வரலாறு - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்கண்டவற்றைப் பற்றி அறிந்துகொள்ள
• முதல் உலகப்போரால் உருவான நிலைமை: மிதவாத தேசியவாதிகள் மற்றும்
தீவிர தேசியத்தன்மை கொண்டவர்கள் இணைந்து திலகர் மற்றும் அன்னிபெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி
(ஹோம் ரூல்) இயக்கத்தின் மூலமாக ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஒன்றுபட்டு போராட்டத்தை
நடத்தியது.
• ஆங்கிலேயரின் அடக்கி ஆளும் நடவடிக்கைகள்: இந்திய பாதுகாப்புத்துறைச்
சட்டம் இயற்றப்படுதல்.
• இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுத்த லக்னோ ஒப்பந்தம்.
• ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் கிலாபத் இயக்கம் வழியாக இந்து-முஸ்லிம்
நல்லிணக்கம்.
• இந்தியத் தொழிலாளர் இயக்கத்தில் முதல் உலகப்போர் மற்றும் ரஷ்யப் புரட்சியின் தாக்கம்
இந்திய தேசிய அரசியலில் முதல் உலகப்போருக்கு
முந்தைய பல நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தின. 1905இல் ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது.
1908இல் இளம் துருக்கியர்களும் 1911இல் சீன தேசியவாதிகளும் மேற்கத்திய வழிமுறைகள் மற்றும்
சிந்தனைகளைப் பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள். முதல் உலகப்போருடன் இந்த
நிகழ்வுகளும் 1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின.
சண்டைகள் பல பகுதிகளில் நடந்த போதிலும் இந்தப்
போரின் முக்கியக் களமாக ஐரோப்பா விளங்கியது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில்
ராணுவ சேவை புரிய பெரும் எண்ணிக்கையில் இந்தியர்களை ஆங்கிலேயர்கள் பணிக்கு எடுத்தனர்.
இந்தப் போருக்குப்பின் புதிய சிந்தனைகளுடன் இந்தியா திரும்பிய இந்த வீரர்கள் இந்திய
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினர். வற்புறுத்தலின் காரணமாக 367 மில்லியன் பிரிட்டிஷ்
பவுண்டுகளை இந்தியா, 229 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளில் நேரடி ரொக்கமாகவும் எஞ்சிய
தொகையைப் போர்ச்செலவுகளைச் சமாளிக்க கடனாகவும் வழங்கியது. இதைத்தவிர 250மில்லியன் பிரிட்டிஷ்
பவுண்டுகள் மதிப்புக்குப் போருக்கானப் பொருட்களையும் இந்தியா அனுப்பியது. இதனால் பெருமளவில்
பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டதால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள்,
தீவிரத் தேசியவாதிகள் என இருவேறு வகைகளில் பிரிந்த காரணத்தாலும் போரின் போது பிரிட்டிஷாரின்
நலன்களுக்கு ஆதரவாக முஸ்லிம் லீக் செயல்பட்டதாலும் தேசிய அரசியல் தீவிரமற்று இருந்தது.
1916இல் திலகர் தலைமையில் தீவிரத் தேசிய தன்மையோடு செயல்பட்டவர்கள் காங்கிரசை கட்டுப்படுத்தினர்.
மேற்கத்திய இந்தியாவில் திலகர் தலைமையிலும் தென்னிந்தியாவில் டாக்டர் அன்னிபெசண்ட்
அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தப் போரின்
போது காங்கிரஸ் மீண்டும் ஒன்றுபட்டது. 1916இல் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே
கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம் இந்திய தேசியத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது. இந்தப்
போரின் போது தீவிர தேசியவாதிகளின் சிந்தனைகளை மேற்கத்தியப் புரட்சிகர கருத்துக்கள்
பெருமளவில் ஆக்கிரமித்தன. எனவே அடக்குமுறைச் சட்டங்களை இயற்றியும் பயன்படுத்தியும்
தேசிய இயக்கத்தை அடக்கியாள ஆங்கிலேய அரசுமுயன்றது. கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களில்
மிகக் கொடுமையானதாக ரௌலட் சட்டம் அமைந்தது. இந்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்த இந்தியத்
தலைவர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சர்வதேச நிகழ்வுகளும் குறிப்பாக
ரஷ்யப் புரட்சி போன்ற நிகழ்வுகளும் இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. முதல்
உலகப்போரில் துருக்கி தோற்றதும், அதன்பின் கையெழுத்தான செவ்ரேஸ் உடன்படிக்கையின் கடுமையான
விதிமுறைகளும் துருக்கியின் சுல்தானை (கலிபா) நிலைதாழ்த்திக் காட்டியது. இதன் விளைவாக
கிலாபத் இயக்கம் தோன்றியது.
இந்தியாவின் விசுவாசத்துக்குப் பிரிட்டன் உரிய
மதிப்பளிக்கும் என்று நம்பி இந்தியாவும் இந்தியர்களும் இந்தப் போரில் தீவிரமாகச் செயல்பட்டனர்.
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவ்வாறாக இந்தியாவின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில்
பலதரப்பட்ட பாதிப்புகளை இந்தப் போர் உண்டாக்கியது. இந்தப் பாடத்தில் தன்னாட்சி இயக்கத்தின்
பங்கு , லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான காரணிகள் மற்றும் அந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள்,
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முடிவடைந்த ஆங்கிலேயர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள்,
கிலாபத் இயக்கம், முறை சார்ந்த தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி ஆகியன குறித்து நாம்
விவாதிக்கலாம்.