இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு - லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள் | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement
லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள்
(i) நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய
கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
(ii) மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின்
உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 1/5 பங்கு நபர்கள்
நியமனம் செய்யப்பட வேண்டும்.
(iii) மாகாண மற்றும் மத்திய சட்டப்பேரவைகளின்
4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
(iv) மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை
உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
இந்தியர்களாக இருக்க வேண்டும்.
(v) மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு
தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. (மக்கள்தொகையில் தெரிவிக்கப்பட்ட
விகிதங்களுக்கு அப்பால்) இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட
பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை
வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை
இயக்கம் ஆகியவற்றில் இந்து - முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
(vi) தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு
ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்க கடமைப்பட்டுள்ளன. கவர்னர் ஜெனரல் அல்லது ஆளுநர்
சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான
இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
(vii) இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும்
உள்ள உறவுகளும் தன்னாட்சி (டொமினியன்) தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கும் இந்தியாவுக்கும்
உள்ள உறவுகளும் ஒத்திருக்கவேண்டும். ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும்
சம நிலை பெற்றிருக்க வேண்டும்
இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு லக்னோ ஒப்பந்தம்
வழிவகுத்தது. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பியான ஜின்னாவை "இந்துமுஸ்லிம்
ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
லக்னோ உடன்படிக்கையானது காங்கிரஸ் மற்றும்
லீக்கில் இருந்த படித்த வகுப்பினர் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முடியும்
என்பதை நிரூபித்தது. இந்த ஒற்றுமை கிலாஃபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது அதன்
உச்சத்தை அடைந்தது.