அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation
அலகு - 4
இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
கற்றலின்
நோக்கங்கள்
>இடம் பெயர்தலின் பொருள், காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி கற்றறிதல்
>இடம் பெயர்தலின் வகைகளைத் தெரிந்து கொள்ளல்
>நகரமயமாக்கலின் கருத்தாக்கத்தை விவரித்தல்
>நகரமயமாக்கலின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி கற்றல்
>நகரமயமாதலின் சவால்களைப் புரிந்து கொள்ளல்
அறிமுகம்
இராஜேஷ்
மற்றும் சுரேஷ் ஆகியோர் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள். அவர்களுக்கு எட்டாம்
வகுப்பு 'அ' பிரிவு ஒதுக்கப்பட்டது. வகுப்பாசிரியர் மற்றும் மற்ற மாணவர்கள் அவர்களை
வகுப்பறைக்குள் வரவேற்றனர். இன்று இரண்டு புதிய நண்பர்களைப் பெறப்போகிறீர்கள்"
என ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் கூறினார். அடுத்து "நீங்கள் அனைவரும் உங்கள் பெயர்,
ஊர், எங்கிருந்து வருகிறீர்கள்? எனக் கூறி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்"
என்று கூறினார். அவர்கள் முதல் வரிசை இருக்கையிலிருந்து அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தனர்.
இராஜேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் இரண்டாவது வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தனர். இராஜேஷின்
முறை வந்த பொழுது என் பெயர் இராஜேஷ், என்னுடைய அம்மா இப்பள்ளிக்கு ஆசிரியராக மாறுதலாகியுள்ளதால்
நாங்கள் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு இடம் பெயர்ந்துள்ளோம் எனக் கூறினான். அடுத்ததாக
சுரேஷ் தன் அறிமுகத்தின் பொழுது என் பெயர் சுரேஷ், புதுப்பட்டி கிராமத்தில் இருந்து
வருகிறேன். இவ்வூர் இப்பள்ளியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மேலும் ஆசிரியரை நோக்கி, "அம்மா இராஜேஷ் கூறிய 'இடம் பெயர்தல்' என்ற வார்த்தைக்கு
பொருள் என்னவென்று கூறுங்கள்" எனக் கேட்டான். ஆசிரியர் நன்று. இப்பாடத்தில் 'இடம்
பெயர்தல் பற்றி விரிவாக விளக்குகிறேன் எனக் கூறினார்.