Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பண்பாட்டு மலர்ச்சி

குப்தர் - வரலாறு - பண்பாட்டு மலர்ச்சி | 11th History : Chapter 7 : The Guptas

   Posted On :  18.05.2022 05:33 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

பண்பாட்டு மலர்ச்சி

குப்தர் காலத்தில் நாகரா, திராவிடம் பாணியிலான கலைகள் வளர்ந்தன. இந்திய கட்டடக்கலை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க , படைப்பாக்கம் கொண்ட காலமாகும். பிற்காலத்தில் கலைகள் மேம்பாடு காண்பதற்கான ஊற்றுக் கண்கள் இக்காலத்தில் தோன்றின.

பண்பாட்டு மலர்ச்சி

 

கலையும் கட்டடக் கலையும்

 

குப்தர் காலத்தில் நாகரா, திராவிடம் பாணியிலான கலைகள் வளர்ந்தன. இந்திய கட்டடக்கலை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க , படைப்பாக்கம் கொண்ட காலமாகும். பிற்காலத்தில் கலைகள் மேம்பாடு காண்பதற்கான ஊற்றுக் கண்கள் இக்காலத்தில் தோன்றின.

 

குடைவரை, கட்டுமானக் கோவில்கள்

 

பாறைகளைக் குடைந்து கட்டப்படும் குடைவரைக் கோவில்கள் பெரும்பாலும் பழைய அமைப்புகளையேத் தொடர்ந்தன. எனினும் முகப்புப் பகுதியின் அலங்காரத்திலும், உள்பக்க தூண்களின் வடிவமைப்பிலும் விரிவான புதிய மாற்றங்களைக் கொண்டு வந்ததன் மூலம் புதுமை செய்தன. மிகவும் குறிப்பிடத்தகுந்த குடைவரைக் கோவில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. உதயகிரி குகைகளும் (ஒடிசா) இவ்வகையைச் சேர்ந்தவைதான்.

கட்டுமானக் கோவில்களில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன: 1. தட்டையான கூரை கொண்ட சதுரக் கோவில்கள் 2. விமானத்துடன் (இரண்டாவது மாடி) கூடிய தட்டையான கூரை கொண்ட சதுரக் கோவில்கள் 3. வளைகோட்டு கோபுரம் (சிகரம்) கொண்ட கோவில்கள் 4. செவ்வகக் கோவில்கள் 5. வட்டவடிவக் கோவில்கள்.


இரண்டாவது குழுவைச் சேர்ந்த கோவில்கள் திராவிட முறையின் பல கூறுகளைக் கொண்டவையாக உள்ளன. கருவறைக்கு மேலே சிகரம் அமைக்கும் புதுமை மூன்றாவது பாணியின் சிறப்பு ஆகும். அது நாகரா பாணியின் முக்கிய அம்சமாகும்.

 

ஸ்தூபிகள்

இவை ஏராளமான எண்ணிக்கையில் கட்டப்பட்டன. மிகச் சிறந்த ஸ்தூபிகள் சமத் (உத்தரப்பிரதேசம்), ரத்தினகிரி (ஒடிசா), மிர்பூர்கான் (சிந்து) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

 

சிற்பங்கள் - கல் சிற்பங்கள்

கல் சிற்பக் கலைக்குச் சிறந்த சான்று சாரநாத்தில் காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை. புராணச் சிற்பங்களில் மிக அழகானது உதயகிரி குகையின் நுழைவாயிலில் இருக்கும் வராஹ அவதாரச் சிலை.

 

உலோகச் சிற்பங்கள்

பெரிய அளவில் உலோகச் சிற்பங்களை வார்க்கும் கலையை குப்தர் காலத்து கைவினைக் கலைஞர்கள் மிகவும் கலைநுணுக்கத்தோடு செய்தார்கள். பீகாரின் நாளந்தாவில் உள்ள புத்தரின் பதினெட்டடி செம்புச் சிலை, சுல்தான்கஞ்சில் உள்ள ஏழரையடி புத்தர் சிலை ஆகிய இரண்டும் குப்தர் காலத்து உலோகச் சிற்பங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

 

ஓவியங்கள்

பொதுவாகவே குப்தர் காலத்தில் சிற்பக் கலையைவிட ஓவியக் கலையில் பலரும் ஈடுபட்டு, பேரும் புகழும் பெற்றது தெரிகிறது. குப்தரின் சுவரோவியங்கள் அஜந்தா, பாக், பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.


நுட்பம் என்ற அளவில், இந்த ஓவியங்கள் வரையப்பட்ட பரப்புகள் மிக எளிய முறையில் தயார் செய்யப்பட்டன. அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவையல்ல. ஏனெனில் ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும்போதே வரையப்படுபவை. ஆனால் அஜந்தாவின் சுவரோவியங்கள் பூச்சு காய்ந்தபின் வரையப்பட்டவை. அஜந்தா மற்றும் பாக்கில் காணப்படும் ஓவியங்கள் மத்திய தேச ஓவியப் பள்ளி முறையின் தலைசிறந்த ஓவியங்களாகும்.

 

சுடுமண் சிற்பங்களும் மட்பாண்டக் கலையும்

களிமண்ணால் செய்த சிறு உருவங்கள் மதம் சார்ந்த, மதம் சாராத நோக்கங்களுக்காகப் பயன்பட்டன. விஷ்ணு, கார்த்திகேயர், துர்கை, நாகர் மற்றும் பல ஆண், பெண் கடவுளர்களின் சிறு களிமண் உருவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

 

அச்சிசத்திரா, ராய்கார், ஹஸ்தினாபூர், பஷார் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள குப்தர் காலத்து மட்பாண்டங்கள் மட்பாண்டக் கலையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இக்காலகட்டத்து மட்பாண்டங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம்சிவப்பு மட்பாண்டங்கள்ஆகும்.

 

சமஸ்கிருத இலக்கியம்

குப்தர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கினார்கள். அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும் பட்டயங்களும் அம்மொழியில்தான் எழுதப்பட்டன. இக்காலகட்டம்தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்.

பண்டைய காலத்தில் உருவான ஸ்மிருதிகள் நல்லொழுக்கம், அரசியல், கலை மற்றும் பண்பாடு என்று பல்வேறு கருப்பொருள்கள் குறித்துப் பேசிய சமய நூல்களாகும். தர்மசாஸ்திரங்களும் புராணங்களும் இந்த இலக்கியக்கட்டமைப்பின் மையப்பொருளை வடிவமைத்தன.

 

சமஸ்கிருத இலக்கணம்

பாணினி எழுதிய அஷ்டத்யாயி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது. இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் அமரகோசம் என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. வங்கத்தைச் சேர்ந்த பெளத்த அறிஞர் சந்திரகோமியர் சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலைப் படைத்தார்.

 

புராணங்களும் இதிகாசங்களும்

இன்று நாம் அறிந்திருக்கும் வடிவில் புராணங்கள் இந்தக் காலத்தில்தான் இயற்றப்பட்டன. இவை பிராமணர்களால் பதிவு செய்யப்பட்ட தொன்மக் கதைகளாக இருந்தன. உண்மையில், இவை தொடக்கத்தில் பாணர்களால் பாடப்பட்டவை. பிராமணர்களின் கைகளுக்கு வந்ததும், இவை செவ்வியல் சமஸ்கிருதத்தில் மீண்டும் இயற்றப்பட்டன. இவற்றை இந்துக்களின் புனித பனுவல்களாக மாற்றும் முயற்சியாக இந்துப் பிரிவுகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் அனைத்தும் விரிவான முறையில் சேர்க்கப்பட்டன. அரச வாரிசுகள் யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டன. காலம் காலமாக மக்களின் நினைவுகளின் ஊடாக நிலைத்து வந்த படைப்புகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. இவ்வாறாக மக்களின் கடந்த காலம் பிராமணிய விளக்கங்களுடன் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் மெருகேறிச் செம்மையடைந்து தமது இறுதி வடிவினைப் பெற்றன.

பதினெட்டு முக்கிய புராணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகளில் பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம், சிவமகா புராணம், மார்கண்டேய புராணம், அக்னி புராணம், பவிஷ்ய புராணம், மத்ஸ்ய புராணம், ஸ்ரீமத்பகவத் புராணம் ஆகியன நன்கு அறியப்பட்டவையாகும்.

 

பௌத்த இலக்கியம்

தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன. பின்னர் சமஸ்கிருதக் கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன. ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் ஆவர். தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது. வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அரிய நூல்களை எழுதினர்.

 

சமண இலக்கியம்

சமணர்களின் மத நூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர்தான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. குறுகிய காலத்திலேயே சமண மதம் பல பெரிய அறிஞர்களை உருவாக்கிவிட்டது. இவர்களது முயற்சியால் சமணமதக் கோட்பாடுகளைப் பரப்பப் பல இந்து புராணங்களும், இதிகாசங்களும் சமண மதக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன. விமலா சமண இராமாயணத்தை எழுதினார். சித்தசேன திவாகரா சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.

 

சமயம் சாரா இலக்கியம்

சமுத்திரகுப்தர் கவிராஜா என்று புகழ்பெற்றவராவார். காளிதாசர், அமரசிம்மர், விசாகதத்தர், தன்வந்திரி போன்ற நவரத்தினங்கள் அவரது அவையை அலங்கரித்ததாகப் பரவலாக நம்பப்படுகிறது. காளிதாசர் இயற்கையை, அழகை எழுதிய கவிஞர். சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள். சூத்ரகர் (மிருச்சகடிகம்), விசாகதத்தர் (முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம்) ஆகியோர் படைப்புகள் வெளியாகின. அதேசமயம் அதிகம் புகழ்பெறாத நாடக ஆசிரியர்கள், கவிஞர்களின் படைப்புகளும் இலக்கிய, சமூக மதிப்பீடுகளுக்கு பங்காற்றின. இக்கால கட்டத்து நாடகங்களின் ஒரு சுவையான அம்சம் என்னவென்றால், நாடகத்தின் மேட்டுக்குடி கதாபாத்திரங்கள் சமஸ்கிருதத்தில் பேச, எளிய கதாபாத்திரங்கள் பிராகிருதத்தில் பேசுகின்றன.

பிராகிருத மொழியும் இலக்கியமும்

பிராகிருதத்திற்கு அரசவைக்கு வெளியே ஆதரவு இருந்தது. குப்தர் காலத்தில் பிராகிருத மொழியின் பல்வேறு வடிவங்கள் உருவாகின. மதுரா பகுதியில் சூரசேனி என்ற வடிவமும், அவுத், பண்டேல்கண்ட் பகுதிகளில் அர்த மகதி வடிவமும், நவீன பீகார் பகுதியில் மகதி வடிவமும் வழக்கத்தில் இருந்தன.

 

நாளந்தா பல்கலைக்கழகம்

மகாவிஹாரா என்று பெயர் பெற்ற நாளந்தா இந்தியாவின் பண்டைய மகதப் பேரரசில் (இன்றைய பிகார்) இருந்த மிகப் பெரிய பௌத்த மடாலயமாகும். இது பாட்னாவிற்குத் தென்மேற்கே சுமார் 95 கிமீ தூரத்தில் பீகார் ஷெரீப் நகரத்திற்கு அருகே உள்ளது. இது பொ.. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 1200 வரை புகழ்பெற்ற கல்விச்சாலையாக இருந்தது. இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் உலகின் தொன்மைச் சின்னமாகும்.

வேதக் கல்வியின் மிகவும் முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இந்தியாவின் தொடக்ககாலப் பல்கலைக்கழகங்கள் என்று குறிப்பிடப்படும் தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலா போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள் அமையத் தூண்டுகோலாக இருந்தன. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் குப்தப் பேரரசின் ஆதரவிலும், பின்னர் கன்னோசியின் பேரரசரான ஹர்ஷரின் ஆதரவிலும் செழித்தது. குப்தர் காலத்திலிருந்து தொடர்ந்த பரந்த மனப்பான்மை கொண்ட பண்பாட்டு மரபு ஒன்பதாம் நூற்றாண்டு வரை வளர்ச்சியும் செழுமையும் பெற உதவியது. அதன் பின் வந்த நூற்றாண்டுகளில் படிப்படியாகச் சரிவு ஏற்பட்டது. இக்காலத்தில் வங்கத்தின் பால வம்ச அரசர்களின் ஆதரவால் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பௌத்த மதம் புகழ்பெறத் துவங்கியது.

தனது உச்சபட்ச வளர்ச்சிக் காலத்தில் இப்பல்கலைக்கழகம் அண்மையிலிருந்தும், வெகு தொலைவிலிருந்தும் மாணவர்களை ஈர்த்தது. திபேத், சீனா, கொரியா, மத்திய ஆசியா போன்ற இடங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்தனர். இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் இப்பல்கலைக்கழகத்திற்கு இந்தோனேஷியாவின் சைலேந்திரா வம்சத்தோடு தொடர்பு இருந்தது தெரிய வருகின்றது. இவ்வம்சத்தின் அரசர் ஒருவர் இவ்வளாகத்தில் ஒரு மடாலயத்தைக் கட்டியுள்ளார்.


பொ.. 1200இல் தில்லி சுல்தானிய மம்லூக் வம்சத்தின் பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது. அதன்பின் மகாவிகாரம் சிறிது காலத்திற்கு சற்று தொலைவில் ஒரு தற்காலிக இடத்தில் தொடர்ந்து செயல்பட்டாலும், காலப்போக்கில் கைவிடப்பட்டு, மறக்கப்பட்டது என்று சில தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் தொல்லியல் துறை இப்பகுதியில் ஆய்வு நடத்திய போது தற்செயலாக இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. முறையான அகழ்வாய்வு 1915 இல் ஆரம்பித்தது. அப்போது 12 ஹெக்டேர் பரப்பில் (30 ஏக்கர்) அமைந்திருந்த பதினோரு மடாலயங்களும், ஆறு செங்கல் கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் ஏராளமான சிற்பங்கள், நாணயங்கள், முத்திரைகள், செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் அருகில் உள்ள நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நாளந்தா இன்று ஒரு மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ளது. பெளத்த சுற்றுலா வட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அண்மையில் இந்தியா மற்ற தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உதவியோடு இப்பல்கலைக்கழகத்தைப் புதுப்பித்துள்ளது.

 

குப்தர் கால அறிவியல்

 

கணிதமும், வானவியலும்

சுழியம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டுபிடித்தது, அதன்விளைவாக பதின்ம இலக்க முறை கண்டுபிடித்தது ஆகிய பெருமைகள் இக்காலகட்டத்தின் அறிவியலாளர்களையேச் சாரும். சூரிய சித்தாந்தா என்ற நூலில் ஆரியபட்டர் (பொ.. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி முதல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கம் வரை) சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார். பூமியின் சுற்றளவு குறித்த கணக்கீட்டில் ஆரியபட்டர் கணிப்பு நவீன மதிப்பீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது. பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் அவர்தான். கணிதம், கோணவியல், இயற்கணிதம் ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலை அவர் எழுதினார்.

வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும். பஞ்ச சித்தாந்திகா, பிருஹத் ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும். பிரம்மகுப்தர் (ஆறாம் நூற்றாண்டின் இறுதி , ஏழாம் நூற்றாண்டின் துவக்கம்) கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரும்மஸ்புத - சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

 

மருத்துவ அறிவியல்

மருந்துகள் தயாரிப்பதற்கு உலோகங்களைப் பயன்படுத்துதல், பாதசரம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது குப்தர் ஆட்சிக் காலகட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது. நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது. பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும். இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதைக் காட்டுகிறது.

Tags : The Guptas | History குப்தர் - வரலாறு.
11th History : Chapter 7 : The Guptas : Gupta's Cultural Florescence The Guptas | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர் : பண்பாட்டு மலர்ச்சி - குப்தர் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்