இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு - தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement
தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி
இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய
முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம்
ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானார்கள். இந்தியாவில்
பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்கள் முதலில் மிகப்பணிவுடனும்
முறைசாராமலும் இருந்தனர். பம்பாயின் சோரப்ஜி ஷபூர்ஜி, மற்றும் என்.எம். லோக்காண்டே
, வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத்
தங்களின் குரல்களை எழுப்பினர்.
சுதேசி இயக்கத்தின் (1905) பின்னணியில் இந்தியத்
தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பித்தன. போர்க் காலப் பொருட்களைத் தயாரித்த இந்திய தொழிற்சாலைகளுக்குப்
பிரிட்டிஷார் போரின்போது ஊக்கம் தந்தனர். போர் தொடர்ந்து நடந்ததை அடுத்து அவர்களுக்கு
அதிகப் பொருட்கள் தேவைப்பட்டன. அதனால் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர்.
போர் முடிவுக்கு வந்தவுடன் பணியாளர்கள் வேலையின்றித் தவித்ததோடு உற்பத்தியும் குறைந்தது.
போருக்குப் பிந்தையச் சூழலில் விலைகளும் தாறுமாறாய் அதிகரித்தன. உலகம் முழுவதும் பரவிய
இன்ஃபுளுயன்சா (Influenza) தொற்றுநோயின் தாக்கத்தின் பிடியில் இந்தியாவும் சிக்கித்
தவித்தது. தொழிலாளர்கள் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாக்கும்
வகையில் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
1917ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி
இந்திய தொழிலாளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. வகுப்புபேதம் பற்றிய விழிப்புணர்வும்,
அறிவார்ந்த சிந்தனையும் இந்தியத் தொழிலாளர்களின் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.
ஐரோப்பாவில் போரில் பங்கேற்ற இந்தியப் படைவீரர்கள் அங்கிருந்த தொழிலாளர்களின் மேம்பட்ட
நிலைமை பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்த்தனர். போரால் ஏற்பட்டப் பொருளாதாரச் சிரமங்கள்
காரணமாக ஏற்பட்ட தொழில் வீழ்ச்சி, வேலை கொடுப்போர் மற்றும் வேலை செய்வோருக்கிடையேயான
பெரிய இடைவெளி, பல்வேறு நாடுகள் பங்கேற்புடன் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது,
ஆகியன தொழிலாளர்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தொழிலாளர் இயக்க வரலாற்றில் மதராஸ்
முக்கியப் பங்காற்றியது. 1918இல் முதன்முறையாக அமைக்கப்பட்டத் தொழிற்சங்கமாக பி.பி.
வாடியா அவர்களால் மதராஸ் தொழில் சங்கம் நிறுவப்பட்டது. பக்கிங்ஹாம், பெரம்பூர் கர்நாடிக்
மில் ஆகியவற்றின் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டதன் காரணமாக இந்தத் தொழிற்சங்கம்
முக்கியமாக ஏற்பட்டது. அங்கு பணியாளர்களுக்கான பணி நிலைமைகள் மிக மோசமாக இருந்தது.
மதிய உணவுக்கு குறுகிய கால இடைவெளி, தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி
நடத்தியத் தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகியன இந்தத் தொழிற்சங்கம் அமையக்
காரணமாக அமைந்தன. ஒட்டுமொத்தமாக பேரம் பேசுவதைப் பின்பற்றி வகுப்புப் போராட்டத்துக்குத்
தொழிற்சங்கம் சார்ந்த கொள்கைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தத் தொழிற்சங்கம் முனைந்தது.
இந்த அலை இந்தியாவின் இதரப் பகுதிகளுக்கும்
பரவியது. இந்த காலகட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. கல்கத்தா மற்றும்
பம்பாயில் இந்தியக் கடற்படை வீரர்கள் சங்கம், பஞ்சாப் பத்திரிகை ஊழியர்கள் சங்கம்,
G.I.P. ரயில்வே பணியாளர்கள் சங்கம் பம்பாய், M.S.M. ரயில்வே ஊழியர் சங்கம், அஞ்சல்
பணியாளர்கள் சங்கம், பம்பாயிலும் கல்கத்தாவிலும் துறைமுகப் பொறுப்புக் கழக ஊழியர் சங்கம்
ஜாம்ஷெட்பூர் தொழிலாளர் சங்கம், ஜாரியாவில் இந்திய நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் சங்கம்
மற்றும் பல்வேறு ரயில்வேக்களின் ஊழியர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர் இயக்கத்தை
அடக்கும் நோக்கில், பணமுதலாளிகளின் உதவியோடு அரசு தொழிலாளர்களைக் கீழ் நிலையில் வைத்திருக்க
அனைத்து வழிகளிலும் முயன்றது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்வது, அவர்களின்
வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியதோடு தொழிற்சங்கங்களுக்கு அபராதங்களையும் விதித்தனர். ஆனால் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளில்
வலுவாக இருந்தனர்.
பணியாளர்களின் நிலைமை கண்டு இரக்கம் கொண்ட
தேசியவாதத் தலைவர்களும் அறிவுஜீவிகளும் அவர்களைத் தொழிற்சங்கங்கள் மூலமாகச் செயல்பட
வைக்க தீவிரம் காட்டினர். பணியாளர் வகுப்பின் அரசியல் வாழ்க்கைக்கு இவர்களது ஈடுபாடும்
ஒரு காரணமாக அமைந்தது. பெரும்பான்மையான ஆலைகளின் உரிமையாளர்களாக ஐரோப்பியர்கள் இருந்ததால்
அரசு அவர்களை ஆதரித்தது. அதன் காரணமாகவும் சுதந்திரப் போராட்டத்துக்கு வலு சேர்ந்தது.
1920 அக்டோபர் 30இல் 1,40,854 உறுப்பினர்களைக்
கொண்ட 64 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் சந்தித்து லாலா லஜபதி ராயின்
தலைமையில் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸை (AITUC) நிறுவினர். மோதிலால் நேரு, ஜவஹர்லால்
நேரு , சி ஆர் தாஸ், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின்
தேசியத் தலைவர்கள் பலர் இந்த அமைப்பை ஆதரித்தனர்.
தொழிற்சங்கங்கள் மெதுவாக தேசிய இயக்கத்தில் ஈடுபட்டன. ஏப்ரல் 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் காந்தியடிகளின் கைதுக்குப் பிறகு அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் வகுப்பினர் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரசு அல்லது முதலாளிகளால் முதலில் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்படவில்லை . தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் அவர்களின் இயக்கத்தின் வலிமை காரணமாக அரசும் முதலாளிகளும் அவர்களை அங்கீகரிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டன. 1919-20இல் 107 ஆக இருந்த பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1946-47இல் 1833 ஆக அதிகரித்தது.