பொருளாதாரம் - முற்றுரிமை | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing
முற்றுரிமை
முற்றுரிமை என்னும் வார்த்தை mono மற்றும் poly -ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகள் இணைந்து உருவாக்கப்பட்ட ஆங்கில பதத்தின் தமிழ்ச் சொல் ஆகும். Mono என்ற சொல் ஒன்று (Single), poly என்ற சொல் விற்பதையும் குறிக்கும். இதன்படி முற்றுரிமை என்பது ஒரு பண்டத்தை அங்காடியில் ஒருவரே விற்பனை செய்வதாகும். ஆகவே போட்டிக்கான வாய்ப்பில்லை. (ஆனாலும் அங்கு உள்ளார்ந்த பயமுறுத்தல் (Potential Threat) இருந்து கொண்டிருக்கும் என சில பொருளியலாளர்கள் கூறுகின்றனர்).
முற்றுரிமையில் ஒரு விற்பனையாளர் ஒரே தன்மையான பொருளை விற்பனை செய்வதால் புது நிறுவனங்கள் உள்ளே நுழைவதற்கு தடைகள் உள்ளன. சுருக்கமாக முற்றுரிமை என்பது அங்காடியில் ஒரு குறிப்பிட்ட பண்டத்தை ஒருவரே விற்பனை செய்வதாகும். இந்த பண்டத்திற்கு இணையான பதிலீட்டு பண்டம் கிடையாது. நிதர்சனமான உலகில் முழு அளவு முற்றுரிமையைக் காண்பது அரிது.
1. ஒரே ஒரு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்.
2. முற்றுரிமை பண்டத்திற்கு நெருங்கிய பதிலீட்டு பண்டம் இல்லை.
3. புது நிறுவனங்கள் உள்ளே நுழைய தடை உள்ளது அல்லது நுழைவது கடினம்.
4. முற்றுரிமையாளர் விலையை நிர்ணயிப்பவர்.
5. முற்றுரிமையாளர் மிகை இலாபம் பெறுவார்.
சில கச்சாப்பொருட்கள் இயற்கையிலேயே சிலருக்கு முற்றுரிமையைத் தருகிறது. (எ.கா. தங்கச்சுரங்கம் (ஆப்பிரிக்கா), நிலக்கரி, நிக்கல் (கனடா).
சில குறிப்பிட்ட பணிகளை அரசு ஏகபோகமாக எடுத்து நடத்துகிறது. (எ.கா. இந்திய ரயில்வே)
ஒரு முற்றுரிமை நிறுவனம் சில பண்டங்களை வடிவமைத்து அரசிடம் இருந்து வடிவமைப்பு உரிமையையும், வர்த்தக குறியீட்டையும் பெற்றுக் கொள்ளலாம். மற்ற நிறுவனங்கள் அவற்றை அப்படியே விற்பது சட்டப்படி குற்றமாகும்.
முற்றுரிமையில் நிறுவனமே தொழிற்சாலையாகும். அதனால் முற்றுரிமை நிறுவனம் கீழ்நோக்கி சரியும் தேவை வளைகோட்டை கொண்டுள்ளது. (அதாவது AR கோடு) ஏனெனில் விலையைக் குறைத்தால் மட்டுமே அதிகம் விற்க முடியும். இறுதிநிலை வருவாய் வளைகோடு (MR), AR வளைகோட்டிற்கு கீழ் அமைந்துள்ளது (MR < AR).
ஒரு முற்றுரிமையாளர் இறுதிநிலைச் செலவைவிட இறுதிநிலை வருவாய் அதிகமாக இருக்கும் வரை (MR > MC) தொடர்ந்து உற்பத்தி செய்து விற்கின்றார். அவரது சமநிலை உற்பத்தியானது MC = MR. இந்த புள்ளிக்கு மேல் உற்பத்தியாளர் தனக்கு நட்டம் ஏற்படும் என்பதை எதிர்பார்த்து விற்பனையை நிறுத்திக் கொள்வார்.
மேற்காணும் வரைபடத்தின்படி 3 அலகு உற்பத்தி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது MR, MCயை விட அதிகமாக இருக்கும் வரை உற்பத்தி நடக்கும். முற்றுரிமை (நிறுவனம் சமநிலை MR = MC ஆக இருக்கும்வரை உற்பத்தியை மேற்கொள்ளும்). அப்போது விலை ₹23/- ஆக உள்ளது.
சமநிலை உற்பத்தியில் ஒரு முற்றுரிமை நிறுவனம் எவ்வாறு இலாபம் பெறுகிறது என்பதை பார்க்க சராசரி வருவாய் கோடு மற்றும் சராசரி செலவுக் கோட்டை பயன்படுத்தலாம். எடுத்துக்கொண்ட உற்பத்தியான 3 அலகிற்கு சராசரி வருவாய் ₹23/- ஆகும்.
சராசரி செலவு = ₹ 12.67
ஃ (23-12.67=10.33) ஓர் அலகிற்கான இலாபம்.
மொத்த இலாபம் = (சராசரி வருவாய் - சராசரி செலவு) x மொத்த உற்பத்தி
= (23-12.67) x 3
= 10.33 x 3 = ₹ 30.99
விலைபேதம் காட்டும் முற்றுரிமை என்பது ஒரு பொருளுக்கு பல்வேறு வாடிக்கையாளரிடம் பல்வேறு விலையைப் பெறுவதாகும். விலையைப் பற்றிக் கண்டுக்கொள்ளாத நுகர்வோரிடம் அதிக விலை வசூலிக்கப்படும். விலையைப் பற்றி கவனமாக இருக்கும் நுகர்வோருக்கு குறைவான விலை நிர்ணயிக்கப்படும்.
விலைபேதம் காட்டுதல் மூன்று வகைப்படும்.
(i) தனிநபர் பேதம்
பலவிதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது (உதாரணம். இரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிப்பது).
(ii) இட பேதம்
ஒரே பொருளுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு விலைகளை நிர்ணயித்தல். (உதாரணம்: ஒரு புத்தகத்திற்கு இந்தியாவிற்குள் ஒரு விலையும், அதே புத்தகத்திற்கு வெளிநாடுகளில் வேறு விலையும் பெறுவது). இதனடிப்படையில்தான் சீனா தன் பொருள்களுக்கு குறைவான விலை நிர்ணயித்து, இந்தியச் சந்தையில் குவித்து, இந்தியத் தொழில்களான கடிகாரம் மற்றும் பொம்மை தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன.
(iii) பயன் அடிப்படையில் பேதம்
ஒரு பண்டத்தின் பயனின் அடிப்படையில் பல்வேறு விலைகள் பெறுதல். (உதாரணம். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வை வீட்டிற்கு பயன்படுத்தினால் குறைந்த விலையும், அதே மின்சாரத்தை கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தினால் அதிக விலையும் வசூலிக்கின்றது).
விலை பேதம் காட்டுதல் எல்லா முற்றுரிமை அங்காடிகளிலும் பரவியிருக்கிறது. A.C.பிகு (Pigou) கூற்றுப்படி, மூன்று வகையான பேதம் காட்டுதல் உள்ளது.
வாங்குபவர் அதிகபட்சமாக எவ்வளவு விலையை தர முன்வருவாரோ அந்த விலையை அவரிடம் வசூலித்து விடுவதுதான் முதல் நிலை விலை பேதம் ஆகும். இது முழு பேதம் காட்டுதல் எனப்படும். இந்த விலை நுகர்வோர் எச்சத்தை முற்றிலுமாக எடுத்துவிடும். இது நுகர்வோரை அதிகபட்ச சுரண்டலைக் குறிக்கும்.
இதனை 'முழு நிறைவு பேதம் காட்டும்' முற்றுரிமை என ஜோன் ராபின்சன் (Joan Robinson) குறிப்பிடுகிறார்.
நுகர்வோர் உபரியில் ஒரு பகுதியை மட்டும் விற்பனையாளர் உறிஞ்சினால் அது இரண்டாம் நிலை விலை பேதம் ஆகும். ஜோன் ராபின்சன் (Joan Robinson) இதை "நிறைகுறை பேதம் காட்டும் முற்றுரிமை" என அழைக்கிறார். இதன்படி, வாங்குபவர் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு குழுவிடம் இருந்து பல்வேறு விலைகள் வசூலிக்கப்படும்.
உதாரணம், திரையரங்குகளில் ஒரே படத்திற்கு பல்வேறு வகுப்புகளுக்கு பல்வேறு விலை வசூலித்தல். திரையரங்குகளில் முதல் வகுப்பின் முதல் வரிசைக்கும் இரண்டாம் வகுப்பின் கடைசி வரிசைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை . ஆனால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணத்திற்குள் மிகுந்த வேறுபாடு உள்ளது.
முற்றுரிமையாளர் அங்காடியை துணை அங்காடிகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான விலையை பெறுவர். இதில் குழுக்கள் வயது, இனம் மற்றும் இடத்தைப் பொறுத்து பிரிக்கப்படுகின்றன.
உதாரணம். இரயிலில் பயணகட்டணம் முதியவர்களிடம் குறைவாக பெறப்படுகிறது. மாணவர்களுக்கு பொருட்காட்சி மற்றும் கண்காட்சிகளுக்கு கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
குவித்தல் என்றால் ஒரு முற்றுரிமையாளர் தனது உற்பத்தி பண்டத்திற்கு உள்ளூர் அங்காடியில் அதிக விலையும், வெளியூர் அங்காடியில் குறைந்த விலையும் நிர்ணயிப்பது ஆகும். இதனால் ஒரு நாடு (உ.ம்.சீனா ) தன்னுடைய உற்பத்தியை அடுத்த நாடுகளுக்கு (உ.ம்.இந்தியா) விரிவுபடுத்துவதாகும். இது “பன்னாட்டு விலைபேதம்” காட்டுதல் எனப்படும். இதனால் இந்தியத் தொழில்கள் நசுங்கும். உதாரணமாக இந்தியாவில் மின்னணு சாதன அங்காடி சீனாவின் மின்னணுப் பொருட்களால் நிரப்பப்பட்டுள்ளது.