தாவரவியல் - இருவிதையிலை, ஒருவிதையிலை தாவரங்களின் சிறப்பு பண்புகள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom
இருவிதையிலை, ஒருவிதையிலை தாவரங்களின் சிறப்பு பண்புகள்
இருவிதையிலை தாவரங்கள்
புற அமைப்பு சார் பண்புகள்
இலைகளில் வலைப்பின்னல் நரம்பமைப்பு உள்ளது. விதையில் இரண்டு விதையிலைகள் உள்ளன. முதன்மை வேரான முளைவேர் நிலைத்துக் காணப்பட்டு ஆணி வேராகிறது. மலர்கள் நான்கங்க அல்லது ஐந்தங்க வகையைச் சார்ந்தது. முக்குழியுடைய மகரந்தத்துக்கள் காணப்படுகிறது.
உள்ளமைப்பு சார் பண்புகள்
• வாஸ்குலக் கற்றைகள் தண்டில் வளையம் போன்று அமைந்துள்ளது.
• வாஸ்குலக் கற்றைகள் திறந்த வகையைச் சார்ந்தது. (கேம்பியம் உள்ளது).
• இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுகிறது.
ஒருவிதையிலைத் தாவரங்கள்
புற அமைப்பு சார்ந்த பண்புகள்
இலைகளில் இணைப்போக்கு நரம்பமைப்பு உள்ளது. விதைகளில் ஒருவிதையிலை உள்ளது. முளைவேர் நிலைத்துக் காணப்படுவதில்லை. சல்லி வேர் தொகுப்பு உள்ளது. மூவங்க மலர்கள் உள்ளது. ஒற்றைக்குழியுடைய மகரந்தத்துகள் காணப்படுகிறது.
உள்ளமைப்பு சார்ந்த பண்புகள்
• தண்டில் வாஸ்குலக் கற்றைகள் சிதறிக் காணப்படுகிறது.
• மூடிய வாஸ்குலக் கற்றைகள் (கேம்பியம் காணப்படுவதில்லை ).
• இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுவதில்லை.
அண்மைக்காலத்தில் முன்மொழியப்பட்ட மூடுவிதை தாவர இன வகைப்பாட்டியியலில், (Angiosperm Phylogeny Group (APG) Classification) இருவிதையிலை தாவரங்களை ஒற்றைப் பரிணாமக்குழுமத் தொகுப்பாகக் கருதவில்லை. ஆரம்பக்காலத்தில் இருவிதையிலையில் வகைப்படுத்தப்பட்ட தாவரங்கள் ஆரம்பகால மேக்னோலிட்கள் (Early Magnolids), உண்மை இருவிதையிலை (Eudicots) தாவரங்கள் எனும் பல்வேறு கிளைகளில் சிதறிக்காணப்படுகிறது.