அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நகரமயமாதலின் விளைவுகள் | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation
நகரமயமாதலின்
விளைவுகள்
அ. குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள்
நகர்ப்புற
பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பதால் குடியிருப்புகளுக்கான இடம் பற்றாக்குறை மற்றும்
குறிப்பிடத்தக்க அளவு தரமற்ற குடியிருப்புகள் உருவாக காரணமாகின்றன. இப்பிரச்சனைகள்
வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. விரைவான நகரமயமாக்கலால்
குடிசைப் பகுதிகள் அதிக அளவில் உருவாகின்றன.
ஆ. மக்கள் நெரிசல்
நகர்ப்புற
பகுதிகளில் அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு வழி வகுக்கிறது.
இது பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்குக் காரணமாகிறது.
இ. தண்ணீர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம்
உலகின்
எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதுக்கும் தேவையான அளவிற்கு முறையாக நீர் விநியோகம்
செய்யப்படுவதில்லை . கழிவுநீர் வடிகால் அமைப்பு மோசமான நிலையில் உள்ளது. நகர்ப்புற
மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் குப்பைகளை அகற்றுதல் பெரும் சவாலான பணியாக உள்ளது.
ஈ. போக்குவரத்து மற்றும் நெரிசல்
பல நகரங்களில்
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போதுமான திட்டங்கள் இல்லாமை மற்றும் போதுமான போக்குவரத்து
கட்டமைப்புகள் இல்லாமை, நகர்ப்புற பகுதிகளில் காணப்படும் பெரும் பிரச்சனையாகும். இரு
சக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல்
மிகுந்து காணப்படுகிறது. வாகனப் பெருக்கம், காற்று மாசு அடைய காரணமாகின்றன.
உ மாசடைதல்
சுற்றுச்சூழல்
மாசடைவதற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்கள் முக்கியமான காரணிகளாகும். நகரங்களில் இருந்து
வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத
கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர் நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள
தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.