இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு - கிலாபத் இயக்கம் | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement
கிலாபத் இயக்கம்
முதல் உலகப்போரில், நேசநாடுகளுக்கு எதிராக
முக்கூட்டு நாடுகளுக்கு ஆதரவாக துருக்கி சுல்தான் களம் இறங்கி ரஷ்யாவைத் தாக்கினார்.
கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் துருக்கிய சுல்தான் விளங்கினார்.
போருக்குப் பிறகு துருக்கியின் நிலையைப் பலவீனப்படுத்த முடிவுசெய்த பிரிட்டன் செவ்ரெஸ்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. துருக்கியின் கிழக்குப்பகுதியில் இருந்த சிரியா, லெபனான்
ஆகிய நாடுகள் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலும் பாலஸ்தீனமும் ஜோர்டனும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும்
இடம்பெற்றன. கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டுவர கூட்டணிப்படைகள் அவ்வாறு முடிவு
செய்தன.
கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இசுலாம்
மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா மீது
அனுதாபம் கொண்டவர்கள் அதனால் இந்நடவடிக்கையை எதிர்க்க முடிவு செய்தனர். மௌலானா முகமது
அலி, மௌலானா சௌஹத் அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர். அவர்களின்
தலைமையின் கீழ் இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் ஒன்றுபட்டனர். ஆட்டோமன் அரசை ஆதரிப்பதையும்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்த இயக்கம்
தோன்றியது. மௌலானா அபுல் கலாம் ஆசாத், M.A. அன்சாரி, ஷேக் ஷெளகத் அலி சித்திக், சையது
அதுல்லா ஷா புகாரி ஆகிய பல முஸ்லிம் தலைவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மார்ச் 1920இல் பாரீசில் முகமது அலி கிலாபத்
இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்:
1. துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித்
தொடரவேண்டும்.
2. இசுலாமியப் புனிதத் தலங்கள் சுல்தானிடம்
ஒப்படைக்கப்பட்டு அவர் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
3. சுல்தானிடம் போதுமானப் பகுதிகள் தரப்பட்டு
இசுலாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்படவேண்டும்.
4. ஜாசிரத்-உல்- அரப் (அராபியா, சிரியா, ஈராக்,
பாலஸ்தீனம்) ஆகியன இவரின் இறையாண்மையின் கீழிருக்க வேண்டும்.
தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய
மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இ-ஹிந்த் தங்கப்பதக்கம் வழங்கி
சிறப்பிக்கப்பட்டது. 1906இல் ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச்
செயல்பட்ட அவரது சேவைகளைப் பாராட்டி ஜுலு போர் வெள்ளிப்பதக்கம் காந்தியடிகளுக்கு வழங்கப்பட்டது.
1899-1900களில் போயர் போரின்போது தூக்கு படுக்கை (Stretcher) கொண்டு செல்வோர் படையில்
இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக போயர் போர் வெள்ளிப்பதக்கம்
அவருக்கு வழங்கப்பட்டது. கிலாபத் இயக்கத்தின் தொடர்பில் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள்
தொடங்கிய போது, அனைத்துப் பதக்கங்களையும் திரும்ப ஒப்படைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஒரு மாத காலமாக நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது கிலாபத் இயக்க விஷயத்தில்
ஏகாதிபத்திய அரசு நேர்மையற்ற, நியாயமற்ற வகையிலும் மற்றும் கிரிமினல் போலவும் நடந்துகொண்டதுடன்,
தங்கள் நேர்மையற்றத் தன்மையைப் பாதுகாக்கத் தவறுக்கு மேல் தவறு செய்தன. இத்தகைய அரசு
மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை .
இந்த இயக்கத்தின் கோரிக்கைகளுக்கும் இந்தியாவிற்கும்
தொடர்பில்லை என்றாலும் கலீபா பற்றிய கேள்வி மூலம் கிலாபத் இயக்கத் தலைவர்கள், பிரதேச
, மொழி, வகுப்பு, பிரிவினைவாத வழிகளில் பிளவுபட்ட இந்திய முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்க
ஒரு அடையாளமாகப் பயன்படுத்தினார்கள். கெயில் மினால்டின் வார்த்தைகளில் சொல்லவேண்டும்
என்றால், முழுமையான இந்திய இசுலாமிய அரசியல் மேம்பாட்டுக்கான வழியைத் திறக்க
"முழுமையான இசுலாமிய அடையாளம் பயன்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் களம் காணவும்,
இந்திய தேசியம் என்ற தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை இணைக்கும் காரணியாகவும் விளங்குவதால்
இதற்கு ஆதரவு தெரிவிக்க காந்தியடிகளுக்கு ஊக்கம் கிடைத்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப்
பலப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாகக் காந்தியடிகள் கருதினார்.
கிலாபத் விஷயம் பல பிரிவினரால் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப் (எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது
மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
இவ்வாறே மலபாரைச் சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக
உருமாற்றம் செய்தனர்.