வரலாறு - பாரசீக, மாசிடோனிய படையெடுப்புகள் | 11th History : Chapter 4 : Emergence of State and Empire
பாரசீக, மாசிடோனிய படையெடுப்புகள்
ஆறாம் நூற்றாண்டிலிருந்து வடமேற்கு இந்தியா பாரசீகத்துடனும் கிரேக்கத்துடனும் பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சிந்து பகுதியின் காந்தாரமும், அதன் சுற்றுவட்டாரங்களும் பாரசீகத்தின் ஆக்கிமீனைட் பேரரசின் ஒரு சிறு பகுதியாக இருந்தது என்பதை அறிய வியப்பாக இருக்கும். பொ.ஆ.மு. 530 வாக்கில், பாரசீகப் பேரரசர் சைரஸ் இந்தியாவிற்குப் படையெடுத்துவந்து கபிஷா என்ற நகரை அழித்தார். கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடொட்டஸின் கூற்றின்படி, காந்தாரம் ஆக்கிமீனைட் பேரரசின் இருபதாவது மற்றும் செல்வமிக்க சத்ரபியாக இருந்தது. மஹா அலெக்சாண்டரின் படையெடுப்பு வரையிலும் அது பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. முதலாம் டாரியஸின் கல்வெட்டுகள் சிந்து பகுதியில் பாரசீகர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறது. “கதாரா, ஹராவதி, மகா” பகுதிகளின் மக்கள் ஆக்கிமீனைட் பேரரசின் குடிமக்கள்” என்றும் கூறுகின்றது.
உங்களுக்கு தெரியுமா?
தி ஈரானில் உள்ள பெர்சிபோலிசில் காணப்படும் முதலாம் டாரியஸின் கல்வெட்டில்தான் "இந்து" என்ற வார்த்தை முதன்முறையாகத் காணப்படுகிறது. பொதுவாக நதியையும், குறிப்பாக சிந்து நதியையும் குறிக்கும் "சிந்து” என்ற சொல் பாரசீகத்தில் "இந்து" வானது. கிரேக்கர்கள் Sindu என்பதில் உள்ள S ஐ நீக்கிவிட்டு, Indu என்றார்கள். அது பின்னர் 'ஹிந்து' என்றானது. பின்னர் அதிலிருந்து இந்தியா' வந்தது.
தட்சசீலம்
தட்சசீலம் இன்றைய பாகிஸ்தானில் உள்ளது. பொ.ஆ.மு. ஐந்தாம், நான்காம் நூற்றாண்டுகளுக்கிடையே அது பாரசீகத்தின் ஆக்கிமீனைட் பேரரசின் பகுதியாக இருந்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள வணிகப் பெருவழியில், அதன் அமைவிடம் இருந்ததால் சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது. தட்சசீலம் முக்கியமான கல்வி, கலாச்சாரமையமாக உருவானது. கல்விக்காக மாணவர்கள் வெகுதூரங்களிலிருந்து அங்கு வந்தார்கள். 1940களில் சர் ஜான் மார்ஷல் நடத்திய அகழ்வாய்வுகளின் போது இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. “எந்த ஒரு நாகரிகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளைப் படைத்ததாக” தட்சசீலம் கருதப்படுகிறது. பாணினி தனது புகழ்பெற்ற படைப்பான அஷ்டத்யாயி என்ற இலக்கிய நூலை இங்குதான் எழுதியதாகத் தெரிகிறது.
பாரசீகத் தொடர்பின் தாக்கம்
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் வடமேற்குப் பகுதி பாரசீகப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததால், இந்தப் பகுதி பாரசீக மற்றும் இந்தியப் பண்பாடுகளின் சங்கமமாக மாறியது. பாரசீகத் தொடர்பு பண்டைய இந்தியாவின் கலை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பண்பாட்டுத் தாக்கம் காந்தாரப் பகுதியில் அதிகமாக இருந்தது. மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்துமுறையின் வளர்ச்சியாகும். இந்த கரோஷ்டி எழுத்தைக் காந்தாரப் பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார். இது பாரசீகத்தின் அகமேனியப் பேரரசில் பரவலாகப் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும்.
அராமிக் போலவே கரோஷ்டியும் வலது புறமிருந்து இடது புறமாக எழுதப்படும் எழுத்துமுறையாகும். பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும். நாணயத்திற்கான இந்தியச் சொல்லான "கார்சா" பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும். இந்த நாணயங்கள் பாரசீக நாணயங்களைப் பார்த்து உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்காலகட்டத்தில் இந்த நாணயங்களின் புழக்கம், இந்தியா - பாரசீகத்திற்கு இடையில் வணிகத் தொடர்பு இருந்ததை உணர்த்துகிறது. அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் ஆக்கிமீனைட் அரசர் டாரியஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப்பட்டிருக்கலாம். அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் ஈரானியச் சொல்லான டிபிக்குப்பதிலாக 'லிபி' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.
சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு: ரிக் வேதத்திற்கும் ஜென்ட் அவஸ்தாவிற்கும் பல மொழியியல் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்கள் என்ற சொல்லைப் பண்டைக்கால பாரசீகர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மொழிபண்பாட்டு ஆய்வாளர் தாமஸ் பரோவின் கூற்றின்படி, உச்சரிப்பு மட்டும் காலப்போக்கில் மாறியிருக்கலாம். பொ.ஆ.மு. 1380ஐச் சேர்ந்த போகஸ் கோய் (வடகிழக்கு சிரியா) கல்வெட்டு ஒன்று ஒரு ஹிட்டைட் அரசனுக்கும், மிட்டன்னி அரசனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பற்றிக் கூறுகிறது. அது சில ரிக்வேத கடவுளர்களான இந்திரா, உருவ்னா (வருணா), மித்ரா, நஸதயா (அஸ்வினி) ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது.
மௌரியக்கலைகளும் கட்டிடக்கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களைக் கொண்டுள்ளன. மௌரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமீனைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன. தூண்களின் முகட்டில் உள்ள மணி போன்ற உச்சி, குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உச்சி ஆகியவை ஆக்கிமீனைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஒத்தே உள்ளன. அதே போல பாடலிபுத்திரத்தின் அரண்மனையின் எஞ்சிய தூண்கள் உள்ள பகுதி ஆக்கிமீனைட் தலைநகரத்தின் தூண்கள் கொண்ட மண்டபத்தை மிகவும் ஒத்திருக்கிறது. எனினும், இக்கலைஞர்கள், பாரசீக கலையால் உத்வேகம் பெற்றிருந்த போதிலும், தமது படைப்பில் ஒரு தீர்மானமான இந்தியத் தன்மையைக் கொடுத்திருந்தார்கள்.