பொருளாதாரம் - முற்றுரிமை போட்டி | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing
முற்றுரிமை போட்டி
முற்றுரிமைப் போட்டியில் பல நிறுவனங்கள் வேறுபடுத்தப்பட்ட பண்டங்களை உற்பத்தி செய்து விற்பார்கள். ஒரே உபயோகத்திற்கான பண்டங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கிடையே போட்டி நிலவும், ஆனால் நிறைகுறையாக இருக்கும். எந்த ஒரு விற்பனையாளரும் விலையிலோ அல்லது உற்பத்தியிலோ வேறு நிறுவனத்தை ஆதிக்கம் செலுத்த இயலாது. எனவே முற்றுரிமைப் போட்டி என்பது எண்ணற்ற நிறுவனங்கள் பதிலீடு உடைய பண்டங்களை (நிறைவான பதலீடு அல்ல) விற்பதைக் குறிக்கும்.
முற்றுரிமை போட்டியின் முக்கிய இயல்புகள்
1. எண்ணற்ற வாங்குவோர், மற்றும் விற்போர்.
2. நிறுவனங்கள் விலை நிர்ணயிக்க முடியுமாதலால் அவர்களே தங்கள் பண்டத்திற்கு விலை நிர்ணயிப்பர்.
3. நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த பண்டங்களை மற்றவர்களின் பண்டங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்ட முயற்சிப்பதே முற்றுரிமைப்போட்டியின் முக்கிய அம்சமாகும்.
4. தொழிலில் உள்ளே நுழைய மற்றும் வெளியேற நிறுவனங்களுக்குத் தடையில்லை.
5. ஒவ்வொரு நிறுவனமும் தன் உற்பத்தி பண்டத்தின் விற்பனையை அதிகரிக்க அதிக விற்பனை செலவை (Selling cost) மேற்கொள்கிறது.
6. விலையில்லா போட்டி (Non price competition). ஒவ்வொரு நிறுவனமும் சுதந்திரமான விலைக் கொள்கையை பின்பற்றும்.
முற்றுரிமை போட்டி அங்காடியில் விற்பனையாளர்கள் இலாபத்தை உச்சப்படுத்துவதற்காக MR வளைகோடு MC வளைகோட்டின் மேல் இருக்கும்வரை உற்பத்தியை அதிகப்படுத்துவார். இந்நிலை தொடர்ந்து MC = MR ஆகும் வரை விற்பனை தொடரும்.
முற்றுரிமை போட்டி அங்காடியில்
1. தேவைக்கோடானது கீழ்நோக்கி சரிந்து செல்லும்.
2. ஒன்றுக்கொன்று நெருங்கிய பதிலீட்டு பண்டங்கள் இருக்கும்.
3. தேவை கோடு (சராசரி வருவாய் கோடு) நெகிழ்ச்சி உடையது.
முற்றுரிமைப் போட்டி வேறுபாடுடைய பண்டங்களை வேறுபட்ட விலையில் விற்பனை செய்வதைக் குறிக்கும். ஒவ்வொரு நிறுவனமும் கீழ்கண்டவற்றை சரிசெய்து சமநிலையை ஏற்படுத்தும். 1. விலை மற்றும் வெளியீடு 2. தயாரிப்பை சரிசெய்தல் 3. விற்பனைச் செலவை சரிசெய்தல்
குறுகிய கால சமநிலை
எப்படி ஒரு முற்றுரிமைப் போட்டி நிறுவனம் விலை மற்றும் உற்பத்திக்கிடையே சமநிலையை அடைகிறது? MC = MR ஆக இருக்கும்பொழுது இலாபம் உச்சமாக இருக்கும்.
வரைபடம் 5.7 OM என்பது சமநிலை உற்பத்தி, OP என்பது சமநிலை விலை, மொத்த வருவாய் 'OMQP', மொத்த செலவு 'OMRS'. எனவே, மொத்த இலாபம் 'PQRS'. இது குறுகிய காலத்தில் கிடைக்கும் அபரிமிதமான இலாபம் ஆகும்.
ஆனால் வேறுபட்ட வருவாய் மற்றும் செலவு நிலைகளில் முற்றுரிமைப்போட்டி நிறுவனம் நட்டமும் அடையலாம்.
மேற்காண் வரைபடத்தில் AR மற்றும் MR கோடுகள் அதிக நெகிழ்ச்சியுடன் காணப்படுகின்றது. Eஎன்ற புள்ளியில் சமநிலை, அதாவது அங்கு MC = MR ஆகவும் மற்றும் MC கோடு, MR கோட்டை கீழிலிருந்து மேலாகவும் வெட்டுகிறது. அப்போது சமநிலை உற்பத்தி OM ஆகவும், சமநிலை விலை OP ஆகவும் உள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் 'OMQP' நிறுவனத்தின் மொத்த செலவு 'OMLK'. எனவே மொத்த நஷ்டம் PQLK. இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் நட்டத்தை அடைந்திருக்கிறது.
நிறுவனம் மற்றம் குழுக்களின் நீண்டகால சமநிலை மற்றும் முழுச்சமநிலை
குறுகிய காலத்தில் முற்றுரிமை போட்டி நிறுவனம் அபரிமிதமான இலாபம் அல்லது நட்டம் பெறும். ஆனால் நீண்டகாலத்தில் தொழிலில் புதிய நிறுவனங்கள் உள்ளே வருவதால் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் பெற்ற அபரிமிதமான இலாபம் துடைத்தெடுக்கப்படும். எனவே புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைவதாலும், நட்டமடைந்த நிறுவனங்கள் வெளியேறுவதாலும் இயல்பு இலாபமே கிடைக்கும்.
நீண்டகாலத்தில் நெருங்கிய பதிலீட்டு பண்டங்கள் கிடைப்பதால் AR கோடு அதிக நெகிழ்ச்சி உள்ளதாக அல்லது தட்டையாக இருக்கும்.
வரைபடத்தில் சமநிலையானது E என்ற புள்ளியில் ஏற்படும். அப்போது
OM - சமநிலை உற்பத்தி
OP - சமநிலை விலை
OPஅல்லது MQ - சராசரி வருவாய்
MF = வீணாக்கப்பட்ட சக்தி
MQ அல்லது OP சராசரி செலவு ஆகவும் இருக்கும்.எனவே நீண்டகாலத்தில் முற்றுரிமை போட்டியில் நிறுவனம் AR = AC மற்றும் MC = MR ஆக உள்ளபோது சமநிலையை அடையும். இது நிறுவனம் இயல்பு லாபம் அடைவதைக் குறிக்கும். AR கோடு நீண்டகால சராசரி செலவு கோட்டிற்கு (LAC) தொடுகோடாக Q புள்ளியில் அமையும்.
குறுகிய கால சமநிலைக்கு ஒரே நிபந்தனை : MC = MR
நீண்ட காலசமநிலைக்கு இரண்டு நிபந்தனைகள் : MC = MR மற்றும்
AC = AR
பொதுவாக முற்றுரிமை போட்டியில் 5 வகை வீண் செலவுகள் காணப்படுகின்றன.
1. வீணாக்கப்பட்ட சக்தி: வீணாக்கப்பட்ட சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும், உண்மை அளவு உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும். நீண்டகாலத்தில் நிறுவனங்கள் குறைந்தளவு சராசரிச் செலவு இருந்தாலும், உத்தம அளவு உற்பத்தியைவிட வேண்டுமென்றே குறைந்த அளவு உற்பத்தி செய்கின்றன. இவ்வாறான, செயல் பற்றாக்குறையை ஏற்படுத்தி விலையை உயாத்துகிறது. முற்றுரிமை போட்டியில் இந்த அளவு சக்தி வீணாக்கப்படுவதாகவே கருதப்படுகிறது. வரைபடம் 5.9- ல் MF அளவு உற்பத்தி வீணாக்கப்பட்ட சக்தியாகும். OF அளவு உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் சமுதாயத்திற்கு அதிக பண்டங்கள் குறைந்த விலையில் கிடைக்கப்பட்டிருக்கும்.
2. வேலையின்மை : முற்றுரிமையளர் போட்டியில் நிறுவனங்கள் உத்தம உற்பத்தி அளவைவிட குறைவாக உற்பத்தி செய்வதால் வளங்களை முழுமையாக பயன்படுத்துவதில்லை. எனவே உற்பத்தி திறன் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் மனிதர்களுக்கு வேலையின்மை ஏற்படுகிது.
3. விளம்பரம்: முற்றுரிமை போட்டியில் போட்டியின் காரணத்தினால் விளம்பரத்திற்காக அதிகப் பணம் செலவிடப்படுகிறது. வீண் விளம்பரங்களினால் நுகர்வோருக்கு விலை அதிகரிக்கிறது.விளம்பரங்களில் உண்மையற்ற தகவல் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதும் நடக்கிறது.
4. பல்வேறுவிதமான பண்டங்கள்:
முற்றுரிமை போட்டியில் ஒரே பயனுக்கு பல்வேறு விதமான பண்டங்களை அறிமுகப்படுத்துவது மற்றொரு வீண் செலவாகும். பண்ட அளவு, வடிவம், பாணி மற்றும் வண்ணத்தால் வேறுபடுத்தப்படுகிறது. குறிப்பிட்ட வகையான பண்டமே போதுமானதாக உள்ளது. மேலும் சிலவகையில் அதிக அளவு பொருட்களை உற்பத்தி செய்தால் ஒவ்வொரு பண்ட உற்பத்திக்கான செலவு குறைவாக இருக்கும். ஆனால் இங்கு பலவகையான பண்டங்கள் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
5. செயல்திறன் குறைந்த நிறுவனங்கள்: முற்றுரிமை போட்டியில் சில செயல்திறன் குறைந்த நிறுவனங்கள் தமது இறுதிநிலைச் செலவை விட அதிக விலை வசூலிக்கின்றனர். இத்தகைய நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் நுகர்வோர் பெரும்பாலும் உணர்ச்சி தூண்டுதலால் இத்தகைய நிறுவனப் பொருட்களை வாங்குவதால், திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை. மேலும் திறமையான நிறுவனங்கள் நுகர்வோரைக் கவரும் வகையில் விளம்பரம் செய்ய போதிய அளவு செலவு செய்வதில்லை இதனால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை . 2017ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற ரிச்சார்டு தேலார் (Richard Theiler) குறிப்பிட்டதைப் போல நுகர்வோர் உணர்ச்சி வயப்பட்டவர்களாக இருக்கிறார்களே அன்றி பகுத்தறிந்து செயல்படுவதில்லை. பகுத்தறிவான முடிவுகளை மேற்கொள்ளச் செய்வது மனமாகும்; உணர்ச்சி வயப்பட்ட முடிவுகளை மேற்கொள்ளக் காரணமாக இருப்பது இதயமாகும்.
வாங்குவோர் முற்றுரிமை (Monopsony)
ஓர் அங்காடி அமைப்பில் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்க ஒருவரே இருந்தால் அது வாங்குவோர் முற்றுரிமை எனப்படும். சில பண்டங்களுக்கு ஒருவரே வாடிக்கையாளராக இருப்பதால் அந்த அங்காடியில் வாங்குபவர்மிகுந்த சக்தியுடன் காணப்படுவார். முற்றுரிமையும், வாங்குபவர் முற்றுரிமையும் ஓரே போல் இருந்தாலும், வாங்கும் முற்றுரிமையாளர் அங்காடியின் தேவைப் பக்கத்திலும், முற்றுரிமையாளார் அங்காடியில் அளிப்புப் பக்கத்திலும் ஆதிக்கத்துடன் இருப்பர்.
இருமுக முற்றுரிமை (Bilateral Monopoly)
இருமுக முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் (முற்றுரிமையாளர்) மற்றும் ஒரு வாங்குபவர் (வாங்கும் முற்றுரிமையாளர்) மட்டும் இருப்பர்.