Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | உலக நகரமயமாக்கலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - உலக நகரமயமாக்கலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation

   Posted On :  12.06.2023 06:01 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

உலக நகரமயமாக்கலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

உலக நகரமயமாக்கலின் வளர்ச்சி ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

உலக நகரமயமாக்கலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

உலக நகரமயமாக்கலின் வளர்ச்சி ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

பண்டைய காலம்

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே நகர மையங்கள் உருவாகத் தொடங்கின. (10,000 ஆண்டுகளுக்கு முன்பு) இக்கால கட்டத்தில் தொடக்ககால மனிதர்கள் தாவரங்களையும் விலங்குகளையும் வளர்க்கத் தொடங்கினார்கள். இக்காலகட்டத்தில் நிரந்தரக் குடியிருப்புகள் வளர்ச்சியடையத் தொடங்கின. எகிப்து, கிரேக்கம் மற்றும் இந்திய ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளில் வேளாண் சார்ந்த சமூகங்கள் தோன்றி அவை நகர்ப்புறம் சார்ந்த சமூகம் மற்றும் நகர மையங்களாக உருவாகின. உணவு தானிய மிகை உற்பத்தியே நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. மெசபடோமியாவின் உர் மற்றும் பாபிலோன், எகிப்தில் உள்ள தீப்ஸ் மற்றும் அலெக்சாந்திரியா, கிரேக்கத்தின் ஏதென்ஸ், இந்தியாவின் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகியவை உலகின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த குறிப்பிடத்தக்க நகரங்களாகும். 

நகரம் பண்டைய காலத்தில் நகர்ப்புற மையங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகிய இரு பெரும் காலனியாதிக்க காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏஜியன் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டன. கிரேக்க காலனியாதிக்ககாலங்களில் வர்த்தக விரிவாக்கம் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களை தோற்றுவித்தது.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா நாடுகளில் 2018-2050ஆம்  ஆண்டுகளுக்கிடையிலான காலத்தில் உலக நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் 35 சதவீதத்தைப் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் இந்தியா 416 மில்லியன் நகர்ப்புற மக்கள் தொகையையும், சீனா 255 மில்லியன் மக்கள் தொகையையும், நைஜீரியா159மில்லியன் மக்கள் தொகையையும் நகர்ப்புறவாசிகளாக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. (உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு, 2018)



இடைக்காலம்

இது 11ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தைக் குறிக்கிறது இந்தக் காலக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடல் கடந்த வணிகம் அதிகரித்தது. இவ்வணிக வளர்ச்சி, பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட காலத்திற்குப் பின் ஐரோப்பிய நகரங்கள் மற்றும் மாநகரங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸ், இலண்டன், ஜெனிவா, மிலன் மற்றும் வெனிஸ் ஆகிய முக்கிய நகரங்கள் ஐரோப்பாவில் காணப்பட்டன.


நவீன காலம்

இக்கால கட்டம் பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. இது நகரமயமாக்கலின் மூன்றாம் கட்ட வளர்ச்சியைக் குறிக்கிறது. பத்தொன்பதாம்  நூற்றாண்டில் உருவான தொழிற்புரட்சி, நகரங்கள் மற்றும் மாநகரங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது. ஐரோப்பியர்களின் நகர்ப்புற நாகரிகத்தினால் அதிக எண்ணிக்கையிலான புதிய நகரங்கள் வட அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனில் உருவாயின. நவீன தொலைத் தொடர்பு, போக்குவரத்து மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட புதிய வணிக கடல் வழித்தடங்களின் வளர்ச்சி, வணிகத்தளங்களையும் நகர்ப்புற பகுதிகளையும் வலுப்படுத்தின.

சமீபத்திய நகரமயமாக்கலின் வளர்ச்சி ஆப்பிரிக்க கண்டத்தில் நன்கு தென்படுகிறது. 1930ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உள்ள நகரங்கள் கடற்கரையை ஒட்டியே இருந்தன. ஆனால் தற்பொழுது ஐம்பது நகரங்கள் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. கெய்ரோ, நைரோபி , மும்பசா, புலவையோ, டூலா, அபிடியான், லாகோஸ், அக்ரா , அடிஸ் அபாபா, லிப்போல்டுவில், லவுண்டா, கேப்டவுன், நட்டால், பிரிட்டோரியா போன்றவை ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்களாகும். நவீன கால துரித நகரமயமாக்கம் உலகம் முழுவதிலும் மக்கள் தொகையை மறு பரவலுக்கு உட்படுத்துகிறது.


உங்களுக்குத் தெரியுமா?

1950இல் உலகின் மக்கள் தொகையில் 30 சதவீதம் நகர மக்கள் தொகையாகும். 2050இல் இவை 68 சதவீதமாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது (ஆதாரம்: 2018 உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு)



Tags : Chapter 4 | Geography | 8th Social Science அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation : Origin and Growth of World Urbanisation Chapter 4 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் : உலக நகரமயமாக்கலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி - அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்