வரலாறு - குப்தர் | 11th History : Chapter 7 : The Guptas

   Posted On :  15.03.2022 10:30 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

குப்தர்

ஏறத்தாழ பொ.ஆ. 300 முதல் 700 வரையிலான காலகட்டம் அரசு அமைப்பில் ஒரு செவ்வியல் முறை தோன்றி பல பகுதிகளில் பேரரசர் ஆட்சி உருவாக வழிவகுத்த காலமாக இருந்தது.

குப்தர்

 

கற்றல் நோக்கங்கள்

இந்திய வரலாற்றில் குப்தர்கள் ஆட்சியின் முக்கியத்துவம் குறித்துக் கற்றல்

நில மானியமுறையின் முக்கியத்துவத்தையும், வேளாண்மை, பொருளாதாரம் மற்றும் அவைகளின் தாக்கத்தையும் புரிந்து கொள்ளல் அக்காலத்து மக்களின் சமூக - பொருளாதார வாழ்க்கை குறித்தும், சமூகத்தின் தன்மை குறித்தும் அறிதல்

அக்காலத்துப் பண்பாடு, கலை, கல்வி ஆகியவற்றின் வளர்ச்சி குறித்து அறிதல்.

 


அறிமுகம்

ஏறத்தாழ பொ.. 300 முதல் 700 வரையிலான காலகட்டம் அரசு அமைப்பில் ஒரு செவ்வியல் முறை தோன்றி பல பகுதிகளில் பேரரசர் ஆட்சி உருவாக வழிவகுத்த காலமாக இருந்தது. மௌரியப் பேரரசிற்குப் பின்னர், பல சிறு அரசுகள் தோன்றியவாறும் வீழ்ந்தவாறும் இருந்தன. குப்தர் அரசுதான் ஒரு பெரும் சக்தியாக உருவாகி, துணைக்கண்டத்தின் பெரிய பகுதியை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்தது.மத்தியில் ஒரு வலுவான அரசாக வலுப்பெற்றதால், பல அரசுகள் அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. இக்காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவம் ஒரு நிறுவனமாக வேரூன்றத் தொடங்கியது. செயல்திறன்மிக்க வணிகக் குழு முறை, கடல்கடந்த வாணிபம் ஆகியவற்றுடன் அதன் பொருளாதாரம் எழுச்சி கண்டது. இக்காலகட்டத்தில் சமஸ்கிருதத்தில் பல பெரிய படைப்புகள் தோன்றின. நுண்கலை, சிற்பம், கட்டிடக்கலை ஆகியவற்றில் பண்பாட்டு முதிர்ச்சி காணப்பட்டது

உயர் வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை உச்சத்தில் இருந்தது. கல்வி, கலை, அறிவியல் ஆகியவை சிறந்தோங்கி இருந்தாலும்கூட, இக்காலகட்ட ஆட்சியின் நிலப்பிரபுத்துவ குணம் காரணமாக மக்கள் துன்புற்றார்கள். குப்தர் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது ஏகாதிபத்திய வரலாற்றாளர்களின் கருத்துகளுக்கான தேசிய வரலாற்றாளர்களின் எதிர்வினை என்பதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனினும், இக்காலகட்டம் பண்பாட்டு மலர்ச்சியின் காலம், செவ்வியல் கலைகளின் காலம் என்பதைப் பல அறிஞர்களும் ஏற்கவே செய்கிறார்கள்.

வரலாற்றுச் சான்றுகள்

குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன.

1. இலக்கியச் சான்றுகள்

நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள்

அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்த காரின் நீதிசாரம் என்ற தரும் சாத்திரம் (பொ.. 400)

விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.

புத்த, சமண இலக்கியங்கள்

காளிதாசர் படைப்புகள்

இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி பாஹியான் குறிப்புகள்

2. கல்வெட்டுச் சான்றுகள்

மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு - முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.

அலகாபாத்தூண் கல்வெட்டு: சமுத்திரகுப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது. இதனைப் பொறித்தவர் ஹரிசேனர். இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.


3. நாணய ஆதாரங்கள்

குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தத் தங்க நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.

குப்தர் வம்சத்தின் தோற்றம்

குப்தர் வம்சத்தின் தோற்றம் குறித்த சான்றுகள் மிகவும் குறைவுதான். குப்த அரசர்கள் எளிய குடும்பத்திலிருந்து தான் உருவாகியிருக்க வேண்டும். குப்த வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரான முதலாம் சந்திர குப்தர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மணந்தார். இத்தகவலை அவரது பரம்பரையினர் மிகவும் பெருமையோடு பதிவு செய்திருப்பது இந்த அரச குடும்பத்துடனான தொடர்பு குப்தர்களின் எழுச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. லிச்சாவி என்பது வடக்கு பிகாரில் இருந்த பழமையான கண்சங்கமாகும். அது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதியாகும். சந்திர குப்தரின் ஒப்பற்ற புதல்வரான சமுத்திரகுப்தரின் பிரயாகை (இன்றைய அலகாபாத்) தூண் கல்வெட்டின்படி, அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார். கலிங்கம் வழியாகத் தெற்கே, பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரம் வரை வெற்றிகரமான படையெடுப்பை நடத்தினார். மகதம், அலகாபாத், அவுத் ஆகியவற்றை குப்தர்களின் பகுதிகளாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

Tags : History வரலாறு.
11th History : Chapter 7 : The Guptas : The Guptas History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர் : குப்தர் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்