Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | இரண்டாம் சந்திரகுப்தர்

குப்தர் - வரலாறு - இரண்டாம் சந்திரகுப்தர் | 11th History : Chapter 7 : The Guptas

   Posted On :  18.05.2022 05:32 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

இரண்டாம் சந்திரகுப்தர்

தனது தாத்தா பெயரையே சூடிய இரண்டாம் சந்திரகுப்தர் மிகத் திறமையான அரசர். அவர் பொ.ஆ. 375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.

இரண்டாம் சந்திரகுப்தர்


தனது தாத்தா பெயரையே சூடிய இரண்டாம் சந்திரகுப்தர் மிகத் திறமையான அரசர். அவர் பொ.. 375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். தனது சகோதரரான ராமகுப்தருடன் (370-375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார். விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார். பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்ட இரண்டாம் சந்திரகுப்தர் தனது அரசின் எல்லைகளை போர்கள், திருமண உறவுகள் ஆகியனவற்றின் மூலம் விரிவுபடுத்தினார். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தக்காணப் பகுதியை ஆண்ட வாகடக் இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார். இவரது மேற்கு இந்திய அரசுகள் மீதான படையெடுப்பின் போது, இத்திருமண உறவுகள் மிகவும் கூடுதல் பலம் அளித்தன. மேற்கு மாளவம், குஜராத் ஆகிய பகுதிகளை 400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை இப்படையெடுப்பின் மூலம் இரண்டாம் சந்திரகுப்தர் வென்றார்.

ரோமானியப் பேரரசுடனான வணிகத்தால் அரசின் வளம் பெருகியது. கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவை வென்ற பின்னர், இரண்டாம் சந்திரகுப்தர் ஹுணர், காம்போஜர், கிராதர் போன்ற வட நாட்டு அரசுகளை வென்றார். அவர் மிகப் பெரிய வெற்றி வீரராக மட்டுமின்றி, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். விக்ரமன், தேவகுப்தன், தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி ஆகியன இவரது வேறுபெயர்களாகும்.(இவைநாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.) கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் இவரது அவையில் இருந்தனர். இவர்களில் மாபெரும் சமஸ்கிருத கவிஞர் காளிதாஸர், சமஸ்கிருதப் புலவர் ஹரிசேனர், அகராதியை உருவாக்கிய அமரசிம்மர், மருத்துவர் தன்வந்திரி ஆகியோர் அடங்குவர். இவரது ஆட்சிக்காலத்தில்தான் பாஹியான் என்ற பௌத்த அறிஞர் சீனாவிலிருந்து இந்தியா வந்தார். இவர் குப்தப் பேரரசின் வளம் குறித்து பதிவு செய்திருக்கிறார். வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தரே. இவரது ஆட்சிக்காலத்தில்தான் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது.

 

 

மதுரா பாடலிபுத்திரம் குறித்து பாஹியான்


மதுராவில் மக்கள்தொகை அதிகம். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் தமது குடும்பத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை ..... அரசருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் மட்டும்தான் தானியத்தில் ஒரு பகுதியை அரசருக்குத் தரவேண்டும். சூழலைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு மிதமாகவோ, கடுமையாகவோ அபராதம் விதிக்கப்பட்டது ......

மீண்டும் மீண்டும் கலகம் செய்தால், குற்றமிழைத்தால், வலதுகை துண்டிக்கப்படும்... நாடு முழுவதும் மக்கள் எந்த உயிரினத்தையும் கொல்வதில்லை. எந்த மதுபானத்தையும் அருந்துவதில்லை பாடலிபுத்திரத்தில் வசிப்பவர்கள் நல்ல பணக்காரர்கள்; வசதியானவர்கள்; ஈகைக் குணத்தில் ஒருவரோடொருவர் போட்டி போடுபவர்கள்.

நகரங்களில் வைசியக் குடும்பத்தினர் தர்மம் செய்வதற்கும் மருத்துவத்திற்கும் சத்திரங்களைக் கட்டியிருக்கிறார்கள். அனைத்து ஏழைகள், ஆதரவற்றோர், அனாதைகள், விதவைகள், குழந்தையில்லாதவர்கள், அங்கவீனர்கள், ஊனமுற்றவர்கள் என அனைவருக்கும் அனைத்துவிதமான உதவிகளும் செய்யப்படுகின்றன.

இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின்னர் அவரது புதல்வர் முதலாம் குமாரகுப்தர் ஆட்சி செய்தார். முதலாம் குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர். இவர் சக்ராதித்யர் என்றும் அழைக்கப்பட்டார். குப்த வம்சத்தின் கடைசிப்பேரரசரான ஸ்கந்தகுப்தர் முதலாம் குமாரகுப்தரின் புதல்வராவார். இவர் ஹுணரின் படையெடுப்பைத் தடுத்தார். ஆனால் ஹுணர் மீண்டும் மீண்டும் படையெடுப்பு மேற்கொண்டதால், அரசு கருவூலம் காலியானது. பொ.. 467இல் ஸ்கந்தகுப்தரின் இறப்பிற்குப் பின்னர் குப்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இவருக்குப் பின்னர் பல குப்த அரசர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இவர்கள் பேரரசின் வீழ்ச்சியை விரைவுபடுத்தினார்கள். குப்த வம்சத்தின் கடைசி அரசர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.. 540 முதல் 550 வரை ஆட்சிபுரிந்தார்.

Tags : The Guptas | History குப்தர் - வரலாறு.
11th History : Chapter 7 : The Guptas : Chandragupta II The Guptas | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர் : இரண்டாம் சந்திரகுப்தர் - குப்தர் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்