குப்தர் - வரலாறு - பொருளாதார நிலைகள் | 11th History : Chapter 7 : The Guptas
பொருளாதார நிலைகள்
குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதியது நீதிசாரா என்ற நூல் ஆகும். இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூலவளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. சமுத்திரகுப்தர் மேற்கொண்ட படையெடுப்புகளுக்கான நிதி இதுபோன்ற வருவாய்களின் உபரி நிதியிலிருந்துதான் கிடைத்திருக்க வேண்டும். குப்தர் கல்வெட்டுகள் வருவாய்த் துறை குறித்து சில விவரங்களைத் தருகின்றன. அரசு ஆவணங்களை அக்ஷபதலதிக்கிருதா என்ற அதிகாரி பராமரித்தார். குப்தர் கல்வெட்டுகள் கிலிப்தா, பலி, உத்ரங்கா, உபரிகரா, இரண்யவெஷ்தி போன்ற சொற்களைக் குறிப்பிடுகின்றன. இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள்.
வேளாண்மையும் வேளாண் அமைப்பும்
குப்தர் ஆட்சிக் காலத்தில் அரசு சார்பில் ஏராளமான பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக வேளாண்மை மேம்பாடு அடைந்தது. அரசு, தனிநபர்கள் ஆகியோர் நீங்கலாகவும், பிராமணர்கள், புத்த, சமண சங்கங்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட தரிசு நிலங்களிலும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் தமது பயிர்களை முறையாகப் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டார்கள். பயிர்களை நாசம் செய்வோருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும், பயிர்களைச் சுற்றியும் வேளாண் நிலங்களைச் சுற்றியும் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
குப்தர் காலத்தில் நெல், கோதுமை, பார்லி, கடலை, தானியம், பயறு, கரும்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவை பயிரிடப்பட்டன. காளிதாசர் மூலம் தென்பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றிருந்தது தெரியவருகிறது. பழ மரங்கள் வளர்ப்பது குறித்து வராகமிகிரர் விரிவான அறிவுரைகளைத் தந்துள்ளார்.
பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது. நில மானியங்கள் தரும் போதும், அதன் மீதான தனியுரிமையைத் தன்னிடமே அவர் வைத்துக் கொண்டார். தனிப்பட்ட நிலங்களின் இடமும் எல்லைகளும் ஆவணக் காப்பாளர்களாலும், அப்பகுதியின் செல்வாக்கு மிக்கவர்களாலும் அளந்து குறித்து வைக்கப்பட்டன. பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார். கிராமத்தில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராம கணக்கர் பராமரித்தார். குப்தர் காலத்தில் நிலம் கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன.
பல்வேறு விதமான நிலகுத்தகை முறை
ஏனைய நிலக்கொடைகள்
பல்வேறு வரிகளின் பட்டியல்
பாசனம்
மிகத் தொன்மையான காலத்திலேயே நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தை இந்தியாவில் உணர்ந்திருந்தார்கள். நாரதஸ்மிருதி என்ற நூலில், வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த பந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்ற இருவகை அணைக்கரைகள் குறிப்பிடப்படுகின்றன. தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார். நதிகளிலிருந்து மட்டுமில்லாமல், ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும்.
விவசாயிகளின் நிலை
விவசாயிகளின் நிலைமை கீழ் நிலையில் இருந்தது . சாதிப்பிரிவுகள் காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல. மாறாக, எப்போது வேண்டுமானாலும் குத்தகையை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள். விவசாயிகள் பலவிதமான வரிகளையும் கட்டவேண்டி இருந்தது.
சுரங்கமும் உலோகவியலும்
குப்தர் காலத்தில் மிகவும் செழித்த தொழில்கள் சுரங்கத் தொழில், உலோகவியல் ஆகியன ஆகும். சுரங்கங்கள் இருந்தது குறித்து அமரசிம்மர், வராஹமிகிரர், காளிதாசர் ஆகியோர் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். இக்காலகட்டத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகள், இராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகள் ஆகியன பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன.
இரும்போடு தங்கம், செம்பு, தகரம், ஈயம், பித்தளை, வெண்கலம், மைக்கா, மாங்கனீஸ், அஞ்சனக்கல், சுண்ணாம்புக்கல், சிவப்பு ஆர்சனிக் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். விவசாயிகளுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் உலோக வேலை செய்பவர்களுக்கு இருந்தது. பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், பாத்திரங்கள், ஆயுதங்கள் தயாரிக்க உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. இரும்பின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர், கொழுமுனை மேம்படுத்தப்பட்டு, ஆழமான உழவிற்கு உதவியதால் இக்காலகட்டத்தில் வேளாண்மை அதிகரித்தது.
இக்காலகட்டத்தில், உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்தன என்பதை நிறுவுவதற்கு, இன்று தில்லிகுதுப்மினார் வளாகத்தில் காணப்படும் மெஹ்ரோலி இரும்புத்தூண் சான்றாகக் காட்டப்படுகிறது. இது இரண்டாம் சந்திரகுப்தருடன் அடையாளம் காணப்படுகிறது. இந்த இரும்புத்தூண் பல நூற்றாண்டுகளாகத் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கிறது. இது குப்தர் காலத்து உலோகவியல் கைவினைஞர்களின் திறனுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. நாணயங்கள் வடித்தல், உலோகச் செதுக்கு வேலைப்பாடு, பானை வனைதல், சுடுமண் சிற்பங்கள், மர செதுக்கு வேலைப்பாடு ஆகியவை வேறு சில கைவினைத் தொழில்களாகும்.
முத்திரை தயாரித்தல், புத்தர் மற்றும் பிற கடவுளரின் சிலை வடித்தல் ஆகியவை இக்காலகட்டத்தில் உலோகவியலில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றமாகும். இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், ஈயம் ஆகியவற்றை உருக்கிப் பிரித்தெடுப்பதில் ஏற்படும் இழப்பிற்கும் (சேதாரம்) சேர்த்து மக்கள் பணம் தரவேண்டியிருந்தது என்று சொல்லப்படுகிறது. நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வணிகமும் வர்த்தகமும்
குப்தர் பொருளாதாரத்தின் வலிமைக்கு வணிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற இருவேறுபட்ட வகைகளைச் சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.
சிரேஷ்டி என்பவர் பொதுவாக ஒரே இடத்தில் தங்கியிருப்பவர். தனது செல்வம் மற்றும் வணிகத்திலும், வணிகமையத்தை நிர்வகிப்பதன் மூலமும் பெற்ற வளத்தால் மரியாதைக்குரிய நிலையில் இருந்தவர். சார்த்தவஹா என்பவர் இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்.
அன்றாடம் பயன்படுத்தத் தேவையான பொருள்களிலிருந்து விலையுயர்ந்த, ஆடம்பரப் பொருள்கள் வரை வியாபாரம் செய்யப்பட்டன. மிளகு, சந்தனக்கட்டை, தந்தம், யானைகள், குதிரைகள், தங்கம், செம்பு, இரும்பு, மைக்கா ஆகியவை விற்கப்பட்டன. கைவினைக் கலைஞர்கள், வணிகர்கள், பெரு வணிக குழுக்கள் ஆகியன பற்றிக் குறிப்பிடும் செப்பேடுகள், முத்திரைகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இதன் மூலம் இக்காலகட்டத்தில் கைவினைத் தொழில்களும் வணிகமும் செழித்திருந்ததைக் காணமுடிகிறது. வணிகக் குழுக்களில் கைவினைக் கலைஞர்கள், வணிகர்கள் இருந்தது பற்றியக் குறிப்புகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. பொருள்களின் உற்பத்தி, அதிகரிப்பு, வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் வணிகக் குழுக்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது. தமது அமைப்புகளின் உள் நிர்வாகங்களைப் பொருத்தவரை இவை ஏறத்தாழ தன்னாட்சி அதிகாரம் பெற்றவைகளாக இருந்துள்ளன. இவர்களது சட்டதிட்டங்களை அரசும் மதித்தது. தனிப்பட்ட வணிகக் குழுக்கள் அனைத்தையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழுமத்தினால் இந்த சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாரத ஸ்மிருதி, பிருகஸ்பதி ஸ்மிருதி ஆகியவை வணிகக் குழுக்களின் அமைப்பு, செயல்பாடு குறித்து விவரிக்கின்றன. ஒரு குழுவில் குழுத் தலைவர், இரண்டு, மூன்று அல்லது ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவை குறிப்பிடுகின்றன. குழுச் சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக ஆவணங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமது குழு உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து பிருகஸ்பதி ஸ்மிருதி கூறுகிறது. குழுவின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசு ஒப்புதல் அளித்தே தீரவேண்டும். வணிகக் குழுக்களில் கைவினைஞர்களுக்கான குழுக்கள், வங்கியாளர்களுக்கான குழுக்கள், வணிகர்களுக்கான குழுக்கள் எனப் பல வித குழுக்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழும அமைப்புகள் இயங்கியதாகக் குறிப்புகள் உள்ளன.
பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை, விடுதிகள், சாத்திரங்கள், கோவில்கள், தோட்டங்கள், மண்டபங்கள் ஏற்படுத்தித் தரும் கொடை நடவடிக்கைகளிலும் வணிகக்குழுக்களும் குழுமங்களும் ஈடுபட்டு வந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிகக் குழுக்களின் தலைவர்கள் முக்கியப் பங்காற்றி வந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. வணிக வங்கிகள், கவிகை வண்டி வணிகக்குழுக்கள், கைவினைஞர்கள் குழுக்களின் குழுமங்கள் அமைப்புகள் இயங்கியதாகவும் குறிப்புகள் உள்ளன. வணிகக்குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாகவும் அறிய முடிகிறது. இதற்கான கொடையாளர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
நிதியுடன் தொடர்புடைய மற்றொரு அம்சம் கந்துவட்டி (அதிக வட்டிக்குக் கடன் தருதல் கந்து வட்டி ஆகும்). வணிகத்தில் அதிக இலாபம் ஈட்டுவதற்காகப் பணம் கடனாகப் பெறப்பட்டு வட்டிக்கு விடப்பட்டதற்கான குறிப்புகள் இக்காலகட்டச் சான்றுகளில் காணப்படுகின்றன. குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் கல்யாண், சால் ஆகிய வணிகத் துறைமுகங்களும், மலபார், மங்களூர் சலோபடானா, நயோபடான, பந்தேபடானா ஆகிய வணிகச் சந்தைகளும் இயங்கியுள்ளன. வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாஹியான் குறிப்பிடுகிறார். இந்த வணிகத் துறைமுகங்களும் நகரங்களும் ஒரு புறம் பாரசீகம், அரபியா, பைசாண்டியம் போன்ற நாடு நகரங்களோடும் துறைமுகங்களோடும், மறுபுறம் இலங்கை, சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளோடும் இணைக்கப்பட்டிருந்தன. இந்தியா, சீனா இடையிலான கடல் பயணத்தில் எதிர் கொள்ள நேரும் இடர்கள் குறித்து பாஹியான் குறிப்பிடுகிறார். அபூர்வமான ரத்தினக் கற்கள், மெல்லிய துணிவகைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து விற்கப்பட்டன. சீனாவிலிருந்து பட்டும், இதர பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களையும், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையில் வெள்ளி, செம்பு நாணயங்களையும் வெளியிட்டனர். எனினும் குப்தர் காலத்திற்குப் பின்னர் தங்க நாணயங்களின் புழக்கம் குறைந்துபோனது.