வரலாறு - நந்தர்கள்: இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் | 11th History : Chapter 4 : Emergence of State and Empire
நந்தர்கள்: இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள்
அஜாதசத்ரு மறைந்து சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பொ.ஆ.மு. 362இல் நந்தர்கள் மகதப் பேரரசின் அரசர்களானார்கள். முதல் நந்த அரசர் மஹாபத்மா ஆவார். இவர் சிசுநாக அரசரைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியதாக நம்பப்படுகிறது. நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது. நந்தர்களின் செல்வமும் அதிகாரமும் பரவலாக அறியப்பட்டன, எதிரிகளுக்கு அச்சமூட்டுவதாகவும் இருந்தன. மஹாபத்ம நந்தரைத் தொடர்ந்து அவருடைய எட்டு புதல்வர்கள் ஆட்சி செய்தார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து நவநந்தர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பேரரசை விரிவாக்கும் பணியில் நந்தர்கள் பல சத்திரிய இனக்குழுக்களை அழித்தார்கள். ஓரளவு சுயேச்சையான அதிகாரம் கொண்டிருந்த சத்திரியர்களால் ஆளப்பட்ட அரசுகளையும் அடிமைப்படுத்தினார்கள். இவ்வாறாக, ஒரு சர்வாதிகாரமான, மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கினார்கள். ஒடிசாவின் புவனேஷ்வருக்கு அருகிலுள்ள உதயகிரியில் காணப்படும் ஹதிகும்பா (யானைக்குகை) கல்வெட்டு முந்நூறு வருடங்களுக்கு முன் அரசர் நந்தர் வெட்டிய நீர்வடிகாலைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இது நந்த அரசு எந்த அளவிற்குப் பரவியிருந்தது என்பதைக் காட்டுகிறது. நந்தர்கள் திறமையான நிர்வாகிகளாக, மகதப் பேரரசை விரிவுபடுத்தியவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.