பொருளாதாரம் - நிறைவுப் போட்டி | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing
நிறைவுப் போட்டி
இது ஒரு கட்டுக்கோப்பான ஆனால் கற்பனை அங்காடியாகும். 100 சதவீத நிறைவுப் போட்டியைக் காண்பது அரிது. நிறைவு போட்டி அங்காடி எண்ணற்ற வாங்குபவர் மற்றும் எண்ணற்ற விற்பனையாளர்களைக் கொண்டுள்ளது. இங்கு ஓரியல்பான பண்டங்களை, ஒரே மாதிரியான விலையில் வாங்குவதும் விற்பதும் நடக்கும். இங்கு செயற்கையான தடை ஏதும் இல்லை அங்காடி பற்றி வாங்குவோரும், விற்போரும் முழுமையாக அறிந்திருப்பார்.
ஜோன் ராபின்சன் (Joan Robinson), "ஒவ்வொரு உற்பத்தியாளரின் உற்பத்தியும் முழு நெகிழ்ச்சியுடைய தேவையைக் கொண்டிருக்கும் நிலையையே நிறைவு போட்டி" என்று குறிப்பிடுகிறார்.
அ எண்ணற்ற வாங்குபவர் மற்றும் விற்போர்
எண்ணற்ற வாங்குவோர் என்பது அங்காடியில் உள்ள உற்பத்தி பொருட்களை ஒப்பிடும்போது ஒரு தனி நபர் வாங்கும் அளவு மிக மிக குறைவாக இருப்பதைக் குறிக்கும். இதன்படி பண்டத்திற்கான விலையை நிர்ணயிக்கும் சக்தியை ஒரு தனிநபர் பெற இயலாது. அவர் விலை ஏற்பவரே தவிர விலையைத் தீர்மானிப்பவர் அல்ல.
எண்ணற்ற விற்பவர் என்பது ஒவ்வொரு விற்பனையாளரின் உற்பத்தியும் மிக மிகக் குறைவாக இருக்கும் என்பதைக் குறிக்கும். எந்த ஒரு விற்பனையாளரும் விலையை நிர்ணயம் செய்யும் சக்தியைப் பெற்றிருக்கமாட்டார். வாங்குபவரைப் போன்றே விற்பனையாளரும் விலை ஏற்பவர் ஆவார்.விலையை உருவாக்குபவர் அல்ல.
ஆ ஓரியல்பான பண்டங்கள் மற்றும் ஒரே மாதிரியான விலை
வாங்கும் மற்றும் விற்கும் பண்டங்கள் ஒத்த தன்மையுடையவையாகவும் முற்றிலும் பதிலீட்டு பண்டங்களாகவும் இருக்கும். அனைத்து உற்பத்தி பண்டங்களும் அளவு, தரம், வடிவம் போன்ற அனைத்திலும் ஒரே மாதிரியானவை. எனவே அங்காடியில் ஒரே மாதிரியான விலை நிலவும்.
இ உட்புகுதல் மற்றும் வெளியேறுதலில் தடையில்லை
குறுகியகாலத்தில் ஒரு திறமையான உற்பத்தியாளர் குறைந்த செலவில் உற்பத்தி செய்து மிக அதிக இலாபம் பெறுவார். இந்த இலாபத்தைக் கண்டு அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாளர் தொழிற்சாலையில் நுழைவர். இதனால் அளிப்பு அதிகரித்து விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
செலவை குறைக்க இயலாத திறனற்ற உற்பத்தியாளர் இழப்பை அடைவார். இவ்வாறு இழப்பை அடையும் நிறுவனங்கள் அங்காடியை விட்டு வெளியேறும். இவ்வாறு நிகழ்ந்தால் அங்காடியில் அளிப்பு குறைந்து விலை மீண்டும் கூடும். இதனால் அங்காடியில் தொடர்ந்து இருக்கும் உற்பத்தியாளர்கள் இலாபம் அடைவர்.
ஈ போக்குவரத்து செலவு இல்லை
போக்குவரத்து செலவு இல்லாத காரணத்தினால் ஒரே மாதிரியான விலை நீடிக்கிறது.
உ உற்பத்தி காரணிகள் இடம் பெயரும்.
உற்பத்தி காரணிகள் முற்றிலும் இடம் பெயர்வதற்கும், ஒரு தொழிலிருந்து மற்றொரு தொழிலுக்கு மாறுவதற்கும் முழு சுதந்திரம் பெற்றுள்ளதால் விலையானது சரி செய்யப்படுகிறது.
ஊ அங்காடி நிலை பற்றி அறிந்திருப்பர்
அங்காடி மற்றும் பண்டத்தின் தரம் பற்றி அனைத்து வாங்குபவரும், விற்பவரும் நன்கு அறிவர்.
எ அரசின் தலையீடு இல்லை
மூலப்பொருள் அளிப்பு மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றில் அரசின் தலையீடு இல்லை.
குறுகிய காலத்தில் ஒரு சில காரணிகள் மட்டும் நிலையானவை. நிறைவு போட்டி அங்காடியின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், தொழிற்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட விலை (எ.கா. ₹10யை) ஏற்றுக் கொண்டு தங்கள் உற்பத்தியை அதற்கேற்றார் போல் அனுசரித்து செல்வர்.
SS – அங்காடி அளிப்பு DD – அங்காடித் தேவை
AR – சராசரி வருவாய் AC – சராசரி செலவு
MR – இறுதிநிலை வருவாய் MC – இறுதிநிலைச் செலவு
உதாரணம்.
Qd = 100 - 5P
Qs = 5p
சமநிலையில் Qd = Qs
Qd = தேவை
P = விலை
Qs= அளிப்பு
∴ 100 -5p = 5p
100 = 10p
P = 100/10 = 10
Qd = 100 - 5 (10)
100 – 50 = 50
QS = 5(10) = 50
∴ 50 = 50
வரைபடம் மூன்று பகுதிகளாகக் காட்டப்பட்டுள்ளது. முதல் பகுதியில் அனைத்து நிறுவனங்களின் தேவை மற்றும் அளிப்பு சக்திகள் சந்திக்கின்றன. இதில் நிலையான விலையாக ₹10 நிர்ணயிக்கப்படுகிறது. தொழிற்சாலையின் சமநிலை உற்பத்தி 50 அலகுகள் ஆகும்.
இரண்டாம் பகுதி வரைபடத்தில் AC கோடு, விலைக்கோட்டை விட குறைவாக உள்ளது. MC = MR நிலையில் சமநிலை அடைகிறது. சமநிலையில் உற்பத்தி அலகு 50 ஆகவும், விலை ₹10 ஆகவும், சராசரி செலவு ₹ 8 ஆகவும், சராசரி வருவாய் ₹10 ஆகவும் உள்ளது. உற்பத்தி பண்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் (₹ 10) நிறுவனம் மிகை இலாபம் அடைகிறது.
மொத்த வருவாய் : 50 x 10 = 500
மொத்த செலவு : 50 x 8 =400
ஃமொத்த இலாபம் : வருவாய் - செலவு
= 500 - 400 = +100
(+ என்றால் இலாபம்)
மூன்றாம் பகுதி வரைபடத்தில் நிறுவனத்தின் செலவு கோடு விலைக்கோட்டிற்கு மேலே உள்ளது. சமநிலைக்கான நிபந்தனை MR = MC ஆக உள்ளபோது நிறைவடைகிறது. ஏற்கனவே உள்ள அதே விலையில் (₹ 10), 50 பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அப்போது நிறுவனம் நட்டம் அடைகிறது. (AC > AR)
மொத்த வருவாய் : 50 x 10 = 500
மொத்த செலவு : 50 x 12 = 600
இலாபம் / நட்டம் : வருவாய் - செலவு
= 500 - 600 = - 100
(- என்றால் நட்டம்)
ஃ மொத்த நட்டம் : = 500 - 600 = - 100
தொழிற்சாலை இலாபம் ஈட்டும் பட்சத்தில் புதிய நிறுவனங்கள் உள்ளே வரும். அளிப்பின் அளவு அதிகரிக்கும். இதன் விளைவு பண்டத்தின் விலை குறையும். இதனால் மிகை இலாபம் மறையும்.
அங்காடியில் நட்டம் அடையும் பட்சத்தில் சில நிறுவனங்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேறும். இதனால் அளிப்பு குறைகிறது. இதனால் பண்டத்தின் விலை அதிகரிக்கும். இதனால் நட்டம் குறையும்.
நீண்டகாலத்தில் புதிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் நுழையவும், ஏற்கெனவே உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேறவும், மிக இலாபமும், நட்டமும் மறைந்து இயல்பு இலாபம் பெறும். இதன் வரைபடத்தை கீழே காணலாம்.
நீண்டகாலத்தில் எல்லா காரணிகளும் மாறும். LAC கோடானது உறைவடிவ வளை கோடாகும். இது சில குறுகிய கால சராசரி செலவு கோடுகளை உள்ளடக்கியது. இது தட்டையான U வடிவமாகும். இது திட்டவளைகோடு என்றும் அழைக்கப்படுகிறது. முதலாவதாக, அனைத்து நிறுவனங்களும் இயல்பு இலாபத்தையே பெறும்.
இரண்டாவதாக, அங்காடியில் அனைத்து நிறுவனங்களும் சமநிலையில் உள்ளதால், புதிய நிறுவனம் தொழிற்சாலையில் உள்ளே நுழையவோ அல்லது வெளியேறவோ சாத்தியமில்லை.
நீண்ட கால அளிப்புக் கோடு, தேவை அதிகரித்தபின், விலைத் தீர்மானித்தலை விளக்குகிறது. குறுகிய காலத்தில், தேவை அதிகரிப்பை புள்ளி a-யிலிருந்து b-க்கு இடம்பெயர்வதைக் கொண்டு அறியலாம். விலை ₹8 லிருந்து ₹13 ஆக அதிகரிக்கும்போது, அளிப்பானது 600 லிருந்து 800 அலகாக உயர்கிறது. அப்போது நிறுவனத்தின் பொருளாதார இலாபம் நேர்மறையாக உள்ளது. இதனால் புதிய நிறுவனங்கள் அங்காடியில் நுழைகின்றன. நீண்ட காலத்தில் விலை ₹11 ஆக குறையும் வரை நிறுவனங்கள் நுழையும். அப்போது அளிப்பானது 1200 அலகாக இருக்கும். நிறுவனத்தின் புதிய தேவைக்கோடும், அளிப்புக் கோடும் வெட்டுமிடமான c என்ற புள்ளியில் நிறுவனம் புதிய நீண்டகாலச் சமநிலையை அடைகிறது. குறைந்துசெல் விளைவு விதியின் காரணமாக, குறுகிய காலத்தில் அளிப்பை அதிகரிப்பது கடினம், எனவே கூடும் உற்பத்திச் செலவை ஈடுகட்ட விலை அதிகரிக்கும். புதிய நிறுவனங்கள் நுழைவதால் விலை மெல்ல ₹11க்கு குறையும், அப்போது பொருளாதார இலாபம் பூஜ்யமாக இருக்கும்.
நீண்டகாலத்திலும் நிறைவுப் போட்டியில் நிறுவனம் விலை ஏற்பவராகத் தான் இருக்கும், விலையை உருவாக்குபவராக இருக்காது. இது அதற்கான விலையை தொழிற்சாலையிலிருந்து பெறுகிறது மற்றும் செலவுக்கோடுகளை, வருவாய் கோட்டில் ஒன்றின்மீது ஒன்றாக இருக்கச் செய்கிறது.
நீண்டகாலச் சமநிலையை வரைபடம் 5.4 விளக்குகிறது. நிறைவு போட்டியில் நீண்டகால சமநிலை LAC-யில் E என்ற அடிமட்ட புள்ளியில் அமையும். LMC = MR = AR = LAC.
வரைபடம் 5.4-ல் சராசரி செலவும், சராசரி வருவாயும் சமமாகும். இறுதியில் நிறுவனம் E என்ற புள்ளியில் சமநிலை அடைந்திருக்கும் அப்போது விலை ரூபாய் 8- ஆகவும், உற்பத்தி = 500 அலகுகளாக (எண்ணிக்கை அனுமானிக்கப்பட்டவை) இருக்கும். இந்த புள்ளியில் நிறுவனம் இயல்பு இலாபம் ஈட்டும். ஆகவே நிறுவனத்தின் நீண்டகால சமநிலைக்கான நிபந்தனை கீழ்உள்ளவாறு அமையும்.
விலை = AR = MR = ACக் கோட்டின் குறைந்த பட்ச புள்ளி
இந்த சமநிலை புள்ளியில் SAC > LAC. மேலும் நீண்டகால சமநிலை விலை குறுகிய கால சமநிலை விலையைவிட குறைவாகும். நீண்டகால சமநிலை உற்பத்தி குறுகிய கால சமநிலை உற்பத்தியை விட அதிகமாகும்.