வரலாறு - மௌரிய அரசும் ஆட்சி அமைப்பும் | 11th History : Chapter 4 : Emergence of State and Empire
மௌரிய அரசும் ஆட்சி அமைப்பும்
அரசின் வருவாய்க்காக வரி வசூலித்தல், நீதி பரிபாலனம், உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவைதான் மௌரிய அரசு கவனத்தில் கொண்ட முக்கிய விஷயங்கள் ஆகும். இதற்கு மிகப் பெரிய , நுட்பமான நிர்வாக இயந்திரமும் நிறுவனங்களும் தேவைப்பட்டன. மெகஸ்தனிஸிடமிருந்து தகவல்களைப் பெற்ற கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள். மையப்படுத்தப்பட்ட அரசு என்றால். பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என்று பொருள் கொள்ளவேண்டும். ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்துப் பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைதான் இருந்திருக்க வேண்டும்.
இந்த அதிகாரமுறை என்பது கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என்ற படிநிலைகளைக் கொண்டதாக இருந்தது. அதிகாரவர்க்கத்திற்கு வரிவசூலுக்கான ஒரு திறம்பட்ட முறை தேவைப்பட்டது, ஏனெனில், அந்த வசூலிலிருந்துதான் அதற்கு ஊதியம் தரப்பட்டது. எனவே, அதிகார வர்க்கம் திறமிக்க வரிவசூல் முறையை ஏற்படுத்தியது. அதேபோல, வரி மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே மௌரியப் பேரரசின் மிகப் பெரிய ராணுவம் இயங்கியது. பெரிய அதிகாரிகளுக்கு ஊதியமும் அதிகமாக இருந்தது. அர்த்த சாஸ்திரம் கூறுவதன்படி, தலைமை அமைச்சர், புரோகிதர், ராணுவ தளபதி ஆகியோருக்கு ஊதியம் 48,000 பணம். போர்வீரர்களுக்கு ஊதியம் 500 பணம். இந்தத் தொகையைக் காலாட்படை, குதிரைப்படையின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிட்டால், ராணுவத்தையும் நிர்வாகப் பிரிவு ஊழியர்களையும் நிர்வகிக்கத் தேவையான பெருமளவு நிதியாதாரம் குறித்து ஒருவாறு புரிந்து கொள்ள முடியும்.
அர்த்தசாஸ்திரம்
நிர்வாகம் பற்றிய மிக விரிவான பதிவுகளை அர்த்த சாஸ்திரத்தில் காணலாம். ஆனால், இந்தப் படைப்பேமௌரியப் பேரரசுக்குச் சில நூற்றாண்டுகள் பிந்தையது என்ற ஆய்வாளர் கருத்தையும் மனங்கொள்ள வேண்டும். எனினும், அர்த்த சாஸ்திரம் நல்ல நிர்வாகத்திற்கான ஒரு வழிகாட்டி நூல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளோடு, அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள், மெகஸ்தனிஸின் குறிப்புகள் ஆகியவற்றில் உள்ள செய்திகளையும் இணைத்துக் கொண்டால் மௌரியப் பேரரசு எப்படி இருந்தது என்பதை நாம் எதிர்பார்த்ததிற்குச் சற்று அதிகமாகவே நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
மாகாண நிர்வாகம்
நாட்டின் நிர்வாகத்தின் தலைவர் அரசர். அவருக்கு அமைச்சரவை, ஒரு மதகுரு (அவர் மிக முக்கியமானவர் என கருதப்பட்டார்), மஹாமாத்திரியர்கள் என்றழைக்கப்பட்ட செயலாளர்கள் ஆகியோர் உதவினர். தலைநகர் பாடலிபுத்திரம் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. எஞ்சிய மௌரிய அரசுப் பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூலுக்கு அருகிலுள்ள சுவர்ணகிரி உஜ்ஜையினி (அவந்தி, மாளவம்), வட மேற்கில் தட்சசீலம். தென்கிழக்கில் ஒடிசாவின் தோசாலி என்று நான்கு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, அரசரின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டன. இவர்கள் பெரும்பாலும் மௌரிய அரசின் இளவரசர்களாவர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரே மாதிரியான வருவாய் மற்றும் நீதி நிர்வாகம்தான் நிலவியது. வரி வசூல் சமஹர்த்தா என்பவரின் பொறுப்பாக இருந்தது. இவர்தான் செலவுகளுக்கும் பொறுப்பு என்பதால், ஒரு விதத்தில் இவர் நிதியமைச்சர் போல் இருந்தார். இவர் அனைத்து மாகாணங்கள், நகரங்கள், சுரங்கங்கள், காடுகள், வணிகப் பெருவழிகள், வருவாய் வரக்கூடிய மற்ற வழிகள் என அனைத்தையும் மேற்பார்வை செய்ய வேண்டியிருந்தது. வரிவசூல் குறித்த ஆவணங்களை நிர்வகிப்பது கருவூல நிர்வாகியின் பொறுப்பு. ஒவ்வொரு துறைக்குமான கணக்கு வழக்குகளை அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்து அரசரிடம் தாக்கல் செய்தனர். ஒவ்வொரு துறையிலும் மத்திய மற்றும் உள்ளூர் நிர்வாகங்களோடு இணைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பாளர்களும் துணை அதிகாரிகளும் இருந்தனர்.
மாவட்டம் மற்றும் கிராம நிர்வாகம்
அடுத்த கட்ட நிர்வாகத்தின் கீழ் மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் வந்தன. மாவட்ட நிர்வாகம் ஸ்தானிகர் என்பவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. கோபா என்றழைக்கப்பட்ட அதிகாரிகள் ஐந்து முதல் பத்து கிராமங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். நகர நிர்வாகம் நகரிகா என்பவர் வசம் இருந்தது. கிராமங்கள் ஓரளவிற்குத் தன்னாட்சி பெற்றிருந்தன. மத்திய அரசாங்கத்தாலும், கிராம மூத்தவர்கள் குழுவாலும் நியமிக்கப்பட்ட கிராமணி என்பவரின் அதிகாரத்தின் கீழ் ஒவ்வொரு கிராமமும் இயங்கியது. முந்தைய பல நூற்றாண்டுகள் போலவே அப்போதும் வேளாண்மைதான் தேசியப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பைத் தரும் துறையாக இருந்தது. பொதுவாக அரசருக்கு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு உரியது. ஆனால் நடைமுறை அதைவிட மிகவும் அதிகமாக இருந்தது, பொதுவாக உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு வரியாகப் பெறப்பட்டிருக்கலாம்.
வருவாய் ஆதாரம்
பொருளாதாரத்தில் மிக முக்கியமான வேளாண்மைத் துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில், வேளாண்மை உற்பத்திகளைச் சேமிக்க கிடங்குகள், கட்டுப்படுத்தப்பட்ட சந்தைகள் ஆகிய வசதிகளுடன் உற்பத்தியிலும் சந்தைப்படுத்தலிலும் விரிவான அரசுக்கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. நிலவரி, அரசு பாசன வசதி செய்து தந்திருந்தால் பாசனத்திற்கான வரி, நகர்ப்புற வீடுகளுக்கு வீட்டுவரி, வணிகத்திற்காக எடுத்துச் செல்லப்படும் பொருள்கள், நாணயம் அச்சடித்தல், அரசு நடத்தும் வணிகங்கள் மீதான லாபம் ஆகியவற்றின் மீது சுங்கம் மற்றும் நுழைவு வரி உள்ளிட்ட பிற வரி வருவாய்களும் இருந்தன. நிலம் அரசருக்குச் சொந்தம். காடுகள், சுரங்கங்கள், ஏகபோகமாக இருந்த உப்பு உற்பத்தி ஆகியவை வருவாய்க்கான முக்கியமான ஆதாரங்கள்.
நீதி நிர்வாகம்
நீதிமன்றங்கள் மூலம் நீதி வழங்கப்பட்டது. எல்லா முக்கிய நகரங்களிலும் நீதிமன்றங்கள் இருந்தன. இருவகை நீதிமன்றங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. தர்மஸ்தியா நீதிமன்றங்கள் பெரும்பாலும் திருமணம், வாரிசுரிமை உள்ளிட்ட குடிமை உரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்தன. இந்த நீதிமன்றங்களில் மதச் சட்டங்களை நன்கு அறிந்த மூன்று நீதிபதிகளும் மூன்று அமாத்தியாக்களும் (செயலாளர்கள்) இருந்தார்கள். மற்றொரு நீதிமன்றம் கந்தகோசந்தனா (முள்ளை எடுத்தல்) என்றழைக்கப்பட்டது. இதிலும் மூன்று நீதிபதிகளும் மூன்று செயலாளர்களும் இருந்தார்கள். இந்த நீதிமன்றங்களின் முக்கியப் பணி சமூக விரோதிகளையும், பல்வேறு விதமான குற்றங்களையும் அகற்றுதலாகும். இது பெரும்பாலும் இன்றைய நவீன காவல்துறை போல இயங்கியது. சமூக விரோதச் செயல்கள் குறித்த தகவல்களை அறிவதற்காக, ஒற்றர்களைக் கொண்ட முறையான அமைப்புமுறை செயல்பட்டது. குற்றங்களுக்கான தண்டனை மிகக் கடுமையாக இருந்தது. நீதித்துறை வளர வளர, அதன் ஒட்டுமொத்த நோக்கம் அன்றாட வாழ்வின் பெரும்பாலான அம்சங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதாக இருந்தது.
அசோகரின் தம்ம அரசு
அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர், நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது. அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜுக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களுக்கு தம்மத்தைப் போதிக்குமாறு அறிவுறுத்தினார்.
(முக்கிய பாறை கல்வெட்டுக் கட்டளைகள் 3). எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவேனோ, அதையேதான் அனைத்து மக்களுக்கும் செய்ய வேண்டும், அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும், அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும், நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும், சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசோகரின் கட்டளைகளாக இருந்தன. தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப்போவதாகவும் அவர் அறிவித்தார். (கலிங்கப் பாறைக் கல்வெட்டுக் கட்டளைகள்- எண் 1).
ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார். தான் எங்கே இருந்தாலும் தமக்கு முறையான தகவலும் ஆலோசனையும் தரப்பட வேண்டும் என்றார் (முக்கிய பாறை கல்வெட்டுக் கட்டளைகள் - எண் 6) அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்படவேண்டும் என்றும் கூறினார் (முக்கிய பாறை கல்வெட்டுக் கட்டளைகள் எண்-7 மற்றும் 12). மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார் (முக்கிய பாறை கல்வெட்டுக் கட்டளைகள் - எண் 2). தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும், எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துகளில் ஒன்று. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும், பரிவும் கொண்ட, ஒரு நல்ல முன்மாதிரியாகக் கொள்ளத்தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம். அதிகாரிகளும் குடிமக்களும் எல்லோரும் தம்மத்தைக் கடைப்பிடித்து ஒழுங்காக வாழ வேண்டும் என்று அவரது கல்வெட்டுக் கட்டளைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.