இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு - அகில இந்திய தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement
அகில இந்திய தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம்
A.O.ஹுயூம் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் நமது
விடுதலைப் போரின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்கினை ஆற்றினர். இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் இதேபோன்றதொரு முக்கியப் பணியை ஆற்றினார்.
அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசண்ட், பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி
இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில்
தீவிரப் பங்காற்றினார். பிரம்மஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக அன்னிபெசண்ட் அம்மையார் இந்தியாவுக்கு
1893இல் வந்தார். பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக் கல்லூரியை அவர் நிறுவினார்.
(பின்னர் இந்தக் கல்லூரி 1916ஆம் ஆண்டு பண்டித மதன் மோகன் மாளவியா மூலமாக பனாரஸ் இந்துப்
பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது). 1907இல் எச். எஸ் ஆல்காட் அவர்களின் மறைவுக்குப்
பிறகு பிரம்மஞான சபையின் உலக அளவிலான தலைவராக பெசண்ட் அம்மையார் பதவி வகித்தார். பிரம்மஞான
சபையின் கொள்கைகளை அதன் தலைமையகமான சென்னையின் அடையாறில் இருந்து தீவிரமாகப் பிரச்சாரம்
செய்த அவருக்குக் கல்விகற்ற பல தொண்டர்களின் ஆதரவும் கிடைத்தது. ஜம்னாதாஸ் துவாரகாதாஸ்,
ஜார்ஜ் அருண்டேல், ஷங்கர்லால்பன்கர், இந்துலால்யக்னிக், சி.பி. இராமசாமி, பி.பி. வாடியா
ஆகியோர் பெசண்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள்.
1914இல் பிரிட்டன் முதல் உலகப்போரில் ஈடுபடும்
அறிவிப்பை வெளியிட்டது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்காகத் தான் பாடுபடுவதாகவும்
அது தெரிவித்தது. பிரிட்டனின் போர் முயற்சிகளை இந்தியத் தலைவர்கள் நம்பிக்கையுடன் ஆதரித்தனர்.
இந்தியா பற்றிய பிரிட்டிஷாரின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாததால் விரைவில்
அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் மற்றும்
தீவிர தேசியவாதத்தன்மை உடையவர்கள் என்ற குழுக்களாகப் பிளவுபட்டதால், தன்னாட்சிக்கான
அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து மேலும் வலியுறுத்த முடியவில்லை . மைய நாடுகளை ஆதரித்து
முதல் உலகப்போரில் துருக்கியின் சுல்தான் நுழைந்ததை அடுத்து பிரிட்டிஷார் முஸ்லீம்
லீக்கை சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர்.
இந்த பின்னணியில் தான் அன்னிபெசண்ட் அம்மையார்
இந்திய அரசியலில் நுழைந்தார். 1914இல் தி காமன்வீல் என்ற வாரந்திரியை அவர் தொடங்கினார்.
சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில்
இந்த வாராந்திரி கவனம் செலுத்தியது. 1915இல் “How
India Wrought for Freedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.
கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்றிய தேசிய விழிப்புணர்வின் தொடக்கங்களை அவர் இந்தப் புத்தகத்தில்
விரிவாக எடுத்துரைத்தார்.
இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின்
வாய்ப்புக்கான தருணம் என்று அவர் முழக்கமிட்டார். சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்துமாறு
இந்தியத் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட அவர் இந்திய
விடுதலை குறித்து பல உரைகளை நிகழ்த்தினார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியக் கட்சி
ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வி கண்டார். எனினும் அவரது பயணம் மூலம் இந்தியா குறித்த
அனுதாபம் ஏற்பட்டது. இந்தியா திரும்பிய அவர், 1915 ஜூலை 14இல் நியூ இந்தியா என்ற தினசரியைத்
தொடங்கினார். பம்பாயில் நிகழ்த்திய உரையில் தன்னாட்சி குறித்த தனது கொள்கையை அவர் வெளிப்படுத்தினார்.
தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள்
மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்."
ஆங்கிலேயக் காலனிகளைப் போன்று போருக்குப் பிறகு இந்தியாவுக்கு தன்னாட்சி கொடுக்கப்பட
வேண்டும் என்ற கருத்தைப் பரப்பவும் கோரிக்கையை வலியுறுத்தவும் அன்னிபெசண்ட் அம்மையார்
பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.
அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில்
இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்போவதாக அவர் 1915 செப்டம்பர் 28இல் முறைப்படி
அறிவித்தார். மற்றொரு தனி இயக்கம் தொடங்கப்படுவதை மிதவாத தேசியவாதிகள் விரும்பவில்லை
. தனது இயக்கம் வெற்றிபெற காங்கிரஸ் கட்சியின் அனுமதி தேவை என்பதை அவரும் அறிந்திருந்தார்.
திலகர், பெசண்ட் அம்மையார் ஆகியோரின் முயற்சிகளால்
டிசம்பர் 1915இல் பம்பாயில் நடந்த காங்கிரஸ் அமர்வில் தீவிர தேசியத் தன்மையுடையவர்களை
உறுப்பினர்களாகச் சேர்க்கும் வகையில் தனது விதிமுறைகளில் அக்கட்சி முறையாக திருத்தம்
செய்தது. 1916 செப்டம்பர் மாதத்திற்குள் தன்னாட்சி இயக்கத்தை கையிலெடுக்குமாறு அந்த
மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பெசண்ட் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்யத்தவறினால்,
தாமே தன்னாட்சி இயக்கத்தை அமைக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொன்று பெசண்ட் அம்மையார் தலைமையிலும் என 1916இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள் : பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும் தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகியன அந்த இரண்டு குறிக்கோள்களாகும்.
(அ) திலகரின் தன்னாட்சி இயக்கம்
ஏப்ரல் 1916இல் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண
மாநாட்டில் இது நிறுவப்பட்டது. பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய
மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்படும். திலகரின்
இயக்கத்துக்கு ஆறு கிளைகள் ஒதுக்கப்பட்டன. அன்னிபெசண்ட் அம்மையாரின் இயக்கத்துக்கு
இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
தன்னாட்சி குறித்த கோரிக்கைகளை தமது உரைகள்
மூலம் திலகர் பிரபலப்படுத்தினார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்திருந்த
அவரது இயக்கம், ஏப்ரல் 1917இல் 14 ஆயிரம் உறுப்பினர்களில் இருந்து 1918இன் தொடக்கத்தில்
32 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்தது. தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக
1916 ஜூலை 23இல் தமது அறுபதாவது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.
தன்னாட்சி: மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு , அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல் ரீதியாக விசுவாசமாக இருப்பார்கள் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படும் தன்னாட்சி அதிகாரத்தைக் குறிக்கிறது. பழங்கால ரோமானிய அரசிலும், நவீன ஆங்கிலேய அரசிலும் இது பொதுப்படையான அம்சமாக இருந்தது. 1880 களில் அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றதை அடுத்து அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் பிறகு தெற்கில் ஆங்கிலோஅயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப்பெற்றது.
காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த அறிகுறியும்
தென்படாத காரணத்தால் செப்டம்பர் 1916ஆம் ஆண்டு மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசண்ட்
தொடங்கினார். கான்பூர், அலகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை, அகமதுநகர்
ஆகிய இடங்களில் இந்த இயக்கத்தின் கிளைகள் அமைந்தன. இந்தியா முழுவதும் தீவிரப் பயணம்
மேற்கொண்டு தன்னாட்சி குறித்த கருத்தை அவர் பரவச்செய்தார். இந்தியாவின் விசுவாசத்தின்
விலை இந்தியாவின் விடுதலை என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் செயல்படாத நிலை
குறித்து அதிருப்தி அடைந்த மிதவாத தேசிய காங்கிரசார் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர்.
ஜவஹர்லால் நேரு , முகம்மது அலி ஜின்னா , பி. சக்கரவர்த்தி, ஜிதேந்திரலால் பானர்ஜி,
சத்யமூர்த்தி, கலிக்குஸ்மான் ஆகியோர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டதிலிருந்து
இந்த இயக்கத்தின் பிரபலத்தை அறிய முடியும்.
மதராஸில் அன்னிபெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி
இயக்கம் மிகவும் பிரபலம் அடைந்ததை அடுத்து மதராஸ் அரசு அதனை அடக்க நினைத்தது . இந்த
இயக்கத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ள மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஜூன்
1917இல் பெசண்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி.வாடியா, ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர்
அரசியல் காரணங்களுக்காக ஊட்டியில் சிறைபிடிக்கப்பட்டனர். அரசின் இந்த அடக்குமுறை தன்னாட்சி
கோரிய ஆதரவாளர்களை வலுப்படுத்தியது; மேலும் அதிக உறுதியுடன் போராடத் தூண்டியது. பெசண்ட்
அம்மையாருக்கு ஆதரவாக சர். எஸ். சுப்ரமணியம் அரசப் பட்டத்தை (knighthood) துறந்தார்.
முன்னர் இந்த இயக்கத்தில் இருந்து தனித்து இருந்த மதன் மோகன் மாளவியா, சுரேந்திரநாத்
பானர்ஜி போன்ற தலைவர்கள் தங்களை தன்னாட்சி இயக்கத்தில் தீவிரமாக இணைத்துக்கொண்டனர்.
தலைவர்கள் விடுதலையாகாவிட்டால் சட்டமறுப்பு
இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து 1917 ஜூலை 28இல் கூடிய அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் திலகர் வலியுறுத்தினார். காந்தியடிகளின் உத்தரவின்
பேரில் ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் மற்றும் ஷங்கர்லால் பன்கர் ஆகியோர் பெசண்ட் மற்றும் இதர
தலைவர்களை சிறைபிடித்த நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி ஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து
வாங்கி பெசண்ட் அம்மையார் சிறைபிடிக்கப்பட்ட இடத்துக்கு பேரணியாகச் சென்றனர். எதிர்ப்பு
வலுத்ததை அடுத்து சிறைபிடிக்கப்பட்டத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு
என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர்
மாண்டேகு 1917 ஆகஸ்டு 20இல் அறிவித்தார். இந்த அறிக்கை ஒரே இரவில் பெசண்ட் அம்மையாரை
விசுவாசிக்கு நிகராக மாற்றியது. செப்டம்பர் 1917இல் அவர் விடுதலையான போது அவர்
1917இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு
வழிவகுக்கும் வகையில் மக்களை ஒன்று திரட்ட தன்னாட்சி இயக்கங்கள் களம் அமைத்தன. காந்தியடிகளின்
சத்தியாக்கிரகப் போராட்டங்களில் முதன் முதலில் ஈடுபட்டோரில் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள்.
இந்த இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் காந்தியடிகளின் போராட்டங்களைப்
பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தினர். அனைத்துவிதப் பிரிவுகளைத் தாண்டி காங்கிரஸ்,
முஸ்லிம் லீக், பிரம்மஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என பலதரப்பட்ட உறுப்பினர்களைக்
கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கமாக தன்னாட்சி இயக்கம் விளங்கியது.
'Indian
unrest' என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம்
தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக செப்டம்பர் 1918இல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றது
மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்ட் ஏற்றுக்கொண்ட
பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா
தன்னாட்சி பெறுவது அல்லது கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வழியில் தன்னாட்சிப் பகுதித்
(டொமினியன்) தகுதியைப் பெறுவது ஆகியவற்றுக்காகப் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஆதரவைக் கோருவதற்காக இந்திய காமன்வெல்த் லீக் என்று தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம்
செய்யப்பட்டது. பின்னர் 1929இல் இந்திய லீக் என்று வி.கே. கிருஷ்ணமேனன் மாற்றம் செய்தார்.