இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு - போரின் தாக்கம் | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement
போரின் தாக்கம்
முதல் உலகப்போருக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் அரசியல் நிலைமை ஒழுங்கற்று இருந்தது. மிதவாத தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் லீக்கின் ஆதரவை பெறும் நோக்கிலும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கிலும் பிரிட்டிஷார் 1909இல் மிண்டோ - மார்லி சீர்திருத்தங்களை நிறைவேற்றினர். மிதவாத தேசியவாதிகள் பொறுத்திருந்து பார்ப்பது என்ற கொள்கையைப் பின்பற்றினர். தங்களுக்கு வழங்கப்பட்ட தனித் தொகுதிகளை முஸ்லிம் லீக் வரவேற்றது. 1913இல், இந்த லீக்கில் புதிய தலைவர்கள் சிலர் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக ஏற்கனவே இருந்த முகமது அலி ஜின்னா , அவர்களில் முக்கியமானவர். அவர் முஸ்லிம்களுக்காக அதிக சீர்திருத்தங்களைக் கோரினார்.
இந்தியாவில் புரட்சிகர தேசிய செயல்பாட்டுக்கு உகந்த நிலைமைகளை முதல் உலகப்போர் உருவாக்கியது. போரில் பிரிட்டனின் சிரமத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த புரட்சியாளர்கள் விரும்பினர். கதார் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்
முதல் உலகப்போர் விடுதலைப்போரில் பெரும் தாக்கத்தைக்
கொண்டிருந்தது. முதலில் பிரிட்டிஷ் அரசு இந்திய ஆதரவு பற்றிக் கவலைப்படவில்லை. மேற்காசியா
மற்றும் ஆப்பிரிக்கா நோக்கி போர்ச்சூழல் நகர்ந்த பிறகு இந்திய ஆதரவை எதிர்பார்க்க பிரிட்டிஷார்
நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தச் சூழலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசுக்கு
நெருக்குதல் தர இந்தியத் தலைவர்கள் முடிவு எடுத்தனர். 1915 இல் பம்பாயில் வருடாந்திர
மாநாட்டை நடத்திக் கொண்டிருந்த காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் இதே அடிப்படையில் விவாதித்தன.
அக்டோபர் 1916இல் இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும்
முஸ்லிம் உறுப்பினர்கள் அரசப்பிரதி நிதிக்கு (வைசிராய்) எழுதிய கடிதத்தில் போருக்குப்
பிந்தைய சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்தினர். இதற்கு பிரிட்டிஷ் அரசு அசைந்துகொடுக்கவில்லை
காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் சந்தித்து
இந்த கடிதம் குறித்து விவாதித்தன. சட்டப்பேரவையின் கட்டமைப்பு, போருக்குப் பிந்தைய
சூழலில் இரண்டு சமூகங்களுக்கும் அனுமதிக்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை
ஆகியன குறித்து இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.
இதற்கு இணையாகத் திலகரும் அன்னிபெசண்ட் அம்மையாரும் தன்னாட்சி குறித்து அறிவுறுத்தினர். அவர்களது முயற்சிகளின் விளைவாகப் பம்பாய் மாநாட்டில் தீவிர தேசியத்தன்மை கொண்டவர்களைத் திரும்ப சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டு அதனைத்தொடர்ந்து காங்கிரசின் அமைப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. காங்கிரஸ், முஸ்லிம் லீக், தன்னாட்சி இயக்கம் ஆகியன தங்களுடைய வருட மாநாடுகளை லக்னோவில் நடத்தியதால் 1916ஆம் ஆண்டு முக்கியத்துவம் பெற்றது. காங்கிரஸ் தலைவர் அம்பிகா சரண் மஜும்தார் தீவிர தேசியத்தன்மை கொண்டவர்களை வரவேற்றார். பத்தாண்டு கால வலி தந்த பிரிவுக்குப் பிறகு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிப் பிரிந்தால் அனைவருக்கும் தாழ்வு என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் உணர்ந்து, சகோதரர்கள் தங்களுடைய சகோதரர்களைக் கடைசியில் சந்தித்துவிட்டனர்..." தீவிர தேசியத்தன்மை கொண்டவர்கள் திரும்பியதை அடுத்து காங்கிரஸ் தனது பழைய சக்தியைப் பெற்றுவிட்டது.
லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ் - லீக் ஒப்பந்தம்
என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்-ஐ
ஒன்றிணைப்பதில் அன்னிபெசண்ட் அம்மையாரும் திலகரும் முக்கியப் பங்காற்றினார்கள். இந்த
ஒப்பந்தத்தின் போது ஜின்னா குறிப்பிடத்தக்க பங்காற்றினார். நவம்பர் 1916இல் கல்கத்தாவில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் டிசம்பர் 1916இல் நடந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்
லீக்கின் வருடாந்திர மாநாடுகளில் உறுதி செய்யப்பட்டன.
சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவந்த லாலா ஹர்தயாள் 1913இல் நிறுவினார். இந்த அமைப்பு கதார் கட்சி என்று அழைக்கப்பட்டது. (உருது மொழியில் கதார் என்றால் கிளர்ச்சி என்று பொருள்). அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே பெரும்பாலும் இந்தக் கட்சியில் இடம்பெற்றிருந்தனர். 'கதார்' என்ற பத்திரிகையையும் இக்கட்சி வெளியிட்டது. 1913 நவம்பர் முதல் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இது பதிப்பிக்கப்பட்டு வெளியானது. பின்னர் உருது, பஞ்சாபி, இந்தி மற்றும் இதர மொழிகளிலும் அது வெளியானது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கதார் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும். கோமகடமரு (Comagatamaru) என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவில் இருந்து குடியேறிவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பியது. இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலிசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல பயணிகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆழமான வடுவை ஏற்படுத்தியது.