பட்ட ஒரு பேரரசு உருவானது. இது இப்பகுதியின் சமூக, பொருளாதார, நிர்வாக அமைப்பைப் பெரிதும் மாற்றியது.

சமவெளிகளும், கங்கை மற்றும் அதன் துணைந்திகள் போன்ற வற்றாத நதிகளிலிருந்து கிடைத்த நீர்வளமும் இந்தக் குறிப்பிட்ட பகுதியில் பெரிய நாடுகள் உருவாவதற்குச் சாதகமாக இருந்த சூழலாகும். இந்த ஆறுகள் வணிகம், பயணங்கள் ஆகியவற்றுக்கு முக்கியமான நீர்வழிப் பாதைகளாகவும் பயன்பட்டன. புத்தரின் சமகாலத்தவரான பிம்பிசாரர் மகதத்தில் ஒரு பேரரசை நிர்மாணிக்கும் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு அவரது புதல்வர் அஜாதசத்ருவாலும், பின்னர் நந்தர்களாலும் இது மேலும் வலுவாக்கப்பட்டது. சந்திரகுப்த மௌரியர் உருவாக்கிய மெளரிய வம்சத்தின் தோற்றத்தோடு, இந்தப் பேரரசு தனது புகழின் உச்சத்தை அடைந்தது. முதல் மூன்று மௌரிய பேரரசர்களான சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோர் நன்கு அறியப்பட்ட மௌரிய அரசர்கள் ஆவர். அசோகருக்குப் பிறகு மௌரியப் பேரரசு மெல்ல மெல்ல வீழ்ச்சி அடைந்தது.

சான்றுகள்

மௌரியர் காலத்தைச் சேர்ந்த சந்திரகுப்தர், அவருக்கு அடுத்துவந்த இரு அரசர்கள் ஆகியோரின் பெயர்கள் எல்லாம் இப்போது அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், அந்த அரசர்களின் வாழ்வையும் வாழ்க்கைப்போக்குகளையும் மறுஉருவாக்கம் செய்வதற்குத் தொடக்ககால வரலாற்றாய்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். மௌரிய அரசர்கள் பற்றி பல்வேறு பெளத்த, சமண இலக்கியங்களிலும், இந்துமத இலக்கியங்களில் ஒன்றான பிராமணங்களிலும் சில குறிப்புகள் இருந்தாலும், அவர்களைப் பற்றி நேரடியான குறிப்புகளோ அவர்களது சமகாலத்தைப் பற்றி விரிவான பதிவுகளோ, இலக்கியங்களோ இல்லை. இலங்கையில் கிடைத்த, பாலி மொழி நூலான மகாவம்சம் என்ற வரலாற்றேடு ஒரு முக்கியமான கூடுதல் ஆதாரம் ஆகும். இந்த ஆதாரங்கள் மூலம் துண்டுதுண்டாகக் கிடைக்கும் தகவல்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அலெக்சாண்டர் படையெடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா பற்றி எழுதிய கிரேக்க வரலாற்று அறிஞர்களின் பதிவுகளால் உறுதி செய்யப்பட்டன.

வரலாற்றின் தொடக்க காலம் பற்றி வரலாற்றாளர்கள் அறிந்து கொள்ள ஏராளமான தகவல்களைத் தரும் முக்கியமான சாதனங்களாகத் தொல்லியலும் கல்வெட்டியலும் உள்ளன. குறிப்பாக, தொல்லியல் மிகவும் முக்கியமானது. ஏனெனில், தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரப் புறத்தோற்றம் பற்றி, அதாவது நகரத்தின் அமைப்பு , கட்டிடங்களின் கட்டுமானம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அக்கால மக்களுக்குத் தெரிந்திருந்த உலோகங்கள், அவர்கள் பயன்படுத்திய கருவிகள். அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்று மக்களின் அன்றாட வாழ்வியல் பண்பாடு குறித்த தகவல்களையும் அறிய முடிகிறது.

கங்கைப் பகுதியின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் காலப்போக்கில் அப்பகுதியில் உருவான நகர மையங்களின் தன்மை குறித்த நம்பகமான சான்றுகளைத் தந்துள்ளன. இக்காலகட்டத்தினைச் சேர்ந்த கல்வெட்டுச் சான்றுகள் அதிகம் இல்லை. மிகப் பரவலாக அறியப்பட்டவை அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகளே. இவை நாட்டின் பல பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1837இல் ஜேம்ஸ் பிரின்செப் சாஞ்சியில் உள்ள கல்வெட்டு ஒன்றில் இருந்த பிராமி எழுத்துகளின் பொருளைக் கண்டுபிடித்த பிறகுதான் மௌரிய காலகட்டத்தை மறுஉருவாக்கம் செய்வது பெரிய அளவிற்குச் சாத்தியப்பட்டது. அதேசமயத்தில், நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மௌரிய அரசின் கல்வெட்டுக் கட்டளைகள் குறித்த தகவல்களும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் சிந்து வெளி நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான தொல்லியல் பொருள் இவைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மௌரிய அரசின் அனைத்து கல்வெட்டுக் கட்டளைகள் ஒரு பெரிய அரசரைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன. அவை தேவனாம்பிய பியதஸ்ஸி (தேவர்களுக்குப் பிரியமான, மனநிறைவாக) இவ்வாறு கூறினார் என்று தொடங்குகின்றன. மௌரியப் பேரரசின் இந்த கல்வெட்டுக் கட்டளைகள் நாடு முழுவதும் பரவலாகக் கிடைத்ததன் மூலம் அவர் ஒரு பரந்த பேரரசை ஆண்டிருக்கிறார் என்பதை உணர முடிந்தது. ஆனால் அந்த அரசர் யார்? புராணங்களும் பௌத்த இலக்கியங்களும் அசோகர் என்ற ஒரு சக்ரவர்த்தி பற்றிக் குறிப்பிட்டுள்ளன. பல கல்வெட்டுக் கட்டளைகளின் பொருளும் ஒவ்வொன்றாகக் கண்டறியப்பட்டபோது, பொ.. 1915 இல் தேவனாம்பிய பியதசி எனும் அந்த அரசர் அசோகர் தான் என உறுதி செய்யப்பட்டது. இது மௌரிய வரலாற்றை மறுஉருவாக்கம் செய்வதை சாத்தியமாக்கியது.

இனி இரண்டு பிற்கால வரலாற்றுச் சான்றுகளைப் பார்ப்போம். முதலாவது குஜராத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜுனாகத்தில் உள்ள பாறைக் கல்வெட்டு. இது பொ.. 130-150 காலத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியை ஆண்ட ருத்ரதாமன் ஆட்சிக்காலத்தில் இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டது. இதுபேரரசர் சந்திரகுப்தரின் மாகாண அரசப்பிரதிநிதி (ராஷ்ட்ரியா) புஷ்யகுப்தர் பற்றிக் குறிப்பிடுகிறது. இது பின்வரும் இரண்டு காரணங்களுக்காக முக்கியமானது. 1) மேற்கே வெகு தூரத்திற்கு குஜராத் வரை மௌரியப் பேரரசு பரவி இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. 2) சந்திரகுப்தர் மரணமடைந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பிறகும்கூட நாட்டின் பல பாகங்களில் அவர் அறியப்பட்டவராகவும், நினைவில் இருப்பவராகவும் இருந்திருக்கிறார். இரண்டாவது சான்று ஒரு இலக்கியப் படைப்பு ஆகும். அது விசாகதத்தரின் முத்ராராட்ச்சம் என்ற நாடகம் பொ.. நான்காம் நூற்றாண்டிற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு, குப்தர்கள் காலத்தில் எழுதப்பட்டது. இந்த நாடகம் மகத் அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் சாணக்கியர் அல்லதுகௌடில்யர்தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது. இந்த நாடகம் சந்திரகுப்தர் குறித்து மற்ற சமகால ஆதாரங்களிலிருந்து திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இதையும் ஓர் உறுதிப்படுத்தும் சான்றாகக் எடுத்துக் கொள்ளலாம். சந்திரகுப்தரின் புகழ் அவர் மறைந்து நீண்ட நாட்கள் ஆன பின்பும், பொதுக்கதையாடலிலும் நினைவிலும் மங்காமல் நிலைத்திருந்தது என்பதை இந்த ஆதாரங்கள் மூலமாகத் தெரிந்துகொள்கிறோம். வாய்மொழிக் கதையாடல் பாரம்பரியங்களின் முக்கியத்துவத்தினை உறுதிப்படுத்துகின்றன. அவை தற்போது ஒரு நம்பகமான வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கப்படுகின்றன.

Tags : History வரலாறு.
11th History : Chapter 4 : Emergence of State and Empire : Emergence of State and Empire History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்