உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் - உணவு தானியங்களின் கிடைத்தல் மற்றும் அணுகல் | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition
உணவு
தானியங்களின் கிடைத்தல் மற்றும் அணுகல்
ஒரு நாட்டில் உள்ள
மக்களுக்கான உணவுபாதுகாப்பு என்பது கிடைக்கும் உணவின் அளவைப் பொறுத்தது
மட்டுமல்லாமல், உணவுப் பொருள்களை வாங்க / அணுக மற்றும் ஆரோக்கியமான
சூழலில் வாழ்வதற்கான மக்களின் திறனையும் சார்ந்துள்ளது. பிற வளர்ச்சியைப் போலவே, மக்களின்
உணவு பாதுகாப்பும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி செயல்முறையுடன்
தொடர்புடையது. சுதந்திரத்திற்கு பிறகு,
இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு
செய்தது.
உணவு தானியங்கள்
விவசாயத்தில்
ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர்,
தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு
தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது. இருப்பினும், அப்பொழுது
இருந்த அந்நிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின்
இறக்குமதிக்கு அனுமதிக்கவில்லை. பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை
விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது. 1960 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L. 480) திட்டத்தின்
மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
அதிக மக்கள் தொகையைக்
கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது.
எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள்
உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல்
வகைகளுக்கான (High Yielding
Varieties) திட்டத்தை வகுத்து
அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட
மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால், அதிக
எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
இவ்வாறு, பசுமைப்புரட்சியானது
நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது. உயர் ரக
விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள்
பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது. மேலும் முக்கிய தானிய பயிர்களின்
விளைச்சலும் அதிகரித்தது. 1950களின் முற்பகுதியில் உணவு தானியங்களின் உற்பத்திப்
பரப்பளவு 98 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமாக இருந்தது. ஆனால்
நாடு 54 மில்லியன் டன் உணவு தானியங்களை மட்டுமே உற்பத்தி செய்து
கொண்டிருந்து. அப்போது சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 547கிலோ
உணவு தானியங்கள் கிடைத்தன. உணவு நிலையை சீர் செய்ய ஏறத்தாழ 65
ஆண்டுகள் ஆனது. பின் உணவு தானிய சாகுபடியின் பரப்பளவு 122
மில்லியன் ஹெக்டேராக வளர்ந்து, உற்பத்தி ஐந்து மடங்காக அதிகரித்தது. சுதந்திர
காலத்திற்கும் தற்போதைக்கும் இடையில் உணவுதானியங்களின் விளைச்சல் நான்கு மடங்காக
அதிகரித்துள்ளது.
உணவு தானிய உற்பத்தியில்
இந்த வளர்ச்சியானது ஒரு தொகுப்பாக செயல்படுத்தப்பட்ட HYV திட்டத்தால்
சாத்தியமானது. மேலும் இத்திட்டம் ஏற்புத்தன்மையுடைய உரங்கள், அதிக
விளைச்சல் தரும் நெல் மற்றும் கோதுமை வகைகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர, மானிய
விலையில் ரசாயன உரங்கள் கிடைப்பதை உறுதி செய்தது. கூட்டுறவு வங்கிகள் மற்றும்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மலிவான பண்ணைக் கடன் வழங்கப்பட்டது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) பருவ காலத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட தானியங்களை இந்திய உணவுக் கழகம் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது. இந்திய உணவுக் கழகம் மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கினை அமைத்து அறுவடை காலத்தில் உணவு தானியங்களைப் பெற்று இருப்பில் வைத்து அதனை ஆண்டு முழுவதும் வழங்குகிறது.
உணவு தானிய உற்பத்தியின்
விரைவான அதிகரிப்புடன் பால், கோழி மற்றும் மீன் உற்பத்தியில் பொருத்தமான
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, சுதந்திரம்
2000களின் நடுப்பகுதி ஆகியவற்றின் இடைப் பட்ட காலத்தில்
நாட்டில் பால் உற்பத்தி 8 மடங்கு, முட்டை உற்பத்தி 40
மடங்கு மற்றும் மீன் உற்பத்தி 13 மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியா
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதில் வெற்றி
பெறவில்லை . எனவே, இந்தியா மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை
நம்பியுள்ளது.
குறைந்தபட்ச
ஆதரவு விலை (Minimum
Support Price)
குறைந்தபட்ச
ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு
ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த
பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும்
இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும். எனினும், அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளை பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றால் திறந்தவெளி
சந்தையில் விற்க இயலும். மறுபுறம், திறந்தவெளி
சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு
விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் (MSP) பெறுவார்கள்.
தமிழ்நாடு “உலகளாவிய
பொது வழங்கல் முறை”யை (Universal
PDS) ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்தியாவில்
உள்ள மற்ற மாநிலங்களில் "இலக்கு பொது வழங்கல் முறை" (Targeted PDS) செயல்பாட்டில்
இருந்தது. உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை
பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் உணவுப் பொருள்கள்
வழங்கப்படுகிறது. ஆனால், இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில
அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது, மத்திய
மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் பொருள்களுக்கு
மானியம் அளிக்கின்றன. மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கு இடையே
வேறுபடுகிறது. மேலும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல்
நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75%
கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட
அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் (Priority Households) என அழைக்கப்படுகின்றன. இந்த முன்னுரிமை குடும்பங்களுக்கு
தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை பெறும் உரிமை
உண்டு. மத்திய அரசினால் அரிசி கிலோவிற்கு ₹3 என்ற
விகிதத்திலும், கோதுமை கிலோவிற்கு ₹2 என்ற
விகிதத்திலும், திணை கிலோவிற்கு ₹1 என்ற
விகிதத்திலும் NFSA கீழ் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய
பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக
அரிசியை வழங்குகிறது.
தமிழ்நாட்டில்
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்
இந்தியாவில்
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இச்சட்டம் தமிழ்நாட்டில் நவம்பர் 1, 2016 அன்று துவங்கப்பட்டது.
உணவு
பாதுகாப்பில் நுகர்வோர் கூட்டுறவின் பங்கு
பொதுவாக மக்களுக்கு
குறைவான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் நுகர்வோர் கூட்டுறவு முக்கிய பங்கு
வகிக்கிறது. இந்தியாவில் மூன்று அடுக்கு அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு
சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, முதன்மை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், மத்திய
நுகர்வோர் கூட்டுறவு கடைகள் மற்றும் மாநில அளவிலான நுகர்வோர் கூட்டமைப்புகள்
ஆகும். கிராமப்புறங்களில் நுகர்வோர் பொருள்களை வழங்குவதில் 50,000க்கும்
மேற்பட்ட கிராம அளவிலான சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் உணவு பாதுகாப்பில்
இந்த திட்டம் முக்கியப் பங்கினை வகிக்கிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில்
இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளில்,
சுமார் 94% கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
பற்றாக்குறைப்
பகுதிகளில் வழங்குவதற்காக தாங்கியிருப்பு செய்யப்படுகிறது. இதன்முலம் உணவு
தானியங்கள், சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு சந்தை விலையை விட
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்விலை வெளியீட்டு விலை என்று
அழைக்கப்படுகிறது. பாதகமான வானிலை அல்லது பேரழிவுக் காலங்களில் உணவு பற்றாக்குறைப்
பிரச்சினையை தீர்க்க இது உதவுகிறது.
தாங்கியிருப்பு (Buffer Stock)
தாங்கியிருப்பு
என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசி, இந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India) மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.
உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை
FCI வாங்குகிறது. விவசாயிகளுக்கு அவர்களின்
பயிர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட விலை வழங்கப்படுகிறது. இந்த விலை குறைந்தபட்ச
ஆதரவு விலை(Minimum
Support Price) என்று
அழைக்கப்படுகிறது. இந்த பயிர்களின் உற்பத்தியை உயர்த்துவதற்காக விவசாயிகளுக்கு
-ஊக்கத்தொகை வழங்குவதற்காக விதைப்பு பருவத்திற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும்
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அரசாங்கத்தால்
அறிவிக்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்கள் களஞ்சியங்களில்
சேமிக்கப்படுகின்றன.