அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இடம் பெயர்வின் வகைகள் | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation
இடம் பெயர்வின்
வகைகள்
இடம்
பெயர்வைப் பல வழிகளில் வகைப்படுத்தலாம். இவை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.
உங்களுக்குத் தெரியுமா
2017ஆம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் இந்தியா மிகப் பெரிய நாடாகவும்
(17 மில்லியன்) இதைத் தொடர்ந்து மெக்சிகோவும் (13 மில்லியன்) உள்ளன. (ஆதாரம்: சர்வதேச
புலம்பெயர்ந்தோர் அறிக்கை, 2017)
1. நிர்வாக எல்லை
அடிப்படையில் இடம் பெயர்வுகள்
அ. உள்நாட்டு இடம் பெயர்வு
ஒரு நாட்டின்
எல்லைக்குள் நிகழும் மக்களின் இடப்பெயர்வானது உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படுகிறது.
மேலும் உள்நாட்டு இடம் பெயர்வு என்பது இடம் பெயர்வு தொடங்கும் இடம், இடம் பெயர்வோர்
சேருமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
1. ஊரகத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி இடம்
பெயர்தல்
இவ்வகையில்
மக்கள் ஊரகப் பகுதியிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு முக்கியமாக
வேலைவாய்ப்பு , கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிக்காக இடம் பெயர்கிறார்கள்.
2. நகரத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்தல்
இவ்வகை
இடம்பெயர்வானது ஒரு நகர்ப் பகுதியிலிருந்து மற்றொரு நகர்ப்பகுதிக்கு அதிக வருவாய் பெறும்
பொருட்டு இடம் பெயர்கிறார்கள்.
3. ஊரகத்தில் இருந்து ஊரகத்திற்கு இடம் பெயர்தல்
சாகுபடிக்கு
ஏற்ற வளமான நிலம் மற்றும் பிற சமூக காரணிகளான திருமணம் போன்றவை இவ்வகை இடம்பெயர்தலைத்
தீர்மானிக்கின்றன.
4. நகர்ப்புறத்திலிருந்து ஊரக பகுதிக்கு இடம்
பெயர்தல்
நகர்ப்புற
பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பூர்வீக
இடங்களுக்கு திரும்புவதற்கும் மக்கள் நகர்புறத்திலிருந்து ஊரகப்பகுதிகளுக்கு இடம் பெயர்கிறார்கள்.
மேற்கூறிய
நான்கு வகைகளில் ஊரகப் பகுதியிலிருந்து நகர்புறத்தை நோக்கி இடம் பெயர்தல் அதிகம் நடைபெறக்கூடிய
ஒன்றாகும்.
ஆ. சர்வதேச இடம் பெயர்வு
ஒரு நாட்டின்
எல்லைகளைக் கடந்து நடக்கும் இடம் பெயர்தல் சர்வதேச இடம்பெயர்தல் என்று அழைக்கப்படுகிறது.
II. இடம் பெயர்பவரின்
விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல்
1. தன்னார்வ இடம் பெயர்வு
தனி நபர்களின்
விருப்பத்தின் பேரிலும், முயற்சி மற்றும் முன்னெடுத்தலின் மூலம் தங்களுடைய பொருளாதார
நிலையை உயர்த்துவதற்கும் வசதியான இடத்தில் வாழ வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலும்
நடைபெறும் இடம்பெயர்தல் தன்னார்வ இடம் பெயர்வு எனப்படுகிறது.
2. தன்னார்வமில்லா (அ) கட்டாய இடம் பெயர்வு
மக்களின்
விருப்பத்திற்கு மாறாக இடம்பெயர்வு நடைபெறுமாயின் அது அனிச்சையான இடம்பெயர்வு என அழைக்கப்படுகிறது.
போர் போன்ற உந்து காரணியால் மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் குடிபெயர்தல்
இவ்வகையைச் சார்ந்ததாகும்.
III. இடம் பெயர்ந்த
இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம் பெயர்தல்.
1. குறுகிய கால இடம் பெயர்வு
இந்த
வகையான இடம் பெயர்வுகளில் குடியேறுபவர்கள் பூர்வீக இடத்திற்கு திரும்புவதற்கு முன்
குறுகிய காலம் மட்டுமே குடிபெயர்ந்த இடத்தில் தங்குவர். இந்த இடம் பெயர்வு சில நாட்கள்
முதல் சில மாதங்கள் வரை மட்டுமே இருக்கும்.
2. நீண்டகால இடம் பெயர்வு
இவ்வகையான
இடம்பெயர்வு குடியேறுபவர்கள் குறைந்த சில வருடங்களாவது குடியேறிய இடத்தில் தங்கி இருப்பார்கள்.
மண்டல வாரியான உலக மக்கட்தொகை பங்கு மற்றும் சர்வதேச இடம் பெயர்வு - 2017
3. பருவகால இடம் பெயர்வு
இவ்வகையான
இடம்பெயர்வில் பொதுவாக மக்களில் ஒரு குழுவினர் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தின் போது
தன் பூர்வீக இடங்களிலிருந்து குடிப்பெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி
விடுவர். கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்குக் குடியேறும் மக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள்
பயிர் விதைக்கும் பருவங்களில் இடம் பெயர்வது இவ் வகையைச் சார்ந்ததாகும். மந்தை இடமாற்றம்
(Transhumance) என்பது மக்கள் கால்நடையுடன் இடம் பெயர்தலாகும். இதுவும் இவ்வகையைச்
சார்ந்ததாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
சமீப காலங்களில் சர்வதேச அளவில் புலம் பெயர்வோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2000இல் 173 மில்லியன்களாக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010இல் 220 மில்லியன்களாகவும் 2017இல் 258 மில்லியன்களாகவும் அதிகரித்துள்ளது. (ஆதாரம்: சர்வதேச புலம் பெயர்ந்தோர் அறிக்கை , 2017)