Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | அங்காடிகளின் வகைகள்

பொருளாதாரம் - அங்காடிகளின் வகைகள் | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing

   Posted On :  27.07.2022 04:18 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்

அங்காடிகளின் வகைகள்

அங்காடிகள் பல வகைப்படும். அதன் வகைகளாவன

அங்காடிகளின் வகைகள்

அங்காடிகள் பல வகைப்படும். அதன் வகைகளாவன;


1. இடத்தின் அடிப்படையில்

அங்காடி அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து மட்டும் அல்ல, பொருளைப் பொறுத்தும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. 

1. உள்ளூர் அங்காடி

ஒரு பொருள் அல்லது பணி உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பரிமாற்றம் செய்வதை உள்ளூர் அங்காடி என்கிறோம். இத்தகைய அங்காடியில் விரைவில் அழியக்கூடிய மற்றும் சிறிது காலம் நிலைக்கக்கூடிய பொருள்கள் பரிமாற்றம் செய்யப்படும். உதாரணம்; காய்கறி, பழங்கள் போன்றன.

2. மாகாண அங்காடி

ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சில வகையான பொருள்கள் மற்றும் பணிகள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன. உதாரணமாக மாகாண அளவில் உள்ள செய்தித்தாள்கள்.

3. தேசிய அங்காடி

ஒரு நாடு முழுவதும் விற்கக்கூடிய மற்றும் வாங்க கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை கொண்ட சந்தையை தேசிய அங்காடி எனக் கூறுவோம். உதாரணமாக தேயிலை, காப்பித்தூள், சிமெண்ட், மின் சாதன பொருட்கள் மற்றும் அச்சடித்த புத்தகங்கள் போன்றவை நாடு முழுவதும் விற்கக்கூடிய பொருட்கள் ஆகும். 

4. பன்னாட்டு அங்காடி

பல்வேறு நாடுகளுக்கிடையே விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அங்காடி எனக் கூறுவோம். உதாரணமாக பெட்ரோல், தங்கம் ஆகியன.


2. காலத்தின் அடிப்படையில்

ஆல்ஃப்ரட் மார்ஷல், அங்காடியை காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார். காலம் என்பது உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய மாறாக்காரணிகள் மற்றும் மாறும்காரணிகளின் இயல்பை பொறுத்து வரையறுக்கப்படுகிறது. மேலும் பொருள்களின் விலை நிர்ணயத்தில், மாறுபடும் தேவை சூழ்நிலைக்கு ஏற்ப பொருளின் அளிப்பு எவ்வாறு ஈடுகட்டப்படுகிறது என்பதையும் காலத்தின் அடிப்படையிலான அங்காடி பகுப்பு விளக்குகிறது. 

1. மிகக் குறுகிய காலம் அல்லது அங்காடி காலம்

மிகக் குறுகிய காலத்தில் ஒரு பொருளின் அளிப்பின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. இக்காலத்தில் அளிப்பு வளைகோடு செங்குத்தாகவும், நெகிழ்ச்சியற்றதாகவும் இருக்கும். விலையை தீர்மானிப்பதில் அங்காடி சக்தியான, அளிப்பைகாட்டிலும் பொருளின் தேவை முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக வெள்ளம் வரும் சமயத்தில் உணவிற்கான அளிப்பு நெகிழ்ச்சியற்றதாக இருக்கும்போது, உணவிற்கான தேவை அதிகரிக்கும். உணவு பொருளின் விலையும் அதிகரிக்கும். 

2. குறுகிய கால அங்காடி

ஒரு பொருளுக்கான அளிப்பை குறிப்பிட்ட அளவில் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். (மிக குறுகிய காலத்தைவிட குறுகியகாலம் அளிப்பை அதிகரிப்பதற்கு சற்று வசதியானதாக இருக்கும்). அளிப்பு வளைகோடு சிறிது நெகிழ்ச்சி உடையதாக இருக்கும். இந்த வகை அங்காடியில் சில காரணிகள் மாறாக் காரணிகளாக இருக்கும். மேலும் இக்காரணிகளை தீவிரமாக பயன்படுத்தி அளிப்பை சிறிது கூட்டி, அதிகரித்த தேவையை ஈடு செய்ய முடியும்.

3. நீண்ட கால அங்காடி

பொருட்களின் அளிப்பை அதிகமான அளவில் அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும். அளிப்பு வளைகோடு அதிக அளவில் நெகிழ்ச்சியுடையதாக இருக்கும். அதிகரிக்கும் தேவையை ஈடு செய்ய, அனைத்துக் காரணிகளும் மாறும் காரணிகளாக இருக்கும். இங்கு மாறாக் காரணிகளே இருக்காது. இதனால் அளிப்பில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும். பொருட்களின் விலையும் குறுகிய காலத்தை போன்று மிக அதிகமாக இருக்காது. 

4. மிக நீண்ட காலம்

ஒரு நாட்டின் முழு பொருளாதாரமும் மிகப் பெரிய அளவில் மாற்றம் பெறும். புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு, நவீன நாகரிகத்திற்கு ஏற்றாற்போல் உற்பத்தி செய்யப்படும். பழைய மற்றும் அது சார்ந்த பொருட்கள் அங்காடியில் இருக்காது. உற்பத்தியில் பல புதிய உற்பத்தி முறைகள் அல்லது யுக்திகள் அறிமுகப்படுத்தப்படும்.

உதாரணமாக குறுந்தகடு (CD) அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒலிப்பதிவு நாடா பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. அதே போன்று தற்போது விரலி (Pen drive) பயன்பாட்டிற்கு வந்தவுடன் குறுந்தகடுகளின் பயன்பாடு குறைந்துவிட்டது.


3. பண்டத்தின் அளவின் அடிப்படையில்

1. மொத்த விற்பனை அங்காடி

பொருட்களை பெரிய அளவில் வாங்கி, விற்கும் இடத்தை மொத்த விற்பனை அங்காடி என்கிறோம் (துணி, மளிகைப் பொருட்கள் போன்றவை). பெரும்பாலும் பொருளின் விலை, சில்லரை அங்காடி விலையைவிட குறைவாக இருக்கும்.  

2. சில்லரை அங்காடி 

சிறிய அளவில் பொருட்களை வாங்கி விற்கும் இடத்தை சில்லரை அங்காடி என்கிறோம். (துணி, காய்கறிகள் சிறிய அளவில் வாங்குதல்).


4. போட்டியின் அடிப்படையில்

1. நிறைவுப்போட்டி அங்காடி 

2. நிறைகுறை போட்டி அங்காடி 

இதில் முற்றுரிமை, முற்றுரிமைப் போட்டி, இருவர் முற்றுரிமை, சில்லோர் முற்றுரிமை போன்ற அங்காடிகள் அடங்கும். 

நிறுவனம் மற்றும் தொழில் 

நிறுவனம்: ஒரு நிறுவனம் என்பது ஒரு தொழிலில் இருக்கும் ஒற்றை உற்பத்தி அலகாகும். பொருள் அல்லது பணியை உற்பத்தி செய்து அதற்கு விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதை நிறுவனம் என்கிறோம். நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவதாகும். நிறுவனத்தின் பிற நோக்கங்களை மேலாண்மை மற்றும் நிறுவனங்களின் போக்கு கோட்பாடுகள் விளக்கும். 

தொழில்: தொழில் என்பது ஒரு பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான பொருள் அல்லது பணியை உற்பத்தி செய்யக்கூடிய பல நிறுவனங்களின் தொகுப்பை அல்லது குழுவைக் குறிக்கும். உதாரணமாக சிமெண்ட் உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய தொகுப்பை சிமெண்ட் தொழில் என்கிறோம்.


Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 5 : Market Structure and Pricing : Classification of Markets Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் : அங்காடிகளின் வகைகள் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்